மார்க்சிய படிப்பு வட்டம்
செங்கொடி மையம்
வகுப்பு எண்: 18
நாள்: 06:02:2021
அரசியல் பொருளாதாரம்
கூலி – விலை – லாபம்
அறிமுகம்:
மார்க்சியம் “பொருளாதாரத்தை,” வெருமனே “வர்த்தகம் மற்றும் வாணிபமாகவோ” அல்லது “மூலதன பரிமாற்றமாகவோ” ஆன முதலாளித்துவ பாணியீயிலான தனித்துவிடப்பட்ட துறையாகப் பார்ப்பதில்லை. பொருளாதாரத்தை, “அரசியல் பொருளாதாரம்” என்றே மார்க்சியம் சொல்கிறது. பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய மூன்றையும் அது தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக, இவை மூனறும் ஒன்றை ஒன்று சார்ந்தும் இயங்கியும் மாறியும் வளர்ந்தும் வருகின்றன என்ற இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பார்வையை மார்க்சியம் முன்வைக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையில், உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவாக, வர்க்கப் பகைமையும் வர்க்கப் போராட்டமும் வர்க்க விடுதலை எனும் புரட்சியும் குறித்த தவிர்க்க இயலாத பகுப்பாய்வு அரசியல் பொருளாதாரத்தின் ஊடாக இன்றியமையாதது ஆகிறது.
மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, மூலதனம் நூலுக்கு முன்பாக மார்க்ஸ் அவர்கள் தொகுத்த குறிப்புகளால் ஆன 'கிராண்டைஸ்-Grandisse,’ மார்க்ஸின் மூலதனம், ஏங்கல்ஸின் 'அரசியல் பொருளாதார விமர்சன வரைவு( An Outline of the Critique of Political Economy)’ முதலிய ஆக்கங்கள் “மார்க்சீய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளாக உள்ளன என்பதோடு அதன் தோற்றம் 1840-களைச் சார்கிறது.
மார்க்சிய அணுகுமுறையிலான அரசியல் பொருளாதார பகுப்பாய்வும் சமூக வரலாற்று ஆய்வுகளும் வர்க்கப் போராட்டத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் முன் வைப்பதால், “மூலதனம்”, “உழைப்பு” ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன.
“மூலதனம்” என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளான, “உற்பத்திச் சாதனங்களை( Means of Production)” சொந்த உடைமையாகக் கொள்வதைக் குறிக்கிறது. “உழைப்பு” என்பது, “சுதந்திரமான கூலித் தொழிலாளர்களை( Free Wage Labourer), “பாட்டாளிகளை”க் குறிக்கிது.
ஆம், முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளி ஒருவகையில் சுதந்திரமானவரே; உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அவருக்குக் கிடையாது என்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம், அடிமை முறைகளிலும் நிலவுடைமைச் சமூகத்திலும் உள்ளதுபோல் இல்லாமல், உழைப்பைச் செலுத்துபவர்முதலாளிக்கு அடிமையில்லை. அவர் தனது உழைப்புச் சக்தியை யாரிடமும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம் படைத்தவர். இந்தச் சுதந்திரம் முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகளில் கிடையாது. இஇதனால், தொழிற்சங்கம் அமைத்துத் தனது ஒட்டுமொத்த உரிமைகளை முன்னெடுக்கும் சாத்தியத்தை தொழிலாளி பெறுகிறார். இவ்வாறாக, மார்க்சியம், பொருளாதாரத்தை அரசியல் அதிகாரமாக வளர்த்தெடுத்து சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறது.
கூலி-விலை-லாபம்
- கார்ல் மார்க்ஸ்
முகப்பு:
1865-ல் முதலாம் அகிலத்தில் மார்க்ஸ் அவர்கள் ஆற்றிய உரையை அவரது மகள் எலினார் மார்க்ஸ் அவெலிங் 1898-ல் மதிப்பு-விலை-லாபம் எனும் தலைப்பில் தனிப் பிரசுரமாக வெளியிட்டார். பின்னர் கிடைத்த சில பகுதிகளும் முகவுரையும் தொகுக்கப்பட்டு அனைவராலும் பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைப்பான கூலி-விலை-லாபம் என்ற பெயரில் திரு. எட்வர்ட் அவெலிங் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
முதலாளித்துவ உற்பத்திமுறையின் கூலி, உபரி மதிப்பு, சரக்குகளின் விலை, லாபம் ஆயவற்றைத் தோழர் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் விரிவாக ஆய்வு செய்கிறார். அதே வேளையில் சாதாரண தொழிலாளர்களும் எளிய உதாரணங்கள் மூலமாக புரிந்துகொள்ளுமாறு இந்நூல் அமைந்துள்ளது. ஒரு வகையில், இந்நூல் மூலதனம் முதல் தொகுதியின் சாரமான சுருக்கம் எனலாம்.
மேலும், அகிலத்தின் பொதுக்குழு உறுப்பினரான திரு. ஜான் வெஸ்டனின் கருத்தான: கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வினால் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, தொழிற்சங்கங்களால் தீங்கான விளைவே ஏற்படுகின்றன என்பவற்றிற்கு பதிலாகவும் அது தவறான வாதம் என்றும் மார்க்ஸ் அவர்கள் வலியுறுத்துவதே அவரது உரையாகிறது. இது இரண்டு நாள் சொற்பொழிவாகும்.
மார்க்ஸ் அவர்களின் முன் குறிப்பு.....சொற்பொழிவிற்குள் நுழைவதற்கு முன்வைப்பாக.........
1) ஐரோப்பா கண்டம் முழுவதும் கூலி உயர்வுக்கான வசீகர முழக்கங்களும் வேலை நிறுத்தங்களும் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சூழலில் சர்வதேச சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்போர், இந்த தலையாய பிரச்சினையில் ஐயம்திரிபறவும் உளச்சான்றாகவும் கருத்து கொண்டிருக்க வேண்டும்.
2) திருவாளர் வெஸ்டன், தொழிலாளர்களின் நலனுக்காகவே என்ற நினைப்பில் தன் கருத்தை முன் வைக்கிறார். இந்தக் கருத்துக்கள் தொழிலாளர் மத்தியில் சிறிதும் செல்வாக்கில்லாதவை என்று தெரிந்தும் முன்வைக்கிறார். இந்த மனத்துணிவைப் போற்றுவதோடு, பூசி மெழுகாத எனது அறிக்கை மூலமாக மெழுகாத எனது ஆய்வின் சரியானவற்றை ஏற்பதோடு, அவரது கருத்துக்களின் தற்போதைய வடிவில் கொள்கை ரீதியாக தவறானவை என்றும் நடைமுறை ரீதியாக ஆபத்தானவை என்பதை எனது உரையின் இறுதியில் அவர் அறிந்துகொள்வார்.
சொற்பொழிவு:
தலைப்பு:1) உற்பத்தியும் கூலியும்
வெஸ்டன்: 1) தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று; மாறாத அளவு மற்றும் மாறாத பரிமாணம்.
2) மெய்யான கூலியின் அளவு, அதாவது, அதைக்கொண்டு வாங்க முடிகிற சரக்கின் அளவால் கணக்கிடப்படும் கூலியின் அளவு, மாறாப் பரிமாணம் கொண்டதொரு தொகையாகும்.
முதல் கருத்து, சந்தேகமின்றி தவறானது. காரணம்; அ) ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியின் திரட்சியும் அவற்றின் மதிப்பும் அதிகரித்து வருவது கண்கூடு( நாட்டின் ஒட்டுமொத்த உற்த்தியான GDP அதிகரித்து வருவதை நாம் அறிவோம்)
ஆ) அதிகரித்துவரும் சந்தை சுழற்சிக்கு தேவையான பணத்தின் அளவும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது( ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வரவு-செலவு திட்டத்தின் மதிப்பீடுகளே நமக்கு சான்று).
வெவ்வேறு ஆண்டுகளின் முடிவில் உற்பத்தியின் அளவை ஒன்றோடொன்று ஒப்பிட்டாலும் ; ஆண்டின் ஒவ்வொரு சராசரி உற்பத்தி நாட்களுக்கான உற்பத்தி அளவை ஒப்பிட்டாலும் அது அதிகரித்துக்கொண்டே இருக்கும். அது மாறிலி அல்ல, மாறும் பரிமாணமே.
உற்பத்தி அளவின் மாற்றங்களுக்கான காரணங்கள் பின்வருவனவே. அவை:
1) மக்கள் தொகை
2) மூலதனத் திரட்டல்
3) உழைப்பின் உற்பத்தித் திறன்.
இதனால், கூலி வீதத்திலும் மாற்றம் ஏற்படும்.
இதனால், உற்பத்தி நிலைமைகளில் பின் விளைவுகள் மாறலாம் – எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கூலி உயர்வு தன்னளவில் உற்பத்தியின் அளவை உடனடியாக மாற்றிவிடாது.
.நிகழ்காலத்தின் நிலைமைகளில் இருந்தே, இந்தக் கூலி வீத உயர்வு தொடங்கும். தேசிய உற்பத்தி அளவு நிலையாக இல்லாமல் கூலி உயர்வுக்கு முன்னதாக, மாறக்கூடியதாக இருந்தால் கூலி உயர்வுக்குப் பின்னும் அது மாறும்.
ஒப்புக்காக, தேசிய உற்பத்தியின் மொத்த அளவு மாறவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அதன் உறுப்புகளான கூலியும் லாபமும் மாறக்கூடியவையே. எவ்வாறெனில், மாறாத உற்பத்திக்குள் கூலி+லாபத்தின் கூட்டுத் தொகை ₹100 எனக் கொண்டால், கூலி ₹60 ஆகவும் லாபம் ₹40 ஆகவும் கொள்ளலாம். பிறிதொரு நிலைமையில் கூலி ₹40 ஆகவும் லாபம் ₹60 ஆகவும் மாறுவதை உற்பத்தியின் வரம்பு தடுக்காது. வெஸ்டன் இதை அறிந்தாலும் அடித்துக் கூறுவதன் மூலமே கூலியின் அளவு நிலையாது என நிரூபிக்க முயல்கிறார்.
வாதத்திற்காக, அவரது கூற்றை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில், தொழிலாளர் தனக்கான சிறிய அளவிலேனும் கூலி உயவுக்காகப் போராடி அதைப் பெறுவதும் இதைப் போலவே முதலாளியும் தற்காலிக கூலிவெட்டைத் திணிப்பதும் சாத்தியமாக இருக்கிறது. அதோடு கூடவே, கூலி அளவு நிலையாது எனக்கொள்ளும்போது கூலி வெட்டும் தொடர்ந்து எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை வெஸ்டன் மறுக்கவில்லை. அதே வேளையில், முதலாளிகள் தொடர்ந்து கூலி வெட்டைத் திணிக்கவே முயல்கிறார்கள் என்பதை வெஸ்டனும் அறிவார். எனவே, கூலி மாறாக் கோட்பாட்டின் படியும் கூலி வெட்டும் எதிர்வினையேற்படுத்தி தன்னை சமன்படுத்திக்கொள்ளவே செய்யும். அவ்வாறாகவே கூலி வெட்டிற்கு எதிரான தொழிலாளர் நடவடிக்கை சரியானதே. ஆகவே, கூலி உயர்வைப் போராடிப் பெறுவதில் தொழிலாளர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள். ஏனெனில், கூலிவெட்டுக்கு எதிரான ஒவ்வோர் எதிர்வினையும் கூலி உயர்வுக்கான நடவடிக்கையே ஆகும். வெஸ்டனின் கோட்பாட்டின் படியுங்கூட தொழிலாளர் ஒற்றுமையும் போராட்டமும் நியாயமானதே.
எனவே, இந்த முடிவை அவர் மறுத்தால், இதற்கு அடிப்படையான அவரது கருதுகோளான கூலி நிலைத்த பரிமாணம் கொண்டதென்பதைக் கைவிடவேண்டும்.
அல்லது, மறுபுறத்தில் அவர் கூற்றுப்படி கூலியானது உயரமுடியாது, உயரக் கூடாது என்றபோதும் மூலதனம் கூலியைக் குறைக்க விரும்பும் போதெல்லாம் அது குறைய முடியும், குறைய வேண்டுமென்று சொல்லவேண்டும்.
இறைச்சிக்கு பதிலாக கிழங்கையும் கோதுமைக்குப் பதிலாக ஓட்ஸையும் கொடுப்பதையே முதலாளி மகிழ்ச்சியாக வரவேற்கிறார். எனவே, முதலாளியின் விருப்பத்தை அரசியல் பொருளாதாரத்தின் விதியாக வெஸ்டன் ஏற்கவேண்டும்; பணிந்துபோக வேண்டும்.
மேலும், கூலி வீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுவது கண்கூடு. அப்படியானால், அதிக கூலிதரும் அமெரிக்க முதலாளியின் விருப்பத்திற்கும் குறைந்த கூலி தரும் இங்ககிலாந்து முதலாளியின் விருப்பத்திற்குமான வேறுபாட்டை வெஸ்டன் விளக்க வேண்டும். இந்த முறையினால், பொருளாதார ஆய்வு மட்டுமின்றி எல்லா ஆய்வுகளும் நிச்சயமாக மிகமிக எளிதாகிவிடும்.
இதன் பிறகும் ஏன் வெவ்வேறு நாடுகளின் முதலாளிகள் வெவ்வேறு விருப்பம் கொண்டுள்ளார்களென நாம் கேட்போம். அப்போது, அவர்கள் விருப்பம் என்பதன் பொருளெல்லையைத் தாண்டி செல்லவேண்டி வரும்.
கடவுள் ஃபிரான்ஸில் ஒன்றை விரும்புகிறார் இங்கிலாந்தில் வேறொன்றை விரும்புகிறார் என பாதிரியா ஒருவர் சொல்லலாம். கடவுளின் விருப்பத்தில் ஏன் இந்த இரட்டை தன்மையென்று நாம் மீண்டும் கேட்போம். அதற்கு, பாதிரியார் வெட்கமின்றி, கடவுள் ஃபிரான்சில் ஒரு விருப்பமும் இங்கிலாந்தில் வேறொரு விருப்பமும் கொண்டிருப்பதையுமே விரும்புகிறார் என விளக்கலாம். ஆனால், பகுத்தறிவாளர் வெஸ்டன் இதுபோன்ற வாதத்தை முன்வைக்க மாட்டாரென நம்புவோம்.
முதலாளியின் விருப்பம் நிச்சயமாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். நாம் செய்ய வேண்டியது என்னவெனில், முதலாளியின் விருப்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதல்ல; அவரின் அதிகாரம் பற்றியும் அந்த அதிகாரத்தின் வரம்புகள் பற்றியும் அந்த வரம்புகளின் தன்மை பற்றியும் கேள்வி எழுப்புவதே ஆகும்.
தலைப்பு: 2)உற்பத்தி, கூலி, லாபம்
வெஸ்டன் அவர்கள் சொற்பொழிவின் சுருக்கம்: “தொழிலாளி வர்க்கம் போராடி, முதலாளி வர்க்கத்தை ₹40-ற்குப் பதிலாக, ₹50-ஐ பணக் கூலியாகக் கொடுக்கச் செய்தால், முதலாளியோ அதற்கு ஈடாக, ₹50 மதிப்பிற்கான சரக்கிற்குப் பதிலாக, ₹40 மதிப்புள்ள சரக்கையே தருவார். அதாவது, ₹40 கொடுத்து வாங்கிய அதே சரக்கின் அளவிற்குப் பதிலாக, தொழிலாளி வர்க்கம் ₹50-ஐக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், கூலியின் அளவு நிலையானது.”
அப்படியானால், நாம் கேட்பது, எதற்காக, கூலியின் பணமதிப்பு ₹40-ஆக நிர்ணயிக்கப்பட்டது? அது, ஏன் ₹30-ஆகவோ ₹20-ஆகவோ நிர்ணயிக்கப் படவில்லை?
