உயிர்ப்பெது என்று தன்னையே
கேள்வி கேட்க துப்பின்றி,
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
சகமனிதன்மீது கிஞ்சித்தும் வாஞ்சையின்றி,
கருத்தைப் பொளக்கிறேன் பாரென்று,
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
எது முதல்? பொருளா? கருத்தா?
எது என்றால்,
யோசிக்காமல் பொருளென்றே பகர்ந்தாலும்
முன்வைக்கும் பொருளிலெல்லாம் அறியாமலேயே
கருத்தைத் திணிக்கும்
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
அறிவாளி தானென்ற அகம்பாவத்தில்,
மூலத்தையும் முதலாளியத்தையும்
Cut, paste, forward என்று கருத்து மழைபெய்து
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
சர்வதேசியம், தேசியமெல்லாம் பேசுகிறார்கள்
அதன் நிலைமைதான் கிஞ்சித்தும் புரியவில்லை;
அப்போதும் புரட்சி செய்வேனென்று
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
சிந்திக்கும் அறிவைப் புறந்தள்ளி, வழக்கற்ற
நம்பிக்கையை மட்டுமே கைக்கொண்டு,
அப்பட்டமான சுயநல நோக்கில்
குறுங்குழுக்களை அமைக்கும்
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
வெகுமக்கள் மீதான அளப்பரிய அன்பை
தொடர்ந்து நிலைநாட்டாமல் துண்டு துண்டான
உதிரி நடவடிக்கைகளைச் செய்து பெருந்திரள்
புரட்சியென்று பம்மாத்தாய்
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
செயல் செயல் செயல் என்றால் பொருளாதார அரசியல் தத்துவக் கலவையைக் கைவிட்டு
ஏதோ ஒன்றையோ அல்லது எதுவுமின்றியோ
புத்தகங்கள் வாசிப்பதும்
கூடிப்பேசிக் கதைப்பதுமென்று
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
வர்க்கப் பார்வை எனப் பேசி, சாதியத்தையும் பேசி,
இனவிடுதலையும் பேசி, மதவொழிப்பும் பேசி,
அரசைக் கைப்பற்றுதல் என பேசி,
எது முதலில், எங்கிருந்து தொடங்குவது? எனக் கேட்டால், ஏட்டிக்குப் போட்டியாக எகனைக்கு மொகனையாக மார்க்ஸுக்கும் லெனினுக்குமே
வகுப்பெடுக்கும் வக்கனையாக
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார், வியட்நாமைப்
பார், கியூபாவைப் பாரென்றும்
லெனின், மாவோ, ஹோசிமின், பிடலெல்லாம்
வரலாற்றுப் புருசரென்றும் தேவ கணங்களென்றும்
வீண் பெருமை பேசியே
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
புரட்சி என்றால் வெகுமக்களைத் தட்டியெழுப்பி,
தக்க ஆயுதங்களோடு, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில், கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில் உற்பத்திக் கட்டமைப்புகளையும் பூகோளத்தையும் கைப்பற்றுதல் என்பதை மறந்த இந்திய கம்யூனிஸ்டுகள், பாராளுமன்றத்தையும் சட்டமன்றங்களையுமே கைப்பற்றி,
புரட்சி நடத்திவிடலாம் என பொறுப்பின்றி,
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
ஏற்கனவே பூர்த்தியாகி, தயார்நிலையிலுள்ள
அரசுப் பொறியமைவைப் பாட்டாளிவர்க்கம்
கைப்பற்றி தனது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்த முடியாது என மார்க்சிய மூலவர்கள் ஆய்ந்தறிந்ததைப் பகடி ஆக்க இவர்கள்
சடத்துவத்தை கட்டி அழுகிறார்கள்!
இந்தியப் புரட்சிப் பாதையென்றும் ஆயுதக் கிளர்ச்சியென்றும் அரசியல் கிளர்ச்சி என்றும் சட்டபூர்வமற்றதை சட்டபூர்வமானதோடு இணைப்பது என்றும் போர் தந்திரம், செயல் தந்திரம், திட்டம், திசைவழி எனப்பகர்ந்தவர்கள் இன்று PEACEFUL TRANSFORMATION கூட சாத்தியமென்று பகத்சிங்கின் தோழனாய் இல்லாமல், காந்தியின் சீடராகி
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
ரஃபேல் குவிப்புகளும் அதிநவீன ராடார்களும் சீன, நேபாள கம்யூனிஸ்களுக்கும் பாகிஸ்தான் பாய்களுக்கும் மண்டல மேலாதிக்கத்திற்கு மட்டுமா? இந்தியப்போராளிகளுக்கு அல்லவா?
நூற்றுக் கணக்கான நாட்களாய் வீறுகொண்டு போராடும் லட்சக் கணக்கான விவசாயிகள் சாலைகளிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இந்திய கம்னிஸ்டுகள் வழிகாட்டவும் தலைமைதாங்கவும் வக்கின்றி, முதலாளித்துவ தேர்தல் சகதியில் மூழ்கிய பன்றிகளாய்
சடத்துவத்தைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்!
கட்சிகளும் கட்டெறும்பாக, படை என்று கேட்டால்
சைபால் குப்பியைக் காட்டுபவர்கள், மக்கள் திரளோ
இவர்களை அண்டுவதே இல்லை; அப்படியிருக்க
இவர்கள் ஆள், அம்பு, சேனை, குடி படைகளை
வீழ்த்துவோம் என்ற கற்பனாவாதம் பேசி
சடத்துவத்தைக் கட்டி அழுகிறார்கள்!
எது உயிர்ப்பென்ற கேள்விக்குள்ளேயே பதில் உண்டு:
அது தனிமனித, குழுக்களின் ஆவர்த்தனங்கல்ல –
மாறாக, பெருந்திரள் கூட்டியக்கமும்
மக்கட்படையெனும் பெருஞ்சத்தியும்தான்!
