வெள்ளி, 5 மார்ச், 2021

மார்க்சியம் பயில்வோம் 4

                       மார்க்சிய படிப்பு வட்டம்

                           செங்கொடி மையம்

                                வகுப்பு எண்: 21

                                 நாள்: 27-02-2021

                  அரசியல் பொருளாதாரம்

                     கூலி – விலை – லாபம்

அறிமுகம்:

தோழர்களே!

உற்பத்தி, கூலி, லாபம், நாணயச் செலாவணி, சந்தையில் தேவையும் (Demand) பரிமாற்றமும் (Supply) நிகழ்த்தும் வினைகள், கூலிக்கும் சரக்குககள் அல்லது பண்டங்களின் சந்தை விலைக்குமான உறவு, சமூக உழைப்பு, பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பிற்கும் சரக்குகளின் இயல்பான பண்புகளுக்குமான தொடர்பு, தனிமனித நுகர்வு, சமூக நுகர்வு, உழைப்பின் அளவுக்கும் உழைப்பின் வெகுமதி (கூலி)க்குமான தொடர்பற்றநிலை, உற்பத்திச் சாதனங்கள், உழைப்புக் கருவிகள், உழைப்பின் உற்பத்தித் திறன்கள், சராசரி பணிமும்முரம் (ஈடுபாடு-உத்வேக ஆற்றல் மற்றும் உடல் வலு), சராசரி திறமை, லாபத்திற்கும் மதிப்பிற்குமான உறவு, மதிப்பும் இயற்கை விலையும் இப்படியாக, அரசியல் பொருளாதாரத்தின் அரிச்சுவடிகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியும் அவற்றிற்கிடையிலான உறவுகள் குறித்து கேள்விகள் எழுப்பியும் அவற்றுக்கான வரையறைகளையும் இயக்கும் நியதிகளையும் இயங்கும் நெறிமுறைகளையும் வகுப்பதற்கான தர்க்க நியாயங்களையும் கோட்பாடு நெறிகளையும் ஆராய்ந்தோம். இனியும் தொடர்வோம்!


                        7) உழைப்புச் சக்தி

மேற்கண்டவற்றை எளிமையாகச் சொன்னால், மதிப்பின் இயல்பு பற்றியும் அதை எந்தவொரு சரக்கினுடைய மதிப்பின் இயல்பாகவும் பகுத்தாய்ந்தோம். இப்போது, நாம் உழைப்பின் திட்டவட்டமான மதிப்பின்பால் நம் கவனத்தைத் திருப்பவேண்டும். முரணுரைபோல் தோன்றும் ஒன்றைச் சொல்லி திடுக்கிட வைக்கப்போவதாக மார்க்ஸ் கூறுகிறார்.

தொழிலாளர்கள் தங்களது உழைப்பைத் தினமும் விற்கிறார்கள். எனவே, உழைப்பிற்கு ஒரு விலையுண்டு; ஒரு சரக்கின் விலை என்பது பணத்தோகையில் குறிப்பிடப்படும் அதன் மதிப்புதான் என்பதால் உழைப்பின் மதிப்பு என்பதாக ஒன்று நிச்சயம் இருந்தாகவேண்டும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். ஆயினும், பொதுவாக ஏற்புடைய சொல்வழக்கில் உழைப்பின் மதிப்பு என்பதாக ஒன்றும் இல்லை. ஒரு சரக்கில் உருப்பெற்றுள்ள அவசியமான உழைப்பின் அளவு அச்சரக்கின் மதிப்பை உருவாக்குகிறது என்பதை நாம் பாரத்தோம். இப்போது மதிப்புபற்றிய இதே கருத்தமைவைப் பயன்படுத்தி எடுத்துக்கட்டாக, 10 மணிநேர வேலைநாளின் மதிப்பை நாம் எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த நாளில் எவ்வளவு உழைப்பு அடங்கியுள்ளது? பத்து மணிநேர உழைப்பு. 10 மணிநேர வேலை நாளின் மதிப்பு, பத்து மணிநேர உழைப்புக்குச் சமம் அல்லது அதில் அடங்கியுள்ள உழைப்பின் அளவுக்குச் சமம் என்று கூறுவது, கூறியது கூறலாகும். மேலும், பொருளற்ற கூற்றுமாகும்.

விண்ணுலக (அண்டத்திலுள்ள) கிரகங்களின் மெய்யான இயக்கத்தை உறுதியாகத் தெரிந்து கொண்டோம் எனில், அவற்றின் வெளித்தோற்றமான இயக்கங்களை அதாவது, வெறுமனே கண்ணுக்குப் புலனாகும் இயக்கங்களை நம்மால் விளக்கமுடியும். அதே முறையில், “உழைப்பின் மதிப்பு” என்ற கூற்றின் உண்மையான ஆனால், மறைந்துள்ள பொருளை நாம் கண்டறிந்துவிட்டோமெனில் இந்தப் பகுத்தறிவுக்குப் பொருந்தாத, சாத்தியமற்றதுபோல் தோன்றும் மதிப்பின் பயன்பாட்டையும் நிச்சயம் நம்மால் விளக்கிக் கூறமுடியும்.

தொழிலாளி விற்பது நேரடியாகத் தன் உழைப்பை அல்ல; அவருடைய உழைப்புச் சக்தியைத்தான். அதைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள முதலாளியிடம் ஒப்புவிக்கிறார். இது எந்தளவுக்கு உண்மையெனில், ஒரு மனிதன் தன் உழைப்புச் சக்தியை விற்பதற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச நேரம் வரைதான். இங்கிலாந்து சட்டங்களால் அதிகப் பட்ச நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது என்றும் ஆனால், நிச்சயமாகச் சில ஐரோப்பிய கண்டத்துச் சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மார்க்ஸ் கூறுகிறார். தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை ஏதாவதொரு வரம்பற்ற கால அளவுக்கு விற்க அனுமதிக்கப்பட்டால் உடனடியாக அடிமைமுறை மீட்டமைக்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, உழைப்பை விற்கும் அப்படிப்பட்ட வரம்பற்ற கால அளவு என்பது தொழிலாளியின் வாழ்நாள் முழுமையும் என்பதாக ஆகிவிடும். அத்தகையதொரு விற்பனை உடனடியாக தொழிலாளியை எஜமானரின் ஆயுட்கால அடிமையாய் ஆக்கிவிடும். (எவ்வளவு கூர்மையான ஆய்வை மார்க்ஸ் செய்கிறார்!)

இங்கிலாந்தின் பழமையான பொருளாதாரவாதிகளில் ஒருவரும், மிகச் சுயமான தத்துவவாதியுமான தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hopps) என்பவர் தனது லெவியாதன் (Leviathan) நூலில் இந்த அம்சத்தை இயல்புணர்வோடு கண்டறிந்து சொன்னபோதிலும் அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். தாமஸ் ஹாப்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு மனிதனின் மதிப்பு அல்லது பெறுமானம் என்பது மற்றெல்லாப் பொருட்களிலும் உள்ளதுபோன்றே, அவனுடையே விலையே ஆகும். அதாவது, அவனுடைய சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள எவ்வளவு தரப்படுமோ அவ்வளவே ஆகும்.” இந்த அடிப்படையிலிருந்து மேற்சென்று, மற்றெல்லாச் சரக்குகளின் மதிப்பைப் போன்றே உழைப்பின் மதிப்பையும் நம்மால் நிர்ணயிக்க முடியும்.

உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்பதற்கு முன்பாக, நாம் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றுள்ளதாக மார்க்ஸ் கூறுகிறார். சந்தையிலே ஒருபுறம், பண்படாத தரிசு நிலம் தவிர்த்த நிலம், எந்திர சாதனம், கச்சாப் பொருள், வாழ்வாதாரச் சாதானங்கள் ஆகிய உழைப்பின் பொருட்களான இவை அனைத்தையும் உடைமைகளாகக் கொண்ட வாங்குவோர் கூட்டமொன்றைக் காண்கிறோம். மறுபுறமோ, தங்களின் உழைப்புச் சக்தி, தங்களின் பாடுபடும் கைகள், மூளைகள் இவற்றைத் தவிர விற்பதற்கு வேறெதுவுமில்லாத விற்போர் கூட்டமொன்றைக் காண்கிறோம். ஒரு கூட்டம் தன் வயிற்றுப் பிழைப்புக்காகத் தொடர்ந்து விற்றுக்கொண்டே இருக்கும் அதே வேளையில், இன்னொரு கூட்டம் லாபம் ஈட்டித் தம்மை வளப்படுத்திக்கொள்ளும் இந்த விசித்திரமான நிலை எவ்வாறு உருவானது? இந்த கேள்விபற்றிய ஆய்வானது, முந்தையகால திரட்சி (Ancient Accumulation) அல்லது ஆதித்திரட்சி என்று பொருளாதார வாதிகளால் அழைக்கப்படுகின்ற உண்மையில், ஆதிப் பறிமுதல் (Ancient Exploitation) என்றழைக்கப்பட வேண்டிய நிகழ்வுபற்றிய ஆய்வேயாகும். ஆதித்திரட்சி என்று சொல்லப்படுகின்ற இது (இந்த உடைமை), உழைக்கும் மனிதனுக்கும் அவனுடைய உழைப்புச் சாதனங்களுக்கும் இடையே நிலவிவந்த ஆதிப் பிணைப்பின் சிதைவில் முடிந்துபோன நிகழ்முறைகளின் ஒரு வரிசைத் தொடரைக் குறிக்கின்றது. என்றாலும், அஅத்தகையதோர் ஆய்வு தற்போதைய கருப்பொருளின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகும். 

உழைக்கும் மனிதனுக்கும் உழைப்புக்கான சாதனங்களுக்கும் இடையிலா பிளவு ஒருமுறை நிலைநிறுத்தப்பட்டுவிட்டால் அதன் பிறகு தொடர்ந்து விரிந்த அளவில் அது தன்னை மீட்டுருவாக்கிக் கொண்டே இருக்கும் (பிளவு பெரிதாகிக் கொண்டே இருக்கும்). உற்பத்திமுறையில் ஒரு புதிய் அடிப்படையான புரட்சி நடந்து அந்த நிலைமையை மீண்டும் புரட்டிப்போட்டு ஒரு புதிய வரலாற்று வடிவத்தில் உழைக்கும் மனிதனுக்கும் அவனுடைய உழைப்புச் சாதனங்களுக்கும் இடையில் முன்பிருந்த பிணைப்பை மீட்டெடுக்கும்வரை இது நிகழும் (அஃதாவது, சோசலிச உற்பத்திமுறை தோன்றும்வரை இந்தச் சுரண்டல் நிகழும்).

அப்படியானால், உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது என்ன?

மற்றெல்லாச் சரக்குகளைப் போலவே உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதற்கு அவசியமான அளவைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உழைப்புச் சக்தி என்பது அவனுடைய வாழும் தனித்தன்மையில்தான் நிலவுகிறது. ஒரு மனிதன் தான் வளர்ந்திடவும் தன் வாழ்க்கையைப் பராமரிக்கவும் குறிப்பிட்ட அளவிலான அத்தியாவசியப் பொருளை நுகர்ந்தாக வேண்டும். ஆனால், மனிதன் என்பவனும் எந்திரத்தைப் போலவே, தேய்ந்து பயனற்றுப்போவான். தன்னுடைய சொந்தப் பராமரிப்புக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் பங்கு தவிர உழைப்புச் சந்தையில் அவன் பயனற்று வெளியேறியபின் அவனது இடத்தை இட்டு நிரப்பித் தொழிலாளர் இனத்தை நீடித்து நிலைக்கச் செய்கிற அவனுடைய குழந்தைகள் சில்லறை வளர்த்து ஆளாக்குவதற்கு கூடுதலாக இன்னொரு பங்கு அத்தியாவசியப் பொருட்களும் அவனுக்குத் தேவை. அது தவிரவும் தன்னுடைய உழைப்புச் சக்தியை மேம்படுத்திக் கொள்வதற்கும் செய்யும் தொழிலுக்குத் தேவையான குறிப்பிட்ட தேர்ச்சித் திறத்தை முயன்று பெறுவதற்கும் மற்றொரு பங்கு மதிப்புகள் செலவிட்டாக வேண்டும். நம் விவாதத்தைப் பொருத்தவரை சராசரியான உழைப்பை மட்டுமே கவனத்தில் கொண்டால் போதும். இச்சராசரி உழைப்புக்கான பயிற்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆகும் செலவுகள் மிகவும் சொற்பமே. எனினும், இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு தான் ஒன்றைச் சொல்லிக்கொண்டார், மார்க்ஸ். வெவ்வேறு தரத்திலான உழைப்புச் சக்திகளை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகள் வேறுபடுவது போன்றே, வெவ்வேறு தொழிற்கிளைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உழைப்புச் சக்திகளின் மதிப்புகளும் அந்த அளவிற்கு வேறுபடுகின்றன. எனவே, சமமான கூலிக்குரிய கூக்குரல் ஒரு தவறான அடிப்படையிலிருந்து எழுவதாகும். அது ஒருபோதும் நிறைவேற்ற முடியாத, சாரமற்ற விழைவாகும். ஆதாரத் தரவுகளை ஒப்புக்கொண்டுவிட்டு, அவற்றிலிருந்து பெறப்படும் முடிவுகளைத் தட்டிக்கழிக்க முயலும் பிழையான, மேலெழுந்தவாரியான தீவிரக் கொள்கைவாதத்தின் வினைப்பயனாகும். அது கூலி அமைப்புமுறையின் அடிப்படையில் நோக்கினால், வேறெந்தச் சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் முடிவு செய்யப்படுகிறது. வெவ்வேறு வகைப்பட்ட உழைப்புச் சக்திகள் வெவ்வேறான மதிப்புகளைக் கொண்டிருப்பதால் அதாவது, அவற்றின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவுகளிலான உழைப்பு தேவைப்படுவதால் அவை உழைப்புச் சந்தையில் வெவ்வேறான விலைகளையே பெற்றாக வேண்டும். எனவே, கூலி அமைப்புமுறையின் அடிப்படையில் சமமான அல்லது பாரபட்சமற்ற வெகுமானத்துக்காகக்கூட (கூலிக்காகக்கூட) ஆர்ப்பரிப்பது, அடிமைமுறையின்கீழ் விடுதலைக்காக ஆர்ப்பரிப்பதற்கு ஒப்பாகும். நியாயமானது, பாரபட்சமற்றது என்று நீங்கள் கருதுவது இந்தப் பிரச்சினைக்குப் பொருந்தாது. நம்முன்னுள்ள கேள்வி இதுதான்: ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அமைப்புமுறை (முதலாளித்துவ அமைப்புமுறை) யின் கீழ் எது அவசியமானது? எது தவிர்க்க முடியாதது? (வளர்ச்சி, முன்னேற்றம்)

ஆக, இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பானது, அந்த உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்யவும் பராமரிக்கவும் நீடித்திருக்கவும் செய்யத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின்  மதிப்புகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

(இதுவே சோசலிச சமுதாயத்தில் திறமைக்கேற்ற வேலை; வேலைக்கேற்ற கூலி என்பதாக நிலவுவதும் கம்யூனிசத்தில் தகுதிக்கேற்ற வேலை; தேவைக்கேற்ற ஊதியம் என்பதாகவும் அமைகின்றன.)


                     8) மதிப்பின் உற்பத்தி (பக்: 58-61)

                     9) உழைப்பின் மதிப்பு (பக்: 62-64)

                   10) சரக்கை அதன் மதிப்பிற்கே விற்பதால் 

                          லாபம் பெறப்படுகிறது (பக்: 65-66)

                   11) உபரி மதிப்பைப் பிரித்துப் பெறப்படும் 

                           பல்வேறு பகுதிகள் (பக்: 67-71)

புத்தகத்தை அப்படியே படித்துப் புரிந்துகொள்ளலாம்:

குழுவின் பக்கத்தில் 26:02:2021-ல் PDF-ஆகப் பதிவிடப்பட்டுள்ளது.



ஆக்கம்: பாராஜ் ராதாகிருஷ்ணன்,           04:03:2021.