கூலியின் வரம்பானது முதலாளியின் விருப்பத்தையோ, அதேபோல் தொழிலாளியின் விருப்பத்தையோ சாராமல், ஒரு பொருளாதார விதியினால் முடிவு செய்யப்படுகிறதெனில், அந்த விதியை எடுத்துக் கூறி அதனை நிரூபித்திருக்க வேண்டும்.
(தோழர் மார்க்ஸ் அவர்கள், இங்கு நிறுவ விரும்புவதை வாசிக்கும் நாம் தெளிவாக, புரிந்துகொள்ள வேண்டும். அது,
1) கூலியின் மாறா நியதிக்கு காரணம், கூலி வீதம் உயர்ந்தாலும் அதன் மதிப்பு மாறா வண்ணம் முதலாளி தனது உற்பத்தியின் விற்பனை விலையைக் கூட்டி விடுகிறார் என்பது வெஸ்டனின் வாதம்.
2) திரு வெஸ்டனின் பகுத்தறிவுக் கொள்கை முதலாளியின் விருப்பத்தின் அடிப்படையில் கூலி வீதம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்காது என்பதால் அவர் பொருளாதார விதிகளின் அடிப்படையில் அவர்தன் கருத்தை விளக்கியிருக்க வேண்டும்.)
குறிப்பிட்ட எந்தவொரு தருணத்திலும் உண்மையில் வழங்கப்பட்ட கூலித் தொகை எப்போதுமே துல்லியமாக, அவசியம் வழங்கப்பட்டே ஆகவேண்டிய கூலித் தொகைக்குச் சமமாய் இருந்துள்ளது, அதிலிருந்து விளகிச் செல்லவில்லை எனவும் நிரூபித்திருக்க வேண்டும்.
கூலித் தொகையின் குறிப்பிட்ட வரம்பு வெறுமனே, முதலாளியின் விருப்பம் அல்லது அவரது பேராசையின் வரம்புகளைச் சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறதெனில், அது தற்செயலான வரம்பாகும்; அதில் அவசியமானதென்று ஏதுமில்லை. அவ்வரம்பு, முதலாளியின் விருப்பத்திற்கோ அல்லது விருப்பத்திற்கு எதிராகவோ மாற்றப்படலாம்.
ஒரு கிண்ணத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் சாப்பிடுவதற்கான சூப் குறிப்பிட்ட அளவு உள்ளது. அவர்கள் சாப்பிடும் கரண்டியின் உருவ அளவைப் பெரிதாக்குவதன் மூலம் சூப்பின் அளவு கூடிவிடாது – இது வெஸ்டன் தன்னுடைய கோட்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்தது.
இது சற்றே சிறுபிள்ளைத் தனமானது. ரோமானிய மேட்டுக் குடியினருக்கு எதிராக ரோமானிய மக்கள் போராடியபோது அவர்களைப் பார்த்து மேட்டுக் குடியினரான அக்ரிப்பா என்பவர் “மேட்டுக்குடியாகிய வயிறுதான், சாமானிய மக்களாகிய உடலுறுப்புகளை ஊட்டி வளர்க்கிறது” என்றார். ஆனால், ஒரு மனிதனின் வயிற்றை நிரப்புவதன் மூலம் வேறொரு மனிதனின் உறுப்புகளை நீங்கள் ஊட்டி வளர்க்கிறீர்கள் என்பதை அக்ரிப்பா விளக்கத் தவறிவிட்டார். (மார்க்ஸ் இங்கு, முதலாளித்துவ வளர்ச்சியையும் மறு உற்பத்தியையும் குறிப்பதாகவும் முதலாளித்துவம் தனக்கெதிராக தானே தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குவதையும் அர்த்தப்படுத்தலாம்).
தொழிலாளர் உண்ணும் கிண்ணம் தேசிய உழைப்பின் ஒட்டுமொத்த உற்பத்தியால் நிரம்பியிருக்கிறது. அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதை தடுப்பது எது? கிண்ணம் சிறியதாக இருப்பதோ, அதிலுள்ள உணவின் பற்றாக்குறையோ அல்ல. அவர்களின் கரண்டி சிறிதாக இருப்பதுதான் என்பதைத் தன் பங்கிற்கு திருவாளர் வெஸ்டனும் மறந்துவிட்டார்.
₹40-ற்கான பொருளை ₹50-ற்கு கொடுக்க எந்த சூழ்ச்சி முதலாளிக்கு கைகொடுக்கிறது? அவர் விற்கும் சரக்கின் விலையை உயர்த்துவதன் மூலம் இது சாத்தியம். ஆனாலும், சரக்குகளின் விலை உயர்வோ, சரக்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களோ, ஏன், சரக்குகளின் விலையோகூட முதலாளியின் வெறும் விருப்பத்தைச் சார்ந்துள்ளதா? அல்லது, இதற்கு மாறாக, அவ்விருப்பத்தை நிறைவேற்றுவதற்குக் குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் தேவைப்படுகின்றனவா? அவ்வாறு இல்லையெனில், (சரக்குகளின்) சந்தை விலையில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமும் இடையறாத ஊசலாட்டங்களும் தீர்க்கமுடியாத புதிராகிவிடும்.
உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, ஈடுபடுத்தப்பட்ட மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் அளவிலுமோ, உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கணக்கிடும் பணத்தின் மதிப்பிலோ எவ்வித மாற்றமும் இல்லை.(இந்நிலைமைகள், வெஸ்டனின் கருதுகோலின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது). ஆனால், கூலி வீதத்தில் மட்டும் மாற்றம் ஏற்படுவதாக நாம் வைத்துக்கொள்கிறோம்.
அப்படியெனில், அந்தக் கூலி உயர்வு, சரக்குகளின் விலையை எவ்வாறு பாதிக்கமுடியும்?
அந்தச் சரக்குகளுக்கானத் தேவைக்கும்(Demand) அச்சரக்குகளின் வரத்துக்கும்(Supply) இடையேயுள்ள உண்மையான விகிதப்பொருத்தத்தைப் பாதிப்பதால் மட்டுமே(விலையில் மாற்றம் நிகழும்).
ஒட்டுமொத்த நிகழ்வாகப் பார்த்தால், தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை 1)ஒட்டுமொத்த நிகழ்வாகப் பார்த்தால், தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடுகிறது அல்லது செலவிட்டே ஆகவேண்டும். எனவே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வானது, அத்தியாவசியப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். இதன் விளைவாக, அப்பொருட்ளின் சந்தை விலை அதிகரிக்கும். இந்த அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளிகள், கூலி உயர்வுக்கு ஆகும் கூடுதல் செலவினை அவர்களது சரக்குகளின் சந்தை விலையை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டுகிறார்கள்.
2)இன்னொரு பக்கத்தில், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யாத, ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்களது நிலையென்ன?
இவர்களின் எண்ணிக்கையும் குறைவானதல்ல. தேசிய உற்பத்தியில் 3-ல் 2 பங்கை மக்கள் தொகையில் 5-ல் 1 பங்கினர் நுகர்கின்றனர். (வேறொரு கணக்கின்படி, அதாவது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்தின்படி இது 7-ல் 1 பங்கு எனவும் ஆகிறது). இந்த விகிதங்களின்படி, தேசிய வருவாயை சரிகட்ட பெருமளவில் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் அல்லது இறக்குமதிக்காக மூலதனப் பரிவர்த்தனை செய்யவேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருட்களிலேயே, முதலாளிகளின் அடியாட்களுக்காகவும் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான குதிரை, பூனை இன்ன பிறவற்றிற்காகவும் வீணடிக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவு.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது இதுபோன்ற விரயங்கள் கட்டுக்குள் வருகின்றன என்பது நமது அனுபவமாகும்.
2(அ) பொதுவான கூலி உயர்வின் விலைவாக, லாப வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியை, ஆடம்பப்பொருள் உற்பத்தியாளர்களால் சரிகட்ட முடியாது.ஏனெனில், இப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்காது. எனவே, அவர்களது வருமானம் குறைந்துவிடும். இந்தக் குறைந்த வருமானத்தைக் கொண்டே, விலை அதிகரித்த அத்தியாவசியப் பொருளுக்கு முன்பைவிடக் கூடுதலாகச் செலவிட வேண்டும். இவ்வாறாக, ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும், விலை வீழ்ச்சி அடையும். குறிப்பாக, இந்தத் தொழிற்கிளைகளில், கூலியினால் ஏற்பட்ட நேர்விகிதத்தின் அடிப்படையிலும் கூடவே, பொதுவான கூலிவீத உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஆடம்பரப் பொருட்களின் விலை வீழ்ச்சி இவை அனைத்தின் ஒட்டுமொத்த அடிப்படையிலும் லாப வீதம் வீழ்ச்சியுறு..
3) தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனங்களுக்கான சராசரி லாபவிகித மாற்றம் பின்வரும் பொதுவான விளைவுகளை எப்போதும் ஏற்படுத்துகின்றன. அவை:
i) மூலதனமும் உழைப்பும் குறைந்த ஆதாயம் தரும் துறைகளிலிருந்து அதிகம் ஆதாயம் தரும் துறைக்கு மாற்றப்படும். இந்த மாற்றம் எதுவரை நிகழுமென்றால், தொழிற்துறையின் ஒரு பிரிவில் அதிகரிக்கும் தேவையின் விகிதத்திற்கு ஏற்ப வரத்து அதிகரித்து, பிற தொழிள்பிரிவுகளில் தேவையின் குறைவிற்கு ஏற்ப வரத்து வீழ்ச்சி அடையும்வரை இந்த நிகழ்வு தொரும்.
இத்தகைய மாற்றம் காரணமாக, தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பொதுவான லாப விகிதம் மீண்டும் சமப்பட்டுவிடும்.
ii) பல்வேறு சரக்குகளுக்கான தேவைக்கும் வரத்துக்கும் இடையிலான விகிதத்தில் ஏற்பட்ட சாதாரண ஒரு மாற்றத்தில் தொடங்கியே, அனைத்து குழப்பங்களும் உருவானதால், காரணம் முடிவுற்றதும் விளைவும் முடிவுற்றுவிடும்.
iii) விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பிச் சமநிலை எய்தும்.
iv) கூலி உயர்வின் விளைவாக, லாபவீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது, சில தொழிற்பிரிவுகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல் தொழிற்துறை முழுமைக்கும் பொதுவானதாய் ஆகிவிடும்.
நமது அனுமானத்தின்படி, உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட அளவிலான மொத்த உற்பத்தியின் வடிவம் மாறியிருக்கும்.
அ) உற்பத்தியின் ஒரு பெரும் பகுதி அத்தியாவசியப் பொருட்களின் வடிவிலும் ஒரு சிறு பகுதி ஆடம்பரப் பொருட்களின் வடிவிலும் இருக்கும்.
ஆ) வேறுவகையில் சொல்வதானால், ஒரு சிறுபகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்பட்டு, அவற்றின் மூலவடிவிலேயே நுகரப்படும்.
இ) இன்னுமொரு வகையில் சொல்தெனில், உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்குப் பதிலாக அத்தியாவசியப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்படும்.
ஆகவே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு, சச்ந்தை விலைகளின் தற்காலிகக் குழப்பத்திற்குப் பிறகு, சரக்குகளின் விலைகளில் எவ்வித நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், லாப வீதத்தின் பொதுவான வீழ்ச்சியில்தான் போய் முடியும்.
மார்க்ஸ், தனது முந்தைய வாதத்தில், மொத்தத உபரிக் கூலியும் அவசியப் பொருட்களுக்காகவே செலவிடப்படும் என்ற அனுமாத்துடன் பேசினார் என்றால் அது, திரு. வெஸ்டன் அவர்களின் கருத்துக்கு சாதகமாக இருக்கட்டும் என்பதற்காகத்தான்.
உபரி கூலித் தொகை, இதற்குமுன் தொழிலாளர்களின் நுகர்வில் இடம்பெறாத பொருட்களுக்குச் செலவிடப்பட்டிருக்குமெனில், அவர்களின் வாங்கும் சக்தி உண்மையாகவே அதிகரித்துள்ளது என்பதே பொருள். எனினும், தொழிலாளர்களின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பானது அவர்களது கூலி உயர்வினால் மட்டுமே பெறப்பட்டதால், அது முதலாளியின் வாங்கும் சக்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குத் துல்லியமாகச் சம அளவில் இருக்க வேண்டும். எனவே, சரக்குகளின் ஒட்டுமொத்தத் தேவை அதிகரிக்காது.
ஆனால், அந்தத் தேவையில் அடங்கியுள்ள பகுதிக் கூறுகள் மாறியிருக்கும். அதாவது, ஒருபுறம் ஏற்படும் அதிகரித்த தேவையை, மறுபுறம் ஏற்படும் குறைந்துவிட்ட தேவை ஈடுகட்டும்.
இவ்வாறாக, ஒட்டுமொத்த தேவையானது நிலையானதாக இருக்கையில், சரக்குகளின் சந்தை விலையில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிட முடியாது.
எனவே, இரண்டில் எது சரியென்னும் குழப்பத்தில் நாம் வந்து நிற்கின்னறோம். ஒன்று, உபரியாகப் பெற்ற கூலி அனைத்து நுகர்வுப் பொருட்களுக்கும் சமமாகச் செலவிடப்படுகிறது என அனுமானிக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில், தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் ஏற்பட்ட விரிவடைந்த தேவை, முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஏற்பட்ட சுருங்கிய தேவையால் ஈடுகட்டப்பட வேண்டும்.
அல்லது, சில பொருட்களுக்காக மட்டும் உஉபரிக் கூலி செலவிடப்பட்டு, அவற்றின் சந்தை விலை உயர்கின்றன எனக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, தொழிற்துறையின் சில கிளைகளில் ஏற்படும் லாபவீத அதிகரிப்பும் வேறு சில கிளைகளில், ஏற்படும் லாபவீத வீழ்ச்சியும் மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் பகிர்மாணத்தில் மாற்றம் உண்டாக்கும். தொழிற்துறையின், ஒரு பிரிவில் ஏற்படும் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, வரத்தை அதிகரித்து, பிற பிரிவுகளில் ஏற்படும் தேவையின் சுருக்கத்துக்கு ஏற்ப, வரத்தைக் குறைக்கும் வகையிலும் இம்மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
ஒரு அனுமானத்தின்படி, சரக்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. மேற்றொன்றின்படி, சந்தை விலைகளின் சில ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகள் முந்தைய மட்டத்திற்குச் சரியும்.
இரண்டு அனுமானங்களின்படியுமே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான மாற்றம்-உயர்வு, இறுதியாக, லாப வீதத்தின் வீழ்ச்சியில்தான் முடியும்.
திருவாளர் வெஸ்டன் அவர்கள் தன் பார்வையை விவசாய கூலி நிலவரம் பக்கமாகத் திருப்பும்போது, கற்பனையான 100 சதவீத உயர்வையும் அதனால், இங்கிலாந்தில் ஏற்படப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரிப்பு, இதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வின் அபாயகரமான விளைவுகளைப் பற்றியும் பேசுகிறார். உண்மையில், கூலி வீத உயர்வு என்பது அதன் பரிமாணத்தை சதவீதத்திற்குள் அடக்குவது என்பதுபற்றி நாம் விவாதிக்க ஏதுமில்லை. மேலும், மூலதனம், உழைப்பு இவற்றின் உறவுகள் ஒத்துப் போகின்ற, ஒப்பீட்டளவில் விவசாய உற்பத்தி குறைவாயுள்ள அமெரிக்காவில் சராசரி கூலியின் அளவு, இங்கிலாந்தைவிட இரண்டு மடங்கு அதிகம் எனும்போது, இங்கிலாந்திற்கு அபாயமணி அடிப்பது உண்மையான பிரச்சினையைத் திசை திருப்பத்தான்.
கூலி உயர்வின் பரிமாணம் என்பது ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் நிலவுகின்ற, சூழ்நிலைகளைச் சார்ந்தும் அவற்றிற்கு ஏற்பவுமே இருந்தாக வேண்டும். நாம் இங்கு ஆய்வு செய்யவேண்டியது, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு, தொழிற்துறை மற்றும் விவசாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே.
திரு. வெஸ்னின் 100 சதவீத கூலி உயர்வு என்ற கற்பனையான கூற்றை புறந்தள்ளிவிட்டு, 1849 மற்றும் 1859-ற்கு இடையிலான மெய்யான கூலி உயர்வையும் அதன் விளைவுகளையும் ஆதாரத்துடன் காண்போம்.
1848-ல் நிறைவேற்றப்பட்ட 10 மணி நேர(உண்மையில் 10 ½ மணி நேர)ச் சட்டம் இங்கிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மாற்றமாகும். இது, இங்கிலாந்து நாடு, உலகச் சந்தையில் கோலோச்சுவதற்கான முன்னணி தொழிற்பிரிவுகளில் திடீர், கட்டாய கூலி உயர்வை ஏற்படுத்தியது. அன்றைய பொருளாதார அறிஞர்களான Dr. யூரியும் பேரா. சீனியரும் இந்தச் சட்டம் இங்கிலாந்து தொழிற்துறைக்கு சாவுமணி அடித்துவிடும் என்ற வகையில், திரு. வெஸ்டனைவிடக் கூடுதலாக, அன்று ஆதாரங்களோடு நிரூபித்ததோடு ஏனைய குட்டி முதலாளிகளும் அக்கருத்துக்களைப் பரப்பினர்.
இது, சாதாரண கூலி உயர்வு மட்டுமல்ல, ஈடுபடுத்தப்படும் உழைப்பின் அளவைக் குறைப்பதைத் தனது அடிப்படையாகக் கொண்டதெனவும் முதலாளி தன் லாபத்தைப் பெறுகின்ற கடைசி ஒரு மணி நேரம் என்பதால் மூலதனத் திரட்டல் குறைவும் விலைவாசி ஏற்றமும் சந்தைகள் இழப்பும் உற்பத்தி வீழ்ச்சியும் இவற்றின் பின் விளைவாக, கூலியின்மீது எதிர் வினையும் ஏற்பட்டு, முடிவாக, சர்வநாசம் நிகழும் என்றனர்.
1792-ல் ஃபிரான்சில் மாபெரும் ஃபிரென்ச் புரட்சியின்போது கொண்டுவரப்பட்ட உயர்ந்தபட்ச சட்டம்( Maximum Law) எனும் அத்தியாவசியப் பொருட்களுக்கான திட்டவட்டமான உயர்ந்தபட்ச விலை வரம்புகளையும் திட்டவட்டமான கூலி வீதங்களையும் நீர்ணயித்த சட்டத்தின் விளைவுகளை விஞ்சிவிடும் என்றனர்.
ஒரு வகையில், அவர்கள் கூறியது சரிதான். வேலை நாளின் நேரம் குறைக்கப்பட்டபோது, ஆலைத் தொழிலாளர்களின் பணக்கூலி உயர்ந்து; ஆலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் அதிகரித்தது; அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்தன; தொழிலாளர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது; அவர்களுடைய சரக்குகளுக்கு இதுவரைக் கண்டிராத அளவுக்குச் சந்தைகள் விரிவடைந்து முன்னேற்றம் கண்டன.
பின்னாளில், 1860-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற விஞ்ஞான மேம்பாட்டுக் கழகக் கூட்டத்தில் பேசிய திரு. W. நியூமேன் என்பவர் தனது மற்றும் Dr. யூரி மற்றும் பேரா. சீனியர் ஆகியோரது கணிப்பு தவறென்றும் மக்களின் உள்ளுணர்வே வென்றது என்றும் ஒப்புக்கொண்டனர்.
வேலை நாளின் பொதுவான வரம்பெல்லையே தொழிலாளி வர்க்க விடுதலைக்கான முதல் தொடக்க நடவடிக்கை என 1816-லேயே தொழிலதிபரும் கற்பனாவாத சோசலிஸ்டுமான திரு. இராபர்ட் ஓவன் பிரகடனப்படுத்தினார். தனது தொழிற்சாலையில், 10 மணி நேர வேலை, நோய்க்கால காப்பீடு மற்றும் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவினார். பின்னாளில், இவை தவறானதாக ஆகவில்லை; முன்னுதாரணமாக ஆயின.
10 மணிச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் விளைவாக, கூலி உயர்வு ஏற்பட்ட அதே காலத்தில்தான் விவசாயக் கூலியிலும் பொது உயர்வு ஏற்பட்டது. சராசரியாக, கூலி வீதம் பொதுவாக உயர்ந்த போதும், சரிபாதி பேர் அவர்களது நிலைமையை அரவே மேம்படுத்திக் கொள்ளவில்லை. கால்வாசிப் பேர் கண்ணுக்குப் புலப்படாத மிகவும் சொற்ப அளவிற்கே மேம்பட்டிருப்பர். மீதமுள்ள கால்வாசிப் பேர் மட்டுமே உண்மையில் மேம்பாடு கண்டிருப்பர். இப்போதும், சராசரி வழியில் நின்று பார்த்தால், அவர்களின் கூலியின் மொத்தத் தொகை 20 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கும். அவர்களை வேலைக்கு வைக்கத் தேவையான, மொத்த மூலதனத்தையும் அவர்கள் உற்பத்தி செய்யும் சரக்குகளின் விலையையும் பொருத்தவரை, சராசரி கூலி உயர்வை அவர்கள் அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டால், எவ்வளவு இருந்திருக்குமோ துல்லியமாய் அவ்வாறே இருக்கும்.
இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் விவசாயத் தொழிலாளர்களின் அடிப்படைக் கூலியானது, வெவ்வேறு மாவட்டங்களில் மிகவும் வேறுபட்டதாக இருந்ததால், கூலி உயர்வும் மிகவும் சமமின்றியே பாதித்தது.
இறுதியாக, ரஷ்யப் போரின் விளைவாகப் புதிய விவசாயிகள் வசிப்பிட வரிகள் போடப்பட்டபோது, அதிலிருந்து தப்ப விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளை இடித்து அவர்களை நிர்கதி ஆக்கியதும் இந்த கூலியுயர்வு காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது.
மொத்தத்தில், மார்க்ஸ் அவர்கள் கூற விரும்புவது, 1849 முதல் 1859 வரையுள்ள காலத்தில் விவசாயக் கூலியின் உயர்வு சராசரி வீதத்தில் ஏறத்தாழ 40 சதவீதம் உயர்வு மட்டுமே ஏற்பட்டது.
நண்பர் வெஸ்டனின் கருத்துப்படி பார்த்தால், 1849 முதல் 1859 வரையிலான காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் கூலி உயர்வினால் மிகப் பெரிய அளவில் விவசாய விளைபொருட்களின் விலை அதிகரித்திருக்க வேண்டும். மாறாக, இங்கிலாந்தின் முதன்மையான விவசாய விளைபொருளான கோதுமையின் சராசரி விலை 1838 முதல் 1848 வரையிலான ஆண்டுகளில் குவார்ட்டர் சுமார் 3 பவுண்டிலிருந்து 1849 – 59 :வரையிலான ஆண்டுகளில் இது 2 பவுண்டு 10 ஷில்லிங்காக வீழ்ச்சி கண்டது. இது 16 சதவீதமாகும். அதே ஆண்டுகளில் 1859-ஐ 1849-வுடன் ஒப்பிட்டால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 73,949 பேர் குறைந்தனர்.
தானியச் சட்டங்கள் – பெரும் முதலாளிகளுக்காக, வெளிநாடுகளிலிருந்து தானிய இறக்குமதியைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை – ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, 1838 - 48-டோடு 1849 - 59-ஐ ஒப்பிட்டால் இறக்குமதி இரண்டு மடங்காக. அதிகரித்தது. இந்த வெளிச்சந்தையின் பிரம்மாண்ட, தொடர் அதிகரிப்பு விலைகளை படுபயங்கர உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். தேவை என்பது வெளிநாடு சார்ந்தோ அல்லது உள்நாடு சார்ந்தோ எப்படி இருந்தாலும் விளைவு ஒன்றுதான். உண்மையில், விளைச்சல் பொய்த்துப்போன சில குறிப்பிட்ட காலத்தைத் தவிர, மற்றெப்போதும் விலை வீழ்ச்சியே நிகழ்ந்தது. அமெரிக்க ஆங்கிலேயர்கள் ரஷ்ய இறக்குமதியை எதிர்தபோது, அது அவர்களுக்கு எதிராக, அமெரிக்காவினுள் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டது.
வெஸ்டனின் வாதத்தை, சாராம்ச ரீதியாக சுருக்கினால், “தேவையில் (Demand) ஏற்படும் ஒவ்வொரு அதிகரிப்பும் எப்போதுமே, ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அளவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. எனவே, அந்த அதிகரிப்பானது தேவைப்படும் பொருட்களின் வரத்தை (Supply) எப்போதுமே அதிகரிக்க முடியாது; அவற்றின் பண விலையை மட்டுமே உயர்த்த முடியும்”.
இப்போது, மிகப் பொதுவான பார்வை நமக்குக் காட்டுவது, “அதிகரித்த தேவை சில வேளைகளில் சரக்குகளின் சந்தை விலைகளைச் சற்றும் பாதிக்காமல் அப்படியே விட்டுவைக்கிறது. வேறு சில வேளைகளில், சந்தை விலைகளில் தற்காலிக உயர்வுக்கும் தொடர்ந்து வரத்து அதிகரிப்பிற்கும் அதனைத் தொடர்ந்து, விலைகள் அவற்றின் தொடக்க நிலைக்குக் குறைந்திடவும் பெரும்பாலான வேளைகளில், தொடக்க நிலைக்கு கீழாக குறைந்திடவும் காரணமாகிறது.
தேவை அதிகரிப்பு, உபரிக் கூலியின் விளைவாக ஏற்பட்டதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பது பிரச்சினையின் நிலைமைகளை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை.
திருவாளர் வெஸ்டனின் கருத்து நிலையிலிருந்து பார்த்தால், கூலி உயர்வு போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளின்கீழ் ஏற்படும் நிகழ்வுப் போக்கை விளக்குவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் பொதுவான நிகழ்வுப் போக்கை விளக்குதும். எனவே, அவரின் வாதம், நாம் ஆய்வு செய்யும் கருப்பொருளுக்கு எந்த விதமான தனிச் சிறப்பான தொடர்பையும் கொண்டிருக்வில்லை.
தேவையின் அதிகரிப்பானது முடிவாக, சந்தை விலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, பொருட்களின் வரத்தை அதிகரிக்கிறது என்பதற்கான விதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில் வெஸ்டனுக்கு இருக்கும் தடுமாற்றத்தையே இது வெளிப்படுத்துகிறது.
ஆக்கம்: பால்ராஜ்.இராதாகிருஷ்ணன், 12:02:2021.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக