மார்க்சிய படிப்பு வட்டம்
செங்கொடி மையம்
வகுப்பு எண்: 20
நாள்: 20-02-2021
அரசியல் பொருளாதாரம்
கூலி – விலை – லாபம்
அறிமுகம்:
தோழர்களே,
மார்க்சிய அரசியல் பொருளாதாரம், பொருளாதாரத்தை அரசியல் அதிகாரமாகவும் சமுதாய விடுதலையாகவும் வளர்த்தெடுக்கும் கோட்பாடு என்பது நமக்குத் தெரியும்.
மார்க்சிய அரசியல் பொரருளாதாரமானது பொருளாதாரம், அரசியல், சமூகம் இம்மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து, இயங்கி, மாறுவதை வரலாற்றுப் பொருள்முதல் ஞானத்துடன் நம்முன் வைக்கிறது.
மார்க்சிய அரசியல் பொருளாதாரம், நவீன சமுதாய அமைப்பான முதலாளித்துவ உடைமைச் சமூகத்தின் பகை முரண்களாக மூலதனத்தையும் கூலி உழைப்பையும் முன்னிருத்துகிறது. இவையே, வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளாகவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஆதாரமாகவும் விளங்குகின்றன.
மார்க்சியம், அரசியல் பொருளாதாரத்திலும் எங்கும் எதிலும் வழுவற்ற இயக்கவியல் கோட்பாட்டையே தனது உலகக் கண்ணோட்டமாகக் கொள்வதனாலேயே முரணற்ற ஆய்வுகளையும் வரையறைகளையும் தீர்க்க தரிசனங்களையும் முன்வைப்பதற்கு ஆதாரம். எனவே, இங்கு அவசியமான இயங்கியலின் மூன்றாவது கோட்பாடு எனும் “முரண்பாடுகள் பற்றி....” சிறிது பார்த்துவிடுவோம்!
“ஒவ்வொன்றும் இணைந்து, இயங்கி, மாறி, வளர்ந்துவரும் சூழலை நாம் பரிணாம வளர்ச்சி என்கிறோம்”. இவ்வளர்ச்சியை, வரலாற்று ரீதியான வளர்ச்சி என்றும் சுழலேணி முறையிலான வளர்ச்சி என்றும் மார்க்சியம் கூறுகிறது. இந்த இயக்கப் போக்கில் “சுய இயக்கச் சக்திகளை” நாம் அடையாளம் காண்பதும் அவற்றுக்கான “இயக்கவியல் வகை வளர்ச்சி விதிகளை”த் தீர்மானிப்பதும் விஞ்ஞானக் கண்ணோட்டம் ஆகிறது. இதைத்தான் மேதைமைமிக்க மார்க்ஸ் தனது அனைத்துப் படைப்புகளிலும் குறிப்பாக, “மூலதனத்தி”லும் செய்கிறார். அவர், “சுய இயக்கச் சக்திகளாக”த்தான் “மூலதனத்தையும் கூலியுழைப்பையும் காண்கிறார். இன்னும் குறிப்பாகச் சொன்னால், வளர்ச்சியின் வேகத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான், முதலாளித்துவ உற்பத்தியின் வேறான “பண்டத்தை-சரக்கை-யும் சந்தை விலை எனும் பரிமாற்ற மதிப்பையும் கையிலெடுக்கிறார்.
இவ்வாறாக, பொருட்களும் வர்க்க சமுதாயமும் கூட நிரந்தரமானவை அல்ல; அவற்றிற்கு ஒரு ஆரம்பநிலை, ஒரு பக்குவநிலை, ஒரு முதுமைப் பருவம் பிறகு, ஒரு முடிவு உண்டு.
“ஆகவே, வாழ்வு என்பதும் ஒரு முரண்பாடுதான். முரண்பாடென்பது எல்லாப் பொருட்களிலும் விஷயங்களிலும் பொதிந்திருக்கிறது. அது, இடையறாது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது; தன்னைத்தானே தீர்த்துக் கொள்கிறது. எப்பொழுது முரண்பாடு தீர்கிறதோ அந்தக் கணமே வாழ்வு முடிவுபெற்று சாவு வந்துவிடுகிறது”. இது ஏங்கெல்ஸின் மொழிவு.
இதுவே, எதிர்மறைகளின் நிலையுறுத்தல். இந்த நிலையுறுத்தலே, நிலைமறுத்தலாகவும் நிலைமறுத்தலின் நிலைமறுத்தலாகவும் வளர்சியடைகின்றது. எனவே, பொருட்களுக்குள்ளேயே, சமுதாயத்திற்குள்ளேயே முரண்பாடு அடங்கியிருப்பதால் அவை மாறுதலும் வளர்ச்சியும் அடைகின்றன.
மாமேதை மார்க்ஸின் கூலி-விலை-லாபம்
5) கூலியும் விலைகளும் (பக்35 – 38)
நண்பர் வெஸ்டனின் வாதங்களை அவற்றின் மிக எளிய கருத்தியல் கூற்று எனும் வடிவத்தில் சுருக்குவோமானால், அவை பின்வரும் வரட்டுக் கோட்பாட்டில் அடங்கிவிடும்:
“சரக்குகளின் விலைகள் கூலியினால் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ஒழுங்கமைக்கப்படுகின்றன”.
இந்த தகர்ந்த, தவறான, பழைய வாதத்திற்கு நம்மிடம் நடைமுறை அனுபவங்கள் சாட்சியாக உள்ளன.
இங்கிலாந்தின் விவசாயத் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த கூலி பெற்றபோதும் அவர்களின் அவர்களின் உற்பத்திப் பொருட்களைப் பிறநாட்டுப் பொருட்களைவிட அதிக விலைக்கு விற்கின்றனர். அதே வேளையில், இங்கிலாந்தின் ஆலை முதலாளிகள், சுரங்க உரிமையாளர்கள், கப்பல் கட்டுவோர் இன்னும் இவர்போன்றோர் தம் தொழிலாளர்களுக்கு, ஒப்பீட்டளவில் உயர்ந்த கூலியை வழங்கியபோதும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைப் பிற நாடுகளைவிட மலிவாகவே விற்கின்றனர். சராசரியாகப் பார்த்தால், விலையுயர்ந்த உழைப்பு, விலை குறைந்த சரக்குகளை உற்பத்தி செய்கிறது; விலை குறைந்த உழைப்பு, விலையுயர்ந்த சரக்குகளை உற்பத்தி செய்கிறது என்பதை வெவ்வேறு நாடுகளின் சரக்குகளை ஒப்பிட்டும், ஒரே நாட்டிலுள்ள வேறு சரக்குடன் ஒப்பிட்டும் காட்டமுடியும். இதற்கு சில விதிவிலக்குகள் இருந்தபோதும், அவையும் வெளித்தோற்றமே, உண்மையல்ல. ஆயினும், ஒரு நிகழ்வில் உழைப்புக்கான அதிக விலையே சரக்கின் குறைவான விலைக்குக் காரணம் என்றும், மற்றொரு நிகழ்வில் உழைப்புக்கான குறைந்த விலையே சரக்கின் அதிக விலைக்குக் காரணம் என்றும் இது நிரூபித்துவிடாது. ஆனால், அனைத்து நிகழ்வுகளிலும், உழைப்புக்கான விலை சரக்கின் விலையைத் தீர்மானிப்பதில்லை என்பதை இது நிரூபிக்கும் என்றபோதிலும் இந்த அனுபவவாத வழிமுறையைப் பயன்டுத்துவது நமக்குச் சற்றும் தேவையற்றது.
“சரக்குகளின் விலைகள் கூலியால் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ஒழுங்கமைக்கப்படுகின்றன” என்ற வெஸ்டனின் வாதத்தை மறுக்கலாம். உண்மையாகப் பார்த்தால், ஒருபோதும் அதனை அவர் வகுத்தளிக்கவில்லைதான்.
இதற்கு மாறாக, “உற்பத்தியாளருக்கான லாபமும் நில வாடகையும்கூட சரக்குகளின் விலையில் உட்பொதிந்த பகுதிதான். ஏனென்றால், சரக்குகளின் விலையிலிருந்துதான் தொழிலாளியின் கூலியை மட்டுமின்றி, முதலாளியின் லாபத்தையும் நிலவுடைமையாளரின் வாடகையும்கூட கொடுத்தாக வேண்டும்” என்று அவர் கூறினார். அவருடைய கருத்தின்படி, விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?
முதலாவது கூலியால்; அடுத்ததாக, முதலாளியின் சார்பாக ஒரு கூடுதல் சதவீதமும் நிலவுடைமையாளரின் சார்பாக மற்றொரு கூடுதல் சதவீதமும் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சரக்கில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளியின் கூலி 10 எனக்கொண்டால், லாபம் 100 சதவீதம் எனில், மேலும் ஒரு 10-ம், நிலவாடகை 100 சதவீதமெனில், மேலும் ஒரு 10-ம் சேர்த்து சரக்கின் விலை 30-ஆக இருக்கும். ஆனால், இத்தகைய விலை நிர்ணயம் கூலி அடிப்படையில் அமைந்ததாகவே ஆகும். இந்நிகழ்வில் கூலி 20 ஆனால், சரக்கின்விலை 60-ஆக ஆகும். இவ்விதம் , கூலியே விலையைத் தீர்மானிக்கிறது எனும், 'வறட்டுக் கோட்பாட்டை' எடுத்துரைத்த அரசியல் பொருளாதாரதின் கிழடுதட்டிய எழுத்தாளர்கள் அனைவரும் லாபத்தையும் நில வாடகையையும் கூலியுடன் வெறுமனே ஒரு சதவீதமாகச் சேர்க்கப்படும் ஒரு அளவாகவே கருதிக்கொண்டு, அக்கோட்பாட்டை நிரூபிக்க முயன்றனர். என்றாலும், அவர்களுள் எவராலும் அந்த சதவீத வரம்புகளை எந்தவொரு விதியாகவும் வகுத்துத் தர இயலவில்லை. அதற்கு மாறாக, அவர்கள், லாபம் என்பது மரபு வழியினால், நடைமுறை பழக்கத்தால், முதலாளிகளின் விருப்பத்தால் அல்லது அதுபோன்ற தன்னிச்சையான, காரண வழிப்படாத பிறிதொரு வழிமுறையினால் முடிவு செய்யப்படுகிறது என்றே எண்ணுவதாகத் தெரிகிறது.
லாபம் என்பது முதலாளிகளுக்கு இடையிலான போட்டியால் முடிவு செய்யப்படுகிறது என வலியுறுத்துவார்கள் எனில், அவர்கள் உறுப்படியாக ஏதும் சொன்னதாகக் கணக்கில் கொள்ளப்படாது. அந்தப் போட்டியானது, நிச்சயமாக, வெவ்வேறு துறைகளில் நிலவும் வெவ்வேறு வீதங்களை சமன்படுத்துவதாகவே, அதாவது, அவற்றை ஒரு சராசரி மட்டத்துக்கு கொண்டுவருவதாகவே உள்ளது. ஆனால், அதனால், அந்தச் சராசரி லாப மட்டத்தையே தீர்மாக்கவோ அல்லது பொது லாப வீதத்தையே தீர்மானிக்கவோ ஒருபோதும் முடியாது.
சரக்குகளின் விலைகள் கூலியினால் தீர்மாக்கப்படுகின்றன என்று சொல்வதால் நாம் (வெஸ்டன் சார்பாக) விரும்புவது என்ன?
கூலி என்பது உழைப்பின் விலைக்கு ஒரு பெயரே ஆகும். அதாவது, சரக்குகளின் விலைகள் உழைப்புக்கான விலையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதே நாம் சொல்லவரும் கருத்து. ஆனால், “விலை” என்பது பரிவர்த்தனை மதிப்பாகும். மதிப்பைப்பற்றிப் பேசும்போதெல்லாம் தான் எப்போதும் பரிவர்த்தனை மதிப்பைப் பற்றியே பேசுவதாக மார்க்ஸ் கூறுகிறார். எனவே, மேற்கண்ட வரையறுப்பு இவ்வாறாகிறது:
“சரக்குகளின் மதிப்பு உழைப்பின் மதிப்பினால் தீர்மானிக்கப்படுகிறது” அல்லது “உழைப்பின் மதிப்பே, மதிப்பின் பொதுவான அளவீடு ஆகும்”.
அப்படியானால், அந்த “உழைப்பின் மதிப்பு” அதனளவில் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
இங்கே நாம்(மார்க்ஸ் உட்பட) தலைகுத்தி நின்றுவிடுகிறோம். ஆமாம், தர்க்க ரீதியாக நாம் பகுத்தாய முயன்றால், நிலைகுத்தி நிற்கவே செய்கிறோம். இருந்தும், இந்தக் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் தர்க்கரீதியான சிந்தனைபற்றிக் கவலைப்படவில்லை(வெற்று அனுமானங்களையே முன்வைத்தனர்).
நண்பர் வெஸ்டனையே எடுத்துக்கொண்டால், முதலில் அவர், கூலியே சரக்குகளின் விலையைத் தீர்மானிக்கிறதென்றும் அதன் விளைவாக, கூலி உயரும்போது விலைகளும் உயர்தாக வேண்டுமென்றும் நமக்குச் சொன்னார். அதன் பிறகு, கூலி உயர்வது நல்லதன்று காரணம், அதனால் சரக்குகளின் விலைகள் உயர்ந்துவிடுகின்றன; காரணம், கூலி எந்தச் சரக்குகளுக்காகச் செலவிடப்படுகிறதோ அவற்றின் விலைகளைக்கொண்டே அளவிடப்படுகிறது என்று நமக்குக் காட்ட தன் கூற்றைப் புரட்டிப் போட்டார். இவ்வாறு, நாம்(வெஸ்டனின் பார்வையால்) உழைப்பின் மதிப்பு சரக்குகளின் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்று சொல்லத் தொடங்கி, சரக்குகளின் மதிப்பு உழைப்பின் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்று சொல்லி முடித்தோம். இவ்வாறாக, நாம் முடிவுபெறாத ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வந்து இறுதியில் எந்த முடிவுக்கும் வராதுபோனோம்.
ஒட்டுமொத்தத்தில், உழைப்பு, தானியம் அல்லது வேறு ஏதேனுமொரு சரக்கின் மதிப்பை, அளக்கக்கூடிய பொதுவான அளவுகோலாகவும் ஒழுங்கமைப்பியாகவும் கூலியைக் கொள்வதன் மூலம் நாம் சிக்கலைத் தட்டிக்கழிக்கவே செய்கிறோம் என்பதே உண்மை. ஏனெனில், தன்னளவில் இனிமேல் தீர்மானிக்கப்ப வேண்டிய (இதுவரைத் தீர்மானிக்கப்படாத) ஒரு மதிப்பைக்கொண்டு மற்றொரு மதிப்பைத் தீர்மானிக்கிறோம்.
“கூலி, சரக்குகளின் விலைகளைத் தீர்மானிக்கிறது” எனும் வறட்டுக் கோட்பாட்டை மிகவும் அருவமான சொற்களில் வெளிப்படுத்தினால், “மதிப்பே மதிப்பைத் தீர்மானிக்கிறது” எனப் பெறப்படும். இந்த வெற்றுச் சொல்லடுக்கு “மதிப்பை”ப் பற்றி உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது என்ற பொருளையே தருகிகறது.
இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்கிறபோது, அரசியல் பொருளாதாரத்தின் பொது விதிகள்பற்றிய அனைத்து தர்க்க நியாயங்களும் வெற்றுப் பிதற்றலாகவே ஆகிவிடுகின்றன. எனவே, மேதைமைமிக்க ரிக்கார்டோ( Ricardo) அவர்கள், 1817-ல் வெளியிட்ட “அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள்” (The Principles of Political Economy) எனும் தம் நூலில் “கூலியே விலையைத் தீர்மாணிக்கிறது” எனும் பழைய, பெருவழக்கான, புழுத்துப்போன, தவறான வாதத்தை அடிப்படையிலேயே தகர்த்துவிட்டார். இந்தத் தவறான வாதத்தை, ஆடம் ஸ்மித்தும் (Adam Smith) அவரது ஃபிரென்ச் முன்னோடிகளும் அவர்தம் ஆய்வுகளின் உண்மையான அறிவியல்பூர்வமான பகுதிகளில் தவிர்த்திருந்தனர். ஆனால், சாதாரண பொதுக்கொள்கை விளக்கங்களில், கொச்சைப்படுத்திய அத்தியாயங்களில் அதனை அப்படியே மறு-ஆக்கம் செய்தனர்.
( டேவிட் ரிகார்டோ, 1772 முதல் 1823-ஆம் வாழ்ந்த பிரிடிஷ் பொருளாதார அறிஞராவார். பொருளாதார அறிஞர்களான தாமஸ் மால்தூஸ், ஆடம் ஸ்மித், ஜேம்ஸ் மில் போன்றவர்களின் வரிசையில் முக்கியமானவராவார். அவர் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பாராளுமன்றங்களின் உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மெய்மை பொருளாதாரத்தால் அனேக சோசலிஸ்டுகளைக் கவந்தவராவார். அவரால் செல்வாக்கு செலுத்தப்பட்டவர்களே மால்தூஸ், கீய்ன்ஸ், பியாரோ சரஃபா இன்னும் பலர்).
[தோழர்களே! இந்தத் தலைப்பில் மீண்டும் ஒருமுறை உற்பத்தி-கூலி-விலை-லாபம் முதலியவற்றை எளிய தர்க்க நியாயத்தால் மாமேதை மார்க்ஸ் நிறுவியுள்ளார்)
6) மதிப்பும் கூலியும்
மார்க்ஸ் அவர்கள், பிரச்சினையின் உண்மையான தன்மைகள்பற்றி விளக்க வேண்டிய கட்டத்துக்குத் தான் இப்போதுதான் வந்துள்ளதாகவும் அதைத் திருப்திகரமாகச் செய்ய அரசியல் பொருளாதாரத்துறை முழுக்க உட்ச்சென்று விளக்கவேண்டும் என்பதால் பிரச்னையின் முதன்மைக் கூறுகளை மட்டும் தொட்டுக்காட்டிப் போவதாகவும் சொல்கிறார்.
நம்முன்னுள்ள கேள்வி: ஒரு சரக்கின் மதிப்பென்பதென்ன? அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
முதல் பார்வையில், சரக்கின் மதிப்பென்பது மற்றெல்லாச் சரக்குகளுடனான உறவுகளில் வைத்துப் பரிசீலிக்கும் ஒப்பீட்டளவாகவே தோன்றும். அதாவது, பரிவர்த்தனையின்போது ஒன்றோடொன்று செய்துகொள்ளும் விகிதாச்சார அளவாகவே தோன்றும். அப்படியானால், இந்த விகிதாச்சாரங்கள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன?
ஒரு குறிப்பிட்ட சரக்கான கோதுமையை எடுத்துக்கொண்டால், ஒரு குவார்ட்டர் கோதுமையானது பல்வேறு பொருட்களான பட்டு, தங்கம் வேறெந்தச் சரக்கைக்கொண்டு மதிப்பிட்டாலும் அதன் விகிதாச்சாரம் மாறிக்கொண்டே செல்வதே அனுபவமாகும்.
இவ்வாறில்லாமல், கோதுமையின் பரிவர்த்தனை மதிப்பை, வெவ்வேறு பண்ங்களுடனான பரிவர்த்தனை வீதங்களிலிருந்து மாறாமல் தனித்து விளங்கவைக்க வேண்டுமானால், இந்தச் சமன்பாடுகளுக்கான புதியவடிவில் வெளியிடுவதற்கு சாத்தியமான ஒன்றைக் காணவேண்டும்.
ஒரு குவார்ட்டர் கோதுமையானது, ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில், குறிப்பிட்ட அளவு இரும்பின் மதிப்பில் தெரிவிக்கப்படுகிறது என்றால், கோதுமையின் மதிப்பும் அதற்குச் சமதையான இரும்பின் மதிப்பும் மூன்றாவதாக ஒரு பொருளுக்குச் சமம் என்றும் அந்த மூன்றாவது பொருள் இரும்பாகவோ அல்லது கோதுமையாகவோ இருக்கமுடியாது என்பதும் பொருளாகும்.
அதாவது, அவ்விரண்டும் ஒரே பரிமானத்தை இருவேறு வடிவங்களில் வெளியிடுவதாகத் தான் கருதுவதாக மார்க்ஸ் சொல்கிறார். அதாவது, இரும்பு, கோதுமை ஆகிய இரண்டில் எந்தவொன்றையும் பிரிதொன்றைச் சாராமலே, பொதுவான அளவுகோலாக, இந்த மூன்றாவதான பொருளுக்குச் சமன்படுத் வேண்டும்,
இதைப் புரியவைக்கும் உதாரணமாக, Geometry எனும் வடிவக் கணிதத்தை மார்க்ஸ் முன்வைக்கிறார். உதாரணமாக, முக்கோணத்தின் பரப்பளவை வெவ்வேறு கோண வடிவங்களான சதுரம், செவ்வகம் மற்றும் பலகோண வடிவங்களுடன் ஒப்பிடும்போது அதன் வடிவத்திற்கு முற்றிலும் வேறான ஒரு கோவை(Expression)யாகச் சுருக்கியபின் இந்த பரப்பளவைக் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முக்கோணங்களாகப் பகுத்து பல்வேறுபட்ட பலகோண வடிவங்களின் பரப்பளவை ஒப்பிட முடியும் என்கிறார். எனவே, முக்கோணத்தின் பரப்பளவிற்கான கோவை, அடிப்பக்கத்தை (Base-B) யும் உயத்தை(Length-L)யும் பெருக்கி பாதியாக்கவேண்டும் (1/2LB) என்பதை முன்கொணர வேண்டும்.
இதே வகையான செயல்முறை கொண்டு சரக்குகளின் மதிப்பைப் பெறவேண்டும். அதாவது, அனைத்து சரக்குகளின் மதிப்புகளையும் அவற்றிற்குப் பொதுவான ஒரு கோவையாக நம்மால் சுருக்க இயலவேண்டும். அந்தப் பொதுவான அளவீட்டு மதிப்பைச் சரக்குகள் தம்மகத்தே எந்த விகிதாச்சாரங்களில் கொண்டுள்ளன என்று மட்டுமே வேறுபடுத்துவதாக இருக்கவேண்டும். இதுவே நிபந்தனை.
சரக்குககளின் பரிவர்த்தனை மதிப்புகள் பொதுவாகவே, அப்பொருட்களின் சமூக செயல்பாடுகளாகவே உள்ளன. சரக்குகளின் இயல்பான பண்புகளுக்கும் (இரும்பு, கோதுமை, தங்கம் ஆகியவை வெவ்வேறான பண்புகளும் பயனும் கொண்டவை)அவற்றின் பரிவர்த்தனை மதிப்புகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, நாம் கேட்கவேண்டிய கேள்வி:
அனைத்துச் சரக்குகளிலும் அடங்கியுள்ள பொதுவான சமூக உள்ளடக்கக் கூறு என்ன?
அதுதான் உழைப்பு!
ஒரு சரக்கை உற்பத்தி செய்ய, ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பு அதன்மீது செலுத்த அல்லது செலவிடப்பட வேண்டும். அதைத், தான் 'உழைப்பு' என்று மட்டும் சொல்லவில்லை என்றும் அதைச் 'சமூக உழைப்பு' என்று சொல்தாகவும் மார்க்ஸ் கூறுகிறார்.
தன் சொந்த உடனடிப் பயன்பாட்டுக்கெனவும் தானே நுகர்வதற்கெனவும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யும் மனிதன் படைப்பது ஒரு “உற்பத்திப் பொருள்”தானே தவிர அது “சரக்கு” அல்ல. சுய தேவையை நிறைவு செய்யும் ஒரு உற்பத்தியாளன் என்ற முறையில் அவனுக்குச் சமூகத்துடன் எந்தவித உறவும் இல்லை. ஆனால், ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஒரு மனிதன் ஏதேனுமொரு சமூகத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யவேண்டும். அவனுடைய உழைப்பேகூட, சமுதாயம் செலவிடும் ஒட்டுமொத்தக் கூட்டு உழைப்பில் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக இருக்கவும் வேண்டும். அவ்வுழைப்பு சமுதாயத்திற்குள் நிலவும் உழைப்புப் பிரிவினைக்கு உட்பட்டு இருக்கவும் வேண்டும். பிற உழைப்புப் பிரிவினைகள் இல்லாமல் இவனுடைய உழைப்பு ஒன்றுமே இல்லை. அதேவேளையில், அவ்வுழைப்பு தன் பங்குக்கு உழைப்புப் பிரிவினைகளை முழுநிறைவாக்கவும் தேவைப்படுகிறது.
சரக்குகளை, மதிப்புகளாக நாம் கருதுகிறோம் எனில், ஈடேற்றம்பெற்ற நிலைப்படுத்தப்பட்ட (சமூக சராசரி மட்டத்திற்கு வந்த) அல்லது நீங்கள் விரும்பினால், இறுகிய உருவம்பெற்ற, சமூக உழைப்பு எனும் பிரத்யேகமான (தனிப் பண்புகள் கோண்ட) ஒற்றைப் பண்புக்கூறின் அடிப்படையில்தான் அவ்வாறு கருதுகிறோம். இதைப் பொறுத்தவரையில், அதிகமான அல்லது குறைவான அளவுள்ள உழைப்பினை உருவகிப்பதன் அடிப்படையில் மட்டுமே சரக்குகள் வேறுபடமுடியும்; உழைப்பின் தன்மையிலல்ல. உதாரணம்: செங்கல், பட்டுக் கைக்குட்டை.
ஆனால், பரிமாணங்களை எவ்வாறு அளவிடுவது? அந்த உழைப்பு நீடிக்கும் நேரத்தைக் கொண்டு. அதாவது, மணியால், நாளால், இன்னும்பிற நேர அளவீடுகளால் உழைப்பினை அளவிடலாம்.
இந்த அளவுகோலைப் பயன்படுத்துவதற்கு, அனைத்து வகையான உழைப்பும் சராசரி உழைப்பாக அல்லது எளிய உழைப்பாக மாற்றப்பட்டு, அதனைத் தம் அளவீட்டு அலகாக (Unit)க் கொண்டுள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே, நாம் கீழ்க்காணும் முடிவுக்கு வந்து சேர்கிறோம்: ஒரு சரக்கானது சமூக உழைப்பின் இறுகிய வடிவம் என்பதால் அச்சரக்கு ஒரு மதிப்பைக் கொண்டுள்ளது.
சரக்கினுடைய மதிப்பின் அல்லது அதனுடைய ஒப்பீட்டு மதிப்பின் மகத்துவம் என்பது அச்சரக்கில் அடங்கீயுள்ள சமூக உள்ளடக்கக்கூறு (சராசரி உழைப்பு) அதிக அளவினதா அல்லது குறைந்த அளவினதா என்பதைப் பொருத்தது. அதாவது, அச்சரக்கின் உற்பத்திக்கு அவசியப்படும் உழைப்பின் ஒப்பீட்டுப் பொருண்மையைப் பொறுத்தது. எஎனவே, சரக்குககளின் ஒப்பீட்டு மதிப்புகள் அந்தந்த சரக்குகளில் செலுத்தப்பட்ட ஈடேற்றம்பெற்ற, நிலைப்படுத்தப்பட்ட உழைப்பின் பரிமாணம் அல்லது அளவினால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரே நேர அளவிலான உழைப்பினால் உற்பத்தி செய்யக்கூடிய சரக்குகளின் ஒப்புநிலை அளவுகள் (Comparitive Measures) சமமாகவே இருக்கின்றன. அல்லது ஒரு சரக்கின் மதிப்பிற்கும் இன்னொரு சரக்கின் மதிப்பிற்கும் இடையிலான விகிதாச்சாரம், அந்தந்த சரக்கில் பொதிந்துள்ள உழைப்பின் அளவுகளுக்கு இடையிலான விகிதாச்சாரமே.
சரக்குககளின் மதிப்பைக் கூலியால் தீர்மானிப்பதற்கும் அவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பின் ஒப்பீட்டு அளவுகளைக் கொண்டு தீர்மானிப்பதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு!
உழைப்புக்கான வெகுமதி என்பதும் உழைப்பின் அளவு என்பதும் முற்றிலும் தொடர்ப்படுத்த முடியாத அளவீடுகள். எடுத்துக்காட்டாக, 1729-ல் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் என்ற அறிஞர் எடுத்துரைத்த உதாரணத்தையே தோழர் மார்க்ஸ் இங்கு கையால்கிறார்: ஒரு குவாட்டர் கோதுமை மற்றும் ஒரு அவுன்ஸ் தங்கம் இவை இரண்டும் சம மதிப்புள்ள அல்லது சமதை எனில், அவை முறையே, இத்தனை நாட்கள் அல்லது இத்தனை வாரங்கள் செலவிட்ட சம அளவிலான சராசரி உழைப்பின் இறுகிய வடிவங்கள் என வைத்துக்கொள்வோம். இதில் இரண்டின் ஒப்பீட்டு மதிப்பை நிர்ணயிப்பதில் விவசாயி, தொழிலாளி ஆகியோரின் கூலிகள் எந்த விதத்திலும் கணக்கில் கொள்ளப்படவில்லை. எவ்வாறு வழங்கப்பட்டதென்னறோ, கூலியுழைப்புகூட ஈடுபடுத்தப்பட்டதா, சமமான கூலி வழங்கப்பட்டதா, அப்படியே வழங்கப்பட்டிருந்தாலும் உற்பத்தி செய்த சரக்குகளின் மதிப்பிலிருந்து சாத்தியமான அனைத்து விகிதாச்சாரங்களிலிருந்தும் விலகிச் செல்லக்கூடும். அது, அரை, கால், மூன்றிலொன்று, நான்கிலொன்று என்ற ஏதேனுமொரு விகிதமாக இருக்கக்கூடும். எவ்வாறாயினும் அவர்கள் உற்பத்தி செய்த சரக்குகளின் மதிப்புகளை விஞ்சுபவையாக இருக்க முடியாது. அவர்களது கூலிகள் உற்பத்தி செய்த பொருட்களின் மதிப்பினால் வரம்பிடப்படும்; ஆனால், அவர்களது உற்பத்திப் பொருட்களின் மதிப்புகள் கூலியினால் வரம்பிடப்படுவதில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்புகள் எந்தச் சரக்கானாலும் அவற்றின் ஒப்பீட்டு மதிப்புகள், உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் மதிப்பை, அதாவது, கூலியை எவ்வகையிலும் கணக்கில் கொள்ளாமல் முடிவு செய்யப்பட்டதாகவே இருக்கும். எனவே, சரக்குகளின் மதிப்புகளை அவற்றில் பொதிந்துள்ள உழைப்பின் ஒப்பீட்டு அளவுகளைக் கொண்டு தீர்மானிப்பதானது, சரக்குகளின் மதிப்புகளை உழைப்பின் மதிப்பைக் கொண்டு அதாவது, கூலியைக் கொண்டு தீர்மானிக்கும் வெற்று சொல்லடுக்கு முறையிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு வழிமுறையாகும்.
ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைக் கணக்கிடுவதில், கடைசியாக ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் அளவோடு, அச்சரக்கின் கச்சாப் பொருளில் ஏற்கனவே செலுத்தப்பட்ட உழைப்பின் அளவையும் உழைப்பைச் செலுத்துவதற்கு உதவியாக இருந்த கருவிகள், துணைக் கருவிகள், எந்திரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு பஞ்சு-நூலின் மதிப்பானது, நூற்பு நிகழ்முறையின்போது, பஞ்சுடன் சேர்க்கப்பட்ட உழைப்பின் அளவு, பஞ்சில் ஏற்கனவே ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவு, பயன்படுத்தப்பட்ட நிலக்கரி, எண்ணெய், பிற துணைப்பொருட்கள் ஆகியவற்றில் ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவு, நீராவி எந்திரம், நூற்புக் கதிர்கள், ஆலைக் கட்டிடம் இன்னபிறவற்றில் அடங்கியுள்ள உழைப்பின் அளவு ஆகிய இவை அனைத்தின் இறுகிய வடிவமே, மதிப்பாகும்.
உற்பத்திக் கருவிகள் என்று முறையாக அழைக்கப்படுகிற கருவிகள், எந்திர சாதனங்கள், கட்டடங்கள் போன்றவை நீண்ட காலமோ, குறுகிய காலமோ திரும்பத் திரும்ப நடைபெறும் உற்பத்தியின் நிகழ்முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுகின்றன. கச்சாப் பொருட்களைப்போல் முழுதும் பயன்படுத்தப்படுமெனில், அப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பும் அவற்றின் உதவியால் உற்பத்தி செய்யப்டும் சரகுகளுக்கு உடனடியாக மாற்றப்படுகின்றன. ஆனால், முழுமையாகப் பயன்படுத்தப்படாத நூற்புக்கதிர் போன்ற தொடர்ந்து, படிப்படியாகப் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பொருத்தவரையில், சராசரியாக அது பயன்படுத்தப்பட்ட காலம் மற்றும் அந்தக் காலகட்டத்தில் ஒரு நாளில் அதன் சராசரி விரயம்/ தேய்மானம் இவற்றின் அடிப்படையில் அதன் சராசரி மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த மதிப்பானது, ஒரு பவுண்டு நூலில் ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவாகச் சேர்க்கப்படுகிறது. இந்த விஷயம் இப்போதைய நோக்கத்திற்குப் போதுமானது என மார்க்ஸ் முடிக்கிறார். அதாவது, சரக்கின் மதிப்பில் சேர்க்கப்படும் அனைத்து மதிப்புகளும் இங்கு பட்டியலிட்டு விளக்கப்பட்டுவிட்டன.
ஒரு சரக்கின் மதிப்பு, அதன் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது. எனில், அதில் ஈடுபட்ட மனிதனின் சுறுசுறுப்பும் திறமையும் அந்த மதிப்பைப் பாதிப்பதாகத் தோன்றலாம். அதாவது, சுறுசுறுப்பும் திறமையும் உள்ள மனிதன் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை விரைவில் முடிப்பதால் அதன் மதிப்பு குறைவாகவும் சோம்பேறியாகவும் திறமையற்றவராகவும் உள்ளவரின் உழைப்பின் மதிப்பு கூடுதலாக இருப்பதுபோல் தோன்றக்கூடும் இது மாபெரும் பிழையான பார்வை என்கிறார், மார்க்ஸ். “உழைப்பை”ச் “சமூக உழைப்பு” என்ற அடைமொழியில் பயன்படுத்துவதாகவும் அதில் பல கூறுகள் இருப்பதாகவும் அவர் சொல்கிறார். “சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் குறிப்பிட்ட சமூக சராசரி உற்பத்தி நிலைமையின்கீழ் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின், குறிப்பிட்ட சமூக சராசரிப் பணி மும்முரத்துடனும் குறிப்பிட்ட சராசரித் திறமையுடனும் ஒரு சரக்கை உற்பத்தி செய்ய அவசியமான உழைப்பின் அளவைத்தான் சரக்கினுள் பொதிந்துள்ள இறுகிய உழைப்பு என்கிறோம்.
(இந்த ஏற்பாடு, கைத்தறிக்கும் விசைத் தறிக்குமான ஒரே பருத்தி நெசவுத் துணியில் கண்கூடாகத் தெரியும். சில சிறப்பான பயன்பாட்டிற்கான நெசவைத் தவிர, கைத்தறி வழக்கொழிந்து போவது கூடுதல் உழைப்பு நேரத்திற்கான கூடுதல் கூலியோ, சரக்கிற்கான கூடுதல் விலையோ கிடைக்காததால்தான்).
எனவே, சரக்குகளில் செலுத்தப்பட்ட, சமூக ரீதியில் அவசியமான உழைப்பின் அளவானது சரக்குகளின் பரிவர்த்தனை/ சந்தை மதிப்புகளை ஒழுங்குபடுத்துகிறது எனில், அச்சரக்கை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பில் ஏற்படும் ஒவ்வோர் அதிகரிப்பும் அச்சரக்கின் மதிப்பைக் கூட்டவேண்டும். அதுபோல, உழைப்பில் ஏற்படும் ஒவ்வோர் குறைவும் அச்சரக்கின் மதிப்பைக் குறைக்க வேண்டும்.
உற்பத்திப் பொருளின் அளவைப் பொருத்தவரையில், ஒரு பொருளை உற்பத்திச் செய்யும் அவசியமான உழைப்பின் அளவைப் பொருத்து சமமாக இருக்கவேண்டுமாயினும், அது அவ்வாறு இருப்பதில்லை. ஏனெனில், எந்த ளவுக்கு சமூக உழைப்பின் உற்பத்தித் திறன்கள் அதிகமாக இருக்கின்றனவோ அந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட உழைப்பு நேரத்தில் உற்பத்தி செய்து முடிக்கப்படும் பொருட்களின் அளவும் அதிகமாக இருக்கின்றன. உற்பத்தித் திறன் குறையும்போது அளவு குறைகின்றது.
வெவ்வேறு தேசம் மற்றும் வெவ்வேறு மக்களின் வெவ்வேறு வகைப்பட்ட இயற்கை ஆற்றல்களையும் பாரம்பரியம் மற்றும் பயிற்சியினால் பெறப்பட்ட வேலைத்திறன்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உழைப்பின் உற்பத்தித்திறன்கள் முதன்மையாகக் கீழ்க்கண்டவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். அவை:
1) மண்ணின் வளம், சுரங்கங்களின் வளம் இன்னும் இதுபோன்ற உழைப்பின் இயற்கைவள நிலைமைகள்;
2) தொடர்ந்து முன்னோக்கி மேம்பபட்டுவரும் உழைப்பின் சமூக சக்திகள். அதாவது, பெருவீத அளவிலான உற்பத்தி, மூலதனத்தின் குவிப்பும் உழைப்பின் செர்க்கையும், உழைப்புப் பிரிவினை, எந்திர சாதனம், மேம்பட்ட உற்பத்திமுறைகள், வேதியியல் மற்றும் அதுபோன்ற பிற இயற்கைச் சக்திகளின் பயன்பாடு, தவவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் நேரத்தையும் தூரத்தையும் குறுக்குதல், உழைப்பின் சேவைக்கு இயற்கைச் சக்திகளை உட்படுத்துகிற, உழைப்பின் சமூக அல்லது கூட்டுறவுப் பண்புகளை வளர்க்கிற எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பு இவற்றிலிருந்து தருவிக்கப்படுகிற உழைப்பின் சமூக சக்திகள்.
இவ்வாறாக, உழைப்பின் நேர அளவையும் உழைப்பின் உற்பத்தித்திறனையும் வைத்து ஒரு பொது விதியைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கலாம்:
“சரக்குகளின் மதிப்புகள், அவற்றின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் நேர அளவிற்கு நேர்விகிதத்தில் இருக்கும். ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தித்திறன்களுக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்”.
இப்போது, மதிப்பிலிருந்து அது மேற்கொள்ளும் விலைபற்றிப் பார்ப்போம்:
விலை என்பது மதிப்பின் பணக்குறீயீடு அல்லாமல் வேறில்லை.
குறிப்பிட்ட அளவிலான, உங்களது தேசிய உழைப்பு உறைந்துள்ள, குறிப்பிட்ட அளவிலான உங்களின் தேசிய உற்பத்திப் பொருட்களை, தங்கம், வெள்ளியை உற்பத்தி செய்யும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா கண்டத்து நாடுகளின் குறிப்பிட்ட அளவிலான உழைப்பு உறைந்துள்ள குறிப்பிட்டவோ அளவிலான உற்பத்திப்பொருட்களான தங்கம், வெள்ளியில் பரிவர்த்தனை செய்துகொள்கிறீர்கள். இத்தகைய பண்டமாற்று வழியாகத்தான் அனைத்துச் சரக்குகளின் மதிப்பையும் தங்கம், வெள்ளியில் முறையே அவற்றில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் அளவுகளைக்கொண்டு குறிப்பிடக் கற்றுள்ளீர்கள். மதிப்பின் பணக்குறியீடான விலையைச் சற்றே கூர்ந்து நோக்கினால், மதிப்பை, விலையாக மாற்றுவதென்பது அனைத்து சரக்குகளின் மதிப்புகளுக்கும் சார்பற்ற ஒரே சீரான ஒரு வடிவத்தை நீங்கள் வழங்குவதற்கும் அவற்றைச் சமமான சமூக உழைப்பின் அளவுகளாக நீங்கள் குறிப்பிடுவதற்குமான ஒரு நிகழ்வுமுறை என்பதைக் காணலாம். விலையானது, மதிப்பின் பணக்குறியீடாக இருக்கும் வரையில் அதனை இயற்கை விலை என்று ஆடம் ஸ்மித் அழைத்தார்; அத்தியாவசிய விலை என்று விவசாய உற்பத்தியே அனைத்து வளங்களுக்கும் அடிப்படை என்று நம்பும் ஃப்ரெஞ்சு ஃபிசியோகிராஃப்டுகள் அழைத்தனர்.
அப்படியானால், மதிப்புக்கும் சந்தை விலைக்குமான அல்லது இயற்கை விலைகளுக்கும் சந்தை விலைகளுக்குமான உறவு என்ன?
உற்பத்யாளர்களின் உற்பத்தி நிலைமைகள் வேறுபட்டபோதிலும் சந்தைவிலை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, ஒரு குறிப்பிட்ட அளவில் சந்தைக்கு வழங்குவதற்கு, சராசரி உற்பத்தி நிலைமைகளின்கீழ் தேவைப்படுகிற சமூக உழைப்பின் சராசரி அளவைத்தான் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட வகையிலான ஒரு சரக்கின் ஒட்டுமொத்தத்தைக் கொண்டே அது கணக்கிடப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு சரக்கின் சந்தை விலையானது அதன் மதிப்போடு பொருந்தியுள்ளது. மறுபுறம், மதிப்பு அதாவது இயற்கை விலைக்கு ஒருசமயத்தில் மேலாக உயர்ந்தும் வேறொரு சமயத்தில் கீழாகத் தாழ்ந்தும் போகிற சந்தை விலைகளின் ஊசலாட்டங்கள், தேவை-பரிமாற்றம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துள்ளது. மதிப்பிலிருந்து சந்தை விலைகளின் விலகல்கள் தொடர்ந்து நிகழ்கிறன. ஆடம் ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார்.
“இயற்கை விலைதான் அனைத்து சரக்குகளின் விலைகளையும் தொடர்ந்து ஈர்க்கின்ற மையவிலையாகும். வெவ்வேறு தற்செயல் நிகழ்வுகள் சரக்குகளின் விலைகளைச் சில வேளைகளில் இயற்கை விலைக்கு மேலாக நிறுத்தக்கூடும். சில வேளைகளில் அவற்றை இயற்கை விலைக்கு ஓரளவு கீழாக வலிந்து தாழ்ந்திடவும் கூடும். ஆனால், நிலைத்திருப்பதும் நீடித்திருப்பதுமான இந்த மையப்புள்ளியில் விலைகள் நிலைபெறுவதற்கு இடையூறு விளைவிக்கும் தடைகள் எத்தகையது ஆயினும் சரக்குகளின் விலைகள் இடையறாது இந்த மையத்தை நோக்கியே ஈர்க்கப்படுகிறது”.
[ஆடம் ஸ்மித் என்பவர் 1723-ற்கும் 1790-ற்கும் இடையில் வாழ்ந்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார மற்றும் தத்துவ அறிஞர் ஆவார். ஸ்காட்லாந்து மறுமலர்ச்சி அடைந்ததற்கான முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தார். அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடியான இவரைப் “பொருளாதாரத்தின் தந்தை” என்றும் அழைப்பர். அவர் எழுதிய “தேசங்களின் வளம்/சொத்து” என்னும் படைப்பு மிகவும் பிரபலமானதும், பொருளாதாரத்தில் முதல் நவீன படைப்பாகவும் கருதப்படுகிறது. இவரது கோட்பாடு “முழுமையான நன்மை-Absolute Advantage” எனப்படுகிறது.]
குறிப்பாகப் பார்க்கும்போது, தேவையும் பரிமாற்றமும் ஒன்றையொன்று சமன்படுத்திக்கொள்ளுமெனில், சரக்குகளின் சந்தைவிலைகள் அவற்றின் இயற்கை விலைகளோடு ஒத்துப்போகும். அன்றாட ஏற்ற இறக்கங்களைப் பரிசீலிக்காமல், நீண்டகாலத்துக்கான சந்தை விலைகளைப் பரிசீலித்தால் தேவையும் பரிமாற்றமும் எப்போதும் ஒன்றையொன்று சமன் செய்துகொள்வதோடு இயற்கை விலைகளிலேயே சந்தை விலைகள் அமைவதை உறுதிசெய்கின்றன. ஏற்ற இறக்கங்களின் அல்லது நிலையின்மையின் கால அளவு வேண்டுமானால் சரக்குகக்கு சரக்கு மாறுபடலாம். ஏகபோகங்களின் தாக்குதல்களையும் வேறுசில மாறுபாடுகளையும் தவிர்த்துப் பார்க்கும்போதே இந்த நிலைமைகள்.ஓரளவு நீண்டகால அளவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பொதுவாகப் பேசுவோமேயானால், அனைத்துவகைப்பட்ட சரக்குகளும் மமுறையே அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன. தனிப்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து, பல்வேறு தொழில்களின் நிலையான, வழக்கமான லாபங்களைக் கணக்கில் கொள்ளும்போது, லாபம் என்பது சரக்குகளின் விலையை அதிகரிப்பதால் கிடைக்கப்பெறுவது அல்லது சரக்குகளை அவற்றின் மதிப்பைக்காட்டிலும் கூடுதலான விலைக்கு விற்பதால் கிடைப்பது என்று கருதுவது முட்டாள்தனமானது.
பொதுமைப்படுத்திப் பார்த்தால், இந்தக் கருத்தமைப்பே அபத்தமானது எனத்தெரியும். ஒரு மனிதர் விற்பவர் என்ற வகையில் கூடுதல் விலையால் தொடர்ந்து பெறுகிற ஆதாயத்தை, வாங்குபவர் என்ற முறையில் அதே கூடுதல் விலையால் தொடர்ந்து இழந்துவிடுகிறார். விற்பவர்களாக மட்டும் இல்லாமல் வாங்குபவர்களாக மட்டும் அல்லது வேறுவார்த்தைகளில், உற்பத்தியாளர்களாக இல்லாமல் நுகர்வோர்களாக மட்டும் மனிதர்கள் உள்ளனர் என்பது பொருத்தமற்றது. (ஏனெனில், சமூக மனிதர் ஒவ்வொருவரும் ஏதாவதொருவகையில் சமூக உழைப்பைச் செலுத்துபவராகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூக உற்பத்தியிலோ அல்லது உருவாக்கத்திலோ பங்கேற்பவராக இருக்கிறார்). இதை மார்க்ஸ் அவர்கள் பகடியாக பின்வருமாறு கூறுகிறார்: நுகர்வோரான அந்த மனிதர்கள் உற்பத்தியாளர்களுக்குச் செலுத்தவேண்டியதை முதலில் அவர்களிடமிருந்தே இலவசமாகப் பெற்றாகவேண்டும். ஒரு மனிதர் முதலில் உங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதன்பிறகு சரக்குகளை வாங்குவதன் மூலமாக அப்பணத்தை உங்களிடமே திருப்பித் தருகிறார் எனில், உங்கள் சரக்குகளை அதே மனிதருக்கு மிகவும் அதிகமான விலைக்கு வீற்பதன் மூலம் நீங்கள் ஒருபோதும் பணக்காரராகிவிட முடியாது. இத்தகைய பரிமாற்றம் நட்டத்தைக் குறைக்கலாம். ஆனால், லாபம் அடைய ஒருபோதும் உதவாது.
மேதை மார்க்ஸ் வடித்த கருத்தாக்கம்:
லாபங்களின் பொதுவான தன்மையை விளக்குவதற்கு, சராசரியாக சரக்குகள் அவற்றின் உண்மையான விலைக்கே விற்கப்படுகின்றன. அவற்றை அவற்றின் மதிப்புகளுக்கே, அதாவது, அச்சரக்குகளில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் விகிதாச்சார அளவுக்கே விற்பதில் இருந்துதான் அந்த லாபங்கள் பெறப்படுகின்றன. இந்தக் கருத்தாக்கத்திலிந்து உங்களால் லாபத்தை விளக்க முடியவில்லையென்றால், உங்களால் எப்போதுமே அதை விளக்கமுடியாதென்கிறார், மார்க்ஸ். இது முரணுரையாகவும் அன்றாடம் நாம் காண்பதற்கு மாறானதாகவும் தோன்றுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதும் நீரானது எளிதில் தீப்பற்றக்கூடிய இரண்டு வாயுக்களால் ஆனது என்பதும்கூட முரணுரைதான்.
பொருட்களின் மாயமான தோற்றத்தை மட்டும் பற்றிக்கொள்ளும் அன்றாட அனுபவத்தை வைத்துத் தீர்மானித்தால் விஞ்ஞான உண்மையானது எப்போதுமே முரணுரைதான்.
[தோழர்களே! மார்க்சிய மெய்ஞானம், எழும், எழுப்பப்படும் அனைத்து கேள்விகள் மற்றும் அனுமானங்களைத் தர்க்க நியாயங்களாகவும் தர்க்க நியாயங்களை அறிவியல் பூர்வமான கோட்பாட்டு நெறிகளாக வளர்த்தெடுப்பதற்கான விஞ்ஞானமாகும். இந்த அடிப்படையே இங்கும் அரசியல் பொருளாதார அடிப்படைகளை வரையறுக்கவும் நெறிபடுத்தவும் கையாளப்பட்டுள்ளன].

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக