சனி, 27 பிப்ரவரி, 2021

மார்க்சியம் பயில்வோம் 3

                     மார்க்சிய படிப்பு வட்டம்

                           செங்கொடி மையம்

                                வகுப்பு எண்: 20

                                 நாள்: 20-02-2021

                அரசியல் பொருளாதாரம்

                     கூலி – விலை – லாபம்

அறிமுகம்:

தோழர்களே,

மார்க்சிய அரசியல் பொருளாதாரம், பொருளாதாரத்தை அரசியல் அதிகாரமாகவும் சமுதாய விடுதலையாகவும் வளர்த்தெடுக்கும் கோட்பாடு என்பது நமக்குத் தெரியும்.

மார்க்சிய அரசியல் பொரருளாதாரமானது பொருளாதாரம், அரசியல், சமூகம் இம்மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து, இயங்கி, மாறுவதை வரலாற்றுப் பொருள்முதல் ஞானத்துடன் நம்முன் வைக்கிறது.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம், நவீன சமுதாய அமைப்பான முதலாளித்துவ உடைமைச் சமூகத்தின் பகை முரண்களாக மூலதனத்தையும் கூலி உழைப்பையும் முன்னிருத்துகிறது. இவையே, வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளாகவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஆதாரமாகவும் விளங்குகின்றன.

மார்க்சியம், அரசியல் பொருளாதாரத்திலும் எங்கும் எதிலும் வழுவற்ற இயக்கவியல் கோட்பாட்டையே தனது உலகக் கண்ணோட்டமாகக் கொள்வதனாலேயே முரணற்ற ஆய்வுகளையும் வரையறைகளையும் தீர்க்க தரிசனங்களையும் முன்வைப்பதற்கு ஆதாரம். எனவே, இங்கு அவசியமான இயங்கியலின் மூன்றாவது கோட்பாடு எனும் “முரண்பாடுகள் பற்றி....” சிறிது பார்த்துவிடுவோம்!

“ஒவ்வொன்றும் இணைந்து, இயங்கி, மாறி, வளர்ந்துவரும் சூழலை நாம் பரிணாம வளர்ச்சி என்கிறோம்”. இவ்வளர்ச்சியை, வரலாற்று ரீதியான வளர்ச்சி என்றும் சுழலேணி முறையிலான வளர்ச்சி என்றும் மார்க்சியம் கூறுகிறது. இந்த இயக்கப் போக்கில் “சுய இயக்கச் சக்திகளை” நாம் அடையாளம் காண்பதும் அவற்றுக்கான “இயக்கவியல் வகை வளர்ச்சி விதிகளை”த் தீர்மானிப்பதும் விஞ்ஞானக் கண்ணோட்டம் ஆகிறது. இதைத்தான் மேதைமைமிக்க மார்க்ஸ் தனது அனைத்துப் படைப்புகளிலும் குறிப்பாக, “மூலதனத்தி”லும் செய்கிறார். அவர், “சுய இயக்கச் சக்திகளாக”த்தான் “மூலதனத்தையும் கூலியுழைப்பையும் காண்கிறார். இன்னும் குறிப்பாகச் சொன்னால், வளர்ச்சியின் வேகத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான், முதலாளித்துவ உற்பத்தியின் வேறான “பண்டத்தை-சரக்கை-யும் சந்தை விலை எனும் பரிமாற்ற மதிப்பையும் கையிலெடுக்கிறார்.

இவ்வாறாக, பொருட்களும் வர்க்க சமுதாயமும் கூட நிரந்தரமானவை அல்ல; அவற்றிற்கு ஒரு ஆரம்பநிலை, ஒரு பக்குவநிலை, ஒரு முதுமைப் பருவம் பிறகு, ஒரு முடிவு உண்டு.

“ஆகவே, வாழ்வு என்பதும் ஒரு முரண்பாடுதான். முரண்பாடென்பது எல்லாப் பொருட்களிலும் விஷயங்களிலும் பொதிந்திருக்கிறது. அது, இடையறாது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது; தன்னைத்தானே தீர்த்துக் கொள்கிறது. எப்பொழுது முரண்பாடு தீர்கிறதோ அந்தக் கணமே வாழ்வு முடிவுபெற்று சாவு வந்துவிடுகிறது”. இது ஏங்கெல்ஸின் மொழிவு.

இதுவே, எதிர்மறைகளின் நிலையுறுத்தல். இந்த நிலையுறுத்தலே, நிலைமறுத்தலாகவும் நிலைமறுத்தலின் நிலைமறுத்தலாகவும் வளர்சியடைகின்றது. எனவே, பொருட்களுக்குள்ளேயே, சமுதாயத்திற்குள்ளேயே முரண்பாடு அடங்கியிருப்பதால் அவை மாறுதலும் வளர்ச்சியும் அடைகின்றன.


      

மாமேதை மார்க்ஸின் கூலி-விலை-லாபம்  

5) கூலியும் விலைகளும் (பக்35 – 38)

நண்பர் வெஸ்டனின் வாதங்களை அவற்றின் மிக எளிய கருத்தியல் கூற்று எனும் வடிவத்தில் சுருக்குவோமானால், அவை பின்வரும் வரட்டுக் கோட்பாட்டில் அடங்கிவிடும்:

“சரக்குகளின் விலைகள் கூலியினால் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ஒழுங்கமைக்கப்படுகின்றன”.

இந்த தகர்ந்த, தவறான, பழைய வாதத்திற்கு நம்மிடம் நடைமுறை அனுபவங்கள் சாட்சியாக உள்ளன.

இங்கிலாந்தின் விவசாயத் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த கூலி பெற்றபோதும் அவர்களின் அவர்களின் உற்பத்திப் பொருட்களைப் பிறநாட்டுப் பொருட்களைவிட அதிக விலைக்கு விற்கின்றனர். அதே வேளையில், இங்கிலாந்தின் ஆலை முதலாளிகள், சுரங்க உரிமையாளர்கள், கப்பல் கட்டுவோர் இன்னும் இவர்போன்றோர் தம் தொழிலாளர்களுக்கு, ஒப்பீட்டளவில் உயர்ந்த கூலியை வழங்கியபோதும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைப் பிற நாடுகளைவிட மலிவாகவே விற்கின்றனர். சராசரியாகப் பார்த்தால், விலையுயர்ந்த உழைப்பு, விலை குறைந்த சரக்குகளை உற்பத்தி செய்கிறது; விலை குறைந்த உழைப்பு, விலையுயர்ந்த சரக்குகளை உற்பத்தி செய்கிறது என்பதை வெவ்வேறு நாடுகளின் சரக்குகளை ஒப்பிட்டும், ஒரே நாட்டிலுள்ள வேறு சரக்குடன் ஒப்பிட்டும் காட்டமுடியும். இதற்கு சில விதிவிலக்குகள் இருந்தபோதும், அவையும் வெளித்தோற்றமே, உண்மையல்ல. ஆயினும், ஒரு நிகழ்வில் உழைப்புக்கான அதிக விலையே சரக்கின் குறைவான விலைக்குக் காரணம் என்றும், மற்றொரு நிகழ்வில் உழைப்புக்கான குறைந்த விலையே சரக்கின் அதிக விலைக்குக் காரணம் என்றும் இது நிரூபித்துவிடாது. ஆனால், அனைத்து நிகழ்வுகளிலும், உழைப்புக்கான விலை சரக்கின்  விலையைத் தீர்மானிப்பதில்லை என்பதை இது நிரூபிக்கும் என்றபோதிலும் இந்த அனுபவவாத வழிமுறையைப் பயன்டுத்துவது நமக்குச் சற்றும் தேவையற்றது.

“சரக்குகளின் விலைகள் கூலியால் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ஒழுங்கமைக்கப்படுகின்றன” என்ற வெஸ்டனின் வாதத்தை மறுக்கலாம். உண்மையாகப் பார்த்தால், ஒருபோதும் அதனை அவர் வகுத்தளிக்கவில்லைதான்.

இதற்கு மாறாக, “உற்பத்தியாளருக்கான லாபமும் நில வாடகையும்கூட சரக்குகளின் விலையில் உட்பொதிந்த பகுதிதான். ஏனென்றால், சரக்குகளின் விலையிலிருந்துதான் தொழிலாளியின் கூலியை மட்டுமின்றி, முதலாளியின் லாபத்தையும் நிலவுடைமையாளரின் வாடகையும்கூட கொடுத்தாக வேண்டும்” என்று அவர் கூறினார். அவருடைய கருத்தின்படி, விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?

முதலாவது கூலியால்; அடுத்ததாக, முதலாளியின் சார்பாக ஒரு கூடுதல் சதவீதமும் நிலவுடைமையாளரின் சார்பாக மற்றொரு கூடுதல் சதவீதமும் சேர்ந்துகொள்கின்றன. ஒரு சரக்கில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளியின் கூலி 10 எனக்கொண்டால், லாபம் 100 சதவீதம் எனில், மேலும் ஒரு 10-ம், நிலவாடகை 100 சதவீதமெனில், மேலும் ஒரு 10-ம் சேர்த்து சரக்கின் விலை 30-ஆக இருக்கும். ஆனால், இத்தகைய விலை நிர்ணயம் கூலி அடிப்படையில் அமைந்ததாகவே ஆகும். இந்நிகழ்வில் கூலி 20 ஆனால், சரக்கின்விலை 60-ஆக ஆகும். இவ்விதம் , கூலியே விலையைத் தீர்மானிக்கிறது எனும், 'வறட்டுக் கோட்பாட்டை' எடுத்துரைத்த அரசியல் பொருளாதாரதின் கிழடுதட்டிய எழுத்தாளர்கள் அனைவரும் லாபத்தையும் நில வாடகையையும் கூலியுடன் வெறுமனே ஒரு சதவீதமாகச் சேர்க்கப்படும் ஒரு அளவாகவே கருதிக்கொண்டு, அக்கோட்பாட்டை நிரூபிக்க முயன்றனர். என்றாலும், அவர்களுள் எவராலும் அந்த சதவீத வரம்புகளை எந்தவொரு விதியாகவும் வகுத்துத் தர இயலவில்லை. அதற்கு மாறாக, அவர்கள்,  லாபம் என்பது மரபு வழியினால், நடைமுறை பழக்கத்தால், முதலாளிகளின் விருப்பத்தால் அல்லது அதுபோன்ற தன்னிச்சையான, காரண வழிப்படாத பிறிதொரு வழிமுறையினால் முடிவு செய்யப்படுகிறது என்றே எண்ணுவதாகத் தெரிகிறது.

லாபம் என்பது முதலாளிகளுக்கு இடையிலான போட்டியால் முடிவு செய்யப்படுகிறது என வலியுறுத்துவார்கள் எனில், அவர்கள் உறுப்படியாக ஏதும் சொன்னதாகக் கணக்கில் கொள்ளப்படாது. அந்தப் போட்டியானது, நிச்சயமாக, வெவ்வேறு துறைகளில் நிலவும் வெவ்வேறு வீதங்களை சமன்படுத்துவதாகவே, அதாவது, அவற்றை ஒரு சராசரி மட்டத்துக்கு கொண்டுவருவதாகவே உள்ளது. ஆனால், அதனால், அந்தச் சராசரி லாப மட்டத்தையே தீர்மாக்கவோ அல்லது பொது லாப வீதத்தையே தீர்மானிக்கவோ ஒருபோதும் முடியாது. 

சரக்குகளின் விலைகள் கூலியினால் தீர்மாக்கப்படுகின்றன என்று சொல்வதால் நாம் (வெஸ்டன் சார்பாக) விரும்புவது என்ன?

கூலி என்பது உழைப்பின் விலைக்கு ஒரு பெயரே ஆகும். அதாவது, சரக்குகளின் விலைகள் உழைப்புக்கான விலையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதே நாம் சொல்லவரும் கருத்து. ஆனால், “விலை” என்பது பரிவர்த்தனை மதிப்பாகும். மதிப்பைப்பற்றிப் பேசும்போதெல்லாம் தான் எப்போதும் பரிவர்த்தனை மதிப்பைப் பற்றியே பேசுவதாக மார்க்ஸ் கூறுகிறார். எனவே, மேற்கண்ட வரையறுப்பு இவ்வாறாகிறது:

“சரக்குகளின் மதிப்பு உழைப்பின் மதிப்பினால் தீர்மானிக்கப்படுகிறது” அல்லது “உழைப்பின் மதிப்பே, மதிப்பின் பொதுவான அளவீடு ஆகும்”.

அப்படியானால், அந்த “உழைப்பின் மதிப்பு”  அதனளவில் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

இங்கே நாம்(மார்க்ஸ் உட்பட) தலைகுத்தி நின்றுவிடுகிறோம். ஆமாம், தர்க்க ரீதியாக நாம் பகுத்தாய முயன்றால், நிலைகுத்தி நிற்கவே செய்கிறோம். இருந்தும், இந்தக் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் தர்க்கரீதியான சிந்தனைபற்றிக் கவலைப்படவில்லை(வெற்று அனுமானங்களையே முன்வைத்தனர்).

நண்பர் வெஸ்டனையே எடுத்துக்கொண்டால், முதலில் அவர், கூலியே சரக்குகளின் விலையைத் தீர்மானிக்கிறதென்றும் அதன் விளைவாக, கூலி உயரும்போது விலைகளும் உயர்தாக வேண்டுமென்றும் நமக்குச் சொன்னார். அதன் பிறகு, கூலி உயர்வது நல்லதன்று காரணம், அதனால் சரக்குகளின் விலைகள் உயர்ந்துவிடுகின்றன; காரணம், கூலி எந்தச் சரக்குகளுக்காகச் செலவிடப்படுகிறதோ அவற்றின் விலைகளைக்கொண்டே அளவிடப்படுகிறது என்று நமக்குக் காட்ட தன் கூற்றைப் புரட்டிப் போட்டார். இவ்வாறு, நாம்(வெஸ்டனின் பார்வையால்) உழைப்பின் மதிப்பு சரக்குகளின் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்று சொல்லத் தொடங்கி, சரக்குகளின் மதிப்பு உழைப்பின் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்று சொல்லி முடித்தோம். இவ்வாறாக, நாம் முடிவுபெறாத ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வந்து இறுதியில் எந்த முடிவுக்கும் வராதுபோனோம்.

ஒட்டுமொத்தத்தில், உழைப்பு, தானியம் அல்லது வேறு ஏதேனுமொரு சரக்கின் மதிப்பை, அளக்கக்கூடிய பொதுவான அளவுகோலாகவும் ஒழுங்கமைப்பியாகவும் கூலியைக் கொள்வதன் மூலம் நாம் சிக்கலைத் தட்டிக்கழிக்கவே செய்கிறோம் என்பதே உண்மை. ஏனெனில், தன்னளவில் இனிமேல் தீர்மானிக்கப்ப வேண்டிய (இதுவரைத் தீர்மானிக்கப்படாத) ஒரு மதிப்பைக்கொண்டு மற்றொரு மதிப்பைத் தீர்மானிக்கிறோம்.

“கூலி, சரக்குகளின் விலைகளைத் தீர்மானிக்கிறது” எனும் வறட்டுக் கோட்பாட்டை மிகவும் அருவமான சொற்களில் வெளிப்படுத்தினால், “மதிப்பே மதிப்பைத் தீர்மானிக்கிறது” எனப் பெறப்படும். இந்த வெற்றுச் சொல்லடுக்கு “மதிப்பை”ப் பற்றி உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது என்ற பொருளையே தருகிகறது.

இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்கிறபோது, அரசியல் பொருளாதாரத்தின் பொது விதிகள்பற்றிய அனைத்து தர்க்க நியாயங்களும் வெற்றுப் பிதற்றலாகவே ஆகிவிடுகின்றன. எனவே, மேதைமைமிக்க ரிக்கார்டோ( Ricardo)  அவர்கள், 1817-ல் வெளியிட்ட “அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள்” (The Principles of Political Economy) எனும் தம் நூலில் “கூலியே விலையைத் தீர்மாணிக்கிறது” எனும் பழைய, பெருவழக்கான, புழுத்துப்போன, தவறான வாதத்தை அடிப்படையிலேயே தகர்த்துவிட்டார். இந்தத் தவறான வாதத்தை, ஆடம் ஸ்மித்தும் (Adam Smith) அவரது ஃபிரென்ச் முன்னோடிகளும் அவர்தம் ஆய்வுகளின் உண்மையான அறிவியல்பூர்வமான பகுதிகளில் தவிர்த்திருந்தனர். ஆனால், சாதாரண பொதுக்கொள்கை விளக்கங்களில், கொச்சைப்படுத்திய அத்தியாயங்களில் அதனை அப்படியே மறு-ஆக்கம் செய்தனர்.

( டேவிட் ரிகார்டோ, 1772 முதல் 1823-ஆம் வாழ்ந்த பிரிடிஷ் பொருளாதார அறிஞராவார். பொருளாதார அறிஞர்களான தாமஸ் மால்தூஸ், ஆடம் ஸ்மித், ஜேம்ஸ் மில் போன்றவர்களின் வரிசையில் முக்கியமானவராவார். அவர் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பாராளுமன்றங்களின் உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மெய்மை பொருளாதாரத்தால் அனேக சோசலிஸ்டுகளைக் கவந்தவராவார். அவரால் செல்வாக்கு செலுத்தப்பட்டவர்களே மால்தூஸ், கீய்ன்ஸ், பியாரோ சரஃபா இன்னும் பலர்).

[தோழர்களே! இந்தத் தலைப்பில் மீண்டும் ஒருமுறை உற்பத்தி-கூலி-விலை-லாபம் முதலியவற்றை எளிய தர்க்க நியாயத்தால் மாமேதை மார்க்ஸ் நிறுவியுள்ளார்)


                      6) மதிப்பும் கூலியும்

மார்க்ஸ் அவர்கள், பிரச்சினையின் உண்மையான தன்மைகள்பற்றி விளக்க வேண்டிய கட்டத்துக்குத் தான் இப்போதுதான் வந்துள்ளதாகவும் அதைத் திருப்திகரமாகச் செய்ய அரசியல் பொருளாதாரத்துறை முழுக்க உட்ச்சென்று விளக்கவேண்டும் என்பதால் பிரச்னையின் முதன்மைக் கூறுகளை மட்டும் தொட்டுக்காட்டிப் போவதாகவும் சொல்கிறார்.

நம்முன்னுள்ள கேள்வி: ஒரு சரக்கின் மதிப்பென்பதென்ன? அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

முதல் பார்வையில், சரக்கின் மதிப்பென்பது மற்றெல்லாச் சரக்குகளுடனான உறவுகளில் வைத்துப் பரிசீலிக்கும் ஒப்பீட்டளவாகவே தோன்றும். அதாவது, பரிவர்த்தனையின்போது ஒன்றோடொன்று செய்துகொள்ளும் விகிதாச்சார அளவாகவே தோன்றும். அப்படியானால், இந்த விகிதாச்சாரங்கள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன?

ஒரு குறிப்பிட்ட சரக்கான கோதுமையை எடுத்துக்கொண்டால், ஒரு குவார்ட்டர் கோதுமையானது பல்வேறு பொருட்களான பட்டு, தங்கம் வேறெந்தச் சரக்கைக்கொண்டு மதிப்பிட்டாலும் அதன் விகிதாச்சாரம் மாறிக்கொண்டே செல்வதே அனுபவமாகும்.

இவ்வாறில்லாமல், கோதுமையின் பரிவர்த்தனை மதிப்பை, வெவ்வேறு பண்ங்களுடனான பரிவர்த்தனை வீதங்களிலிருந்து மாறாமல் தனித்து விளங்கவைக்க வேண்டுமானால், இந்தச் சமன்பாடுகளுக்கான புதியவடிவில் வெளியிடுவதற்கு சாத்தியமான ஒன்றைக் காணவேண்டும்.

ஒரு குவார்ட்டர் கோதுமையானது, ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில், குறிப்பிட்ட அளவு இரும்பின் மதிப்பில் தெரிவிக்கப்படுகிறது என்றால், கோதுமையின் மதிப்பும் அதற்குச் சமதையான இரும்பின் மதிப்பும் மூன்றாவதாக ஒரு பொருளுக்குச் சமம் என்றும் அந்த மூன்றாவது பொருள் இரும்பாகவோ அல்லது கோதுமையாகவோ இருக்கமுடியாது என்பதும் பொருளாகும். 

அதாவது, அவ்விரண்டும் ஒரே பரிமானத்தை இருவேறு வடிவங்களில் வெளியிடுவதாகத் தான் கருதுவதாக மார்க்ஸ் சொல்கிறார். அதாவது, இரும்பு, கோதுமை ஆகிய இரண்டில் எந்தவொன்றையும் பிரிதொன்றைச் சாராமலே, பொதுவான அளவுகோலாக, இந்த மூன்றாவதான பொருளுக்குச் சமன்படுத் வேண்டும்,

இதைப் புரியவைக்கும் உதாரணமாக, Geometry எனும் வடிவக் கணிதத்தை மார்க்ஸ் முன்வைக்கிறார். உதாரணமாக, முக்கோணத்தின் பரப்பளவை வெவ்வேறு கோண வடிவங்களான சதுரம், செவ்வகம் மற்றும் பலகோண வடிவங்களுடன் ஒப்பிடும்போது அதன் வடிவத்திற்கு முற்றிலும் வேறான ஒரு கோவை(Expression)யாகச் சுருக்கியபின் இந்த பரப்பளவைக் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முக்கோணங்களாகப் பகுத்து பல்வேறுபட்ட பலகோண வடிவங்களின் பரப்பளவை ஒப்பிட முடியும் என்கிறார். எனவே, முக்கோணத்தின் பரப்பளவிற்கான கோவை, அடிப்பக்கத்தை (Base-B) யும் உயத்தை(Length-L)யும் பெருக்கி பாதியாக்கவேண்டும் (1/2LB) என்பதை முன்கொணர வேண்டும்.

இதே வகையான செயல்முறை கொண்டு சரக்குகளின் மதிப்பைப் பெறவேண்டும். அதாவது, அனைத்து சரக்குகளின் மதிப்புகளையும் அவற்றிற்குப் பொதுவான ஒரு கோவையாக நம்மால் சுருக்க இயலவேண்டும். அந்தப் பொதுவான அளவீட்டு மதிப்பைச் சரக்குகள் தம்மகத்தே எந்த விகிதாச்சாரங்களில் கொண்டுள்ளன என்று மட்டுமே வேறுபடுத்துவதாக இருக்கவேண்டும். இதுவே நிபந்தனை.

சரக்குககளின் பரிவர்த்தனை மதிப்புகள் பொதுவாகவே, அப்பொருட்களின் சமூக செயல்பாடுகளாகவே உள்ளன. சரக்குகளின் இயல்பான பண்புகளுக்கும் (இரும்பு, கோதுமை, தங்கம் ஆகியவை வெவ்வேறான பண்புகளும் பயனும் கொண்டவை)அவற்றின் பரிவர்த்தனை மதிப்புகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே, நாம் கேட்கவேண்டிய கேள்வி:

அனைத்துச் சரக்குகளிலும் அடங்கியுள்ள பொதுவான சமூக உள்ளடக்கக் கூறு என்ன?

                       அதுதான் உழைப்பு!

ஒரு சரக்கை உற்பத்தி செய்ய, ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பு அதன்மீது செலுத்த அல்லது செலவிடப்பட வேண்டும். அதைத், தான் 'உழைப்பு' என்று மட்டும் சொல்லவில்லை என்றும் அதைச் 'சமூக உழைப்பு' என்று சொல்தாகவும் மார்க்ஸ் கூறுகிறார்.

தன் சொந்த உடனடிப் பயன்பாட்டுக்கெனவும் தானே நுகர்வதற்கெனவும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யும் மனிதன் படைப்பது ஒரு “உற்பத்திப் பொருள்”தானே தவிர அது “சரக்கு” அல்ல. சுய தேவையை நிறைவு செய்யும் ஒரு உற்பத்தியாளன் என்ற முறையில் அவனுக்குச் சமூகத்துடன் எந்தவித உறவும் இல்லை. ஆனால், ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஒரு மனிதன் ஏதேனுமொரு சமூகத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யவேண்டும். அவனுடைய உழைப்பேகூட, சமுதாயம் செலவிடும் ஒட்டுமொத்தக் கூட்டு உழைப்பில் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக இருக்கவும் வேண்டும். அவ்வுழைப்பு சமுதாயத்திற்குள் நிலவும் உழைப்புப் பிரிவினைக்கு உட்பட்டு இருக்கவும் வேண்டும். பிற உழைப்புப் பிரிவினைகள் இல்லாமல் இவனுடைய உழைப்பு ஒன்றுமே இல்லை. அதேவேளையில், அவ்வுழைப்பு தன் பங்குக்கு உழைப்புப் பிரிவினைகளை முழுநிறைவாக்கவும் தேவைப்படுகிறது.

சரக்குகளை, மதிப்புகளாக நாம் கருதுகிறோம் எனில், ஈடேற்றம்பெற்ற நிலைப்படுத்தப்பட்ட (சமூக சராசரி மட்டத்திற்கு வந்த) அல்லது நீங்கள் விரும்பினால், இறுகிய உருவம்பெற்ற, சமூக உழைப்பு எனும் பிரத்யேகமான (தனிப் பண்புகள் கோண்ட) ஒற்றைப் பண்புக்கூறின் அடிப்படையில்தான் அவ்வாறு கருதுகிறோம். இதைப் பொறுத்தவரையில், அதிகமான அல்லது குறைவான அளவுள்ள உழைப்பினை உருவகிப்பதன் அடிப்படையில் மட்டுமே சரக்குகள் வேறுபடமுடியும்; உழைப்பின் தன்மையிலல்ல. உதாரணம்: செங்கல், பட்டுக் கைக்குட்டை.

ஆனால், பரிமாணங்களை எவ்வாறு அளவிடுவது? அந்த உழைப்பு நீடிக்கும் நேரத்தைக் கொண்டு. அதாவது, மணியால், நாளால், இன்னும்பிற நேர அளவீடுகளால் உழைப்பினை அளவிடலாம்.

இந்த அளவுகோலைப் பயன்படுத்துவதற்கு, அனைத்து வகையான உழைப்பும் சராசரி உழைப்பாக அல்லது எளிய உழைப்பாக மாற்றப்பட்டு, அதனைத் தம் அளவீட்டு அலகாக (Unit)க் கொண்டுள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே, நாம் கீழ்க்காணும் முடிவுக்கு வந்து சேர்கிறோம்: ஒரு சரக்கானது சமூக உழைப்பின் இறுகிய வடிவம் என்பதால் அச்சரக்கு ஒரு மதிப்பைக் கொண்டுள்ளது.

சரக்கினுடைய மதிப்பின் அல்லது அதனுடைய ஒப்பீட்டு மதிப்பின் மகத்துவம் என்பது அச்சரக்கில் அடங்கீயுள்ள சமூக உள்ளடக்கக்கூறு (சராசரி உழைப்பு) அதிக அளவினதா அல்லது குறைந்த அளவினதா என்பதைப் பொருத்தது. அதாவது, அச்சரக்கின் உற்பத்திக்கு அவசியப்படும் உழைப்பின் ஒப்பீட்டுப் பொருண்மையைப் பொறுத்தது. எஎனவே, சரக்குககளின் ஒப்பீட்டு மதிப்புகள் அந்தந்த சரக்குகளில் செலுத்தப்பட்ட ஈடேற்றம்பெற்ற,  நிலைப்படுத்தப்பட்ட உழைப்பின் பரிமாணம் அல்லது அளவினால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரே நேர அளவிலான உழைப்பினால் உற்பத்தி செய்யக்கூடிய சரக்குகளின் ஒப்புநிலை அளவுகள் (Comparitive Measures) சமமாகவே இருக்கின்றன. அல்லது ஒரு சரக்கின் மதிப்பிற்கும் இன்னொரு சரக்கின் மதிப்பிற்கும் இடையிலான விகிதாச்சாரம், அந்தந்த சரக்கில் பொதிந்துள்ள உழைப்பின் அளவுகளுக்கு இடையிலான விகிதாச்சாரமே.

சரக்குககளின் மதிப்பைக் கூலியால் தீர்மானிப்பதற்கும் அவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பின் ஒப்பீட்டு அளவுகளைக் கொண்டு தீர்மானிப்பதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு!

உழைப்புக்கான வெகுமதி என்பதும் உழைப்பின் அளவு என்பதும் முற்றிலும் தொடர்ப்படுத்த முடியாத அளவீடுகள். எடுத்துக்காட்டாக, 1729-ல் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் என்ற அறிஞர் எடுத்துரைத்த உதாரணத்தையே தோழர் மார்க்ஸ் இங்கு கையால்கிறார்: ஒரு குவாட்டர் கோதுமை மற்றும் ஒரு அவுன்ஸ் தங்கம் இவை இரண்டும் சம மதிப்புள்ள அல்லது சமதை எனில், அவை முறையே, இத்தனை நாட்கள் அல்லது இத்தனை வாரங்கள் செலவிட்ட சம அளவிலான சராசரி உழைப்பின் இறுகிய வடிவங்கள் என வைத்துக்கொள்வோம். இதில் இரண்டின் ஒப்பீட்டு மதிப்பை நிர்ணயிப்பதில் விவசாயி, தொழிலாளி ஆகியோரின் கூலிகள் எந்த விதத்திலும் கணக்கில் கொள்ளப்படவில்லை. எவ்வாறு வழங்கப்பட்டதென்னறோ, கூலியுழைப்புகூட ஈடுபடுத்தப்பட்டதா, சமமான கூலி வழங்கப்பட்டதா, அப்படியே வழங்கப்பட்டிருந்தாலும் உற்பத்தி செய்த சரக்குகளின் மதிப்பிலிருந்து சாத்தியமான அனைத்து விகிதாச்சாரங்களிலிருந்தும் விலகிச் செல்லக்கூடும். அது, அரை, கால், மூன்றிலொன்று, நான்கிலொன்று என்ற ஏதேனுமொரு விகிதமாக இருக்கக்கூடும். எவ்வாறாயினும் அவர்கள் உற்பத்தி செய்த சரக்குகளின் மதிப்புகளை விஞ்சுபவையாக இருக்க முடியாது. அவர்களது கூலிகள் உற்பத்தி செய்த பொருட்களின் மதிப்பினால் வரம்பிடப்படும்; ஆனால், அவர்களது உற்பத்திப் பொருட்களின் மதிப்புகள் கூலியினால் வரம்பிடப்படுவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்புகள் எந்தச் சரக்கானாலும் அவற்றின் ஒப்பீட்டு மதிப்புகள், உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் மதிப்பை, அதாவது, கூலியை எவ்வகையிலும் கணக்கில் கொள்ளாமல் முடிவு செய்யப்பட்டதாகவே இருக்கும். எனவே, சரக்குகளின் மதிப்புகளை அவற்றில் பொதிந்துள்ள உழைப்பின் ஒப்பீட்டு அளவுகளைக் கொண்டு தீர்மானிப்பதானது, சரக்குகளின் மதிப்புகளை உழைப்பின் மதிப்பைக் கொண்டு அதாவது, கூலியைக் கொண்டு தீர்மானிக்கும் வெற்று சொல்லடுக்கு முறையிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு வழிமுறையாகும்.

ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைக் கணக்கிடுவதில், கடைசியாக ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் அளவோடு, அச்சரக்கின் கச்சாப் பொருளில் ஏற்கனவே செலுத்தப்பட்ட உழைப்பின் அளவையும் உழைப்பைச் செலுத்துவதற்கு உதவியாக இருந்த கருவிகள், துணைக் கருவிகள், எந்திரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு பஞ்சு-நூலின் மதிப்பானது, நூற்பு நிகழ்முறையின்போது, பஞ்சுடன் சேர்க்கப்பட்ட உழைப்பின் அளவு, பஞ்சில் ஏற்கனவே ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவு, பயன்படுத்தப்பட்ட நிலக்கரி, எண்ணெய், பிற துணைப்பொருட்கள் ஆகியவற்றில் ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவு, நீராவி எந்திரம், நூற்புக் கதிர்கள், ஆலைக் கட்டிடம் இன்னபிறவற்றில் அடங்கியுள்ள உழைப்பின் அளவு ஆகிய இவை அனைத்தின் இறுகிய வடிவமே, மதிப்பாகும்.

உற்பத்திக் கருவிகள் என்று முறையாக அழைக்கப்படுகிற கருவிகள், எந்திர சாதனங்கள், கட்டடங்கள் போன்றவை நீண்ட காலமோ, குறுகிய காலமோ திரும்பத் திரும்ப நடைபெறும் உற்பத்தியின் நிகழ்முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுகின்றன. கச்சாப் பொருட்களைப்போல் முழுதும் பயன்படுத்தப்படுமெனில், அப்பொருளின் ஒட்டுமொத்த மதிப்பும் அவற்றின் உதவியால் உற்பத்தி செய்யப்டும் சரகுகளுக்கு உடனடியாக மாற்றப்படுகின்றன. ஆனால், முழுமையாகப் பயன்படுத்தப்படாத நூற்புக்கதிர் போன்ற தொடர்ந்து, படிப்படியாகப் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பொருத்தவரையில், சராசரியாக அது பயன்படுத்தப்பட்ட காலம் மற்றும் அந்தக் காலகட்டத்தில் ஒரு நாளில் அதன் சராசரி விரயம்/ தேய்மானம் இவற்றின் அடிப்படையில் அதன் சராசரி மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த மதிப்பானது, ஒரு பவுண்டு நூலில் ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் அளவாகச் சேர்க்கப்படுகிறது. இந்த விஷயம் இப்போதைய நோக்கத்திற்குப் போதுமானது என மார்க்ஸ் முடிக்கிறார். அதாவது, சரக்கின் மதிப்பில் சேர்க்கப்படும் அனைத்து மதிப்புகளும் இங்கு பட்டியலிட்டு விளக்கப்பட்டுவிட்டன.

ஒரு சரக்கின் மதிப்பு, அதன் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது. எனில், அதில் ஈடுபட்ட மனிதனின் சுறுசுறுப்பும் திறமையும் அந்த மதிப்பைப் பாதிப்பதாகத் தோன்றலாம். அதாவது, சுறுசுறுப்பும் திறமையும் உள்ள மனிதன் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை விரைவில் முடிப்பதால் அதன் மதிப்பு குறைவாகவும் சோம்பேறியாகவும் திறமையற்றவராகவும் உள்ளவரின் உழைப்பின் மதிப்பு கூடுதலாக இருப்பதுபோல் தோன்றக்கூடும் இது மாபெரும் பிழையான பார்வை என்கிறார், மார்க்ஸ். “உழைப்பை”ச் “சமூக உழைப்பு” என்ற அடைமொழியில் பயன்படுத்துவதாகவும் அதில் பல கூறுகள் இருப்பதாகவும் அவர் சொல்கிறார். “சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் குறிப்பிட்ட சமூக சராசரி உற்பத்தி நிலைமையின்கீழ் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின், குறிப்பிட்ட சமூக சராசரிப் பணி மும்முரத்துடனும் குறிப்பிட்ட சராசரித் திறமையுடனும்  ஒரு சரக்கை உற்பத்தி செய்ய அவசியமான உழைப்பின் அளவைத்தான் சரக்கினுள் பொதிந்துள்ள இறுகிய உழைப்பு என்கிறோம்.

(இந்த ஏற்பாடு, கைத்தறிக்கும் விசைத் தறிக்குமான ஒரே பருத்தி நெசவுத் துணியில் கண்கூடாகத் தெரியும். சில சிறப்பான பயன்பாட்டிற்கான நெசவைத் தவிர, கைத்தறி வழக்கொழிந்து போவது கூடுதல் உழைப்பு நேரத்திற்கான கூடுதல் கூலியோ, சரக்கிற்கான கூடுதல் விலையோ கிடைக்காததால்தான்).

எனவே, சரக்குகளில் செலுத்தப்பட்ட, சமூக ரீதியில் அவசியமான உழைப்பின் அளவானது சரக்குகளின் பரிவர்த்தனை/ சந்தை மதிப்புகளை ஒழுங்குபடுத்துகிறது எனில், அச்சரக்கை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பில் ஏற்படும் ஒவ்வோர் அதிகரிப்பும் அச்சரக்கின் மதிப்பைக் கூட்டவேண்டும். அதுபோல, உழைப்பில் ஏற்படும் ஒவ்வோர் குறைவும் அச்சரக்கின் மதிப்பைக் குறைக்க வேண்டும்.

உற்பத்திப் பொருளின் அளவைப் பொருத்தவரையில், ஒரு பொருளை உற்பத்திச் செய்யும் அவசியமான உழைப்பின் அளவைப் பொருத்து சமமாக இருக்கவேண்டுமாயினும், அது அவ்வாறு இருப்பதில்லை. ஏனெனில், எந்த ளவுக்கு சமூக உழைப்பின் உற்பத்தித் திறன்கள் அதிகமாக இருக்கின்றனவோ அந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட உழைப்பு நேரத்தில் உற்பத்தி செய்து முடிக்கப்படும் பொருட்களின் அளவும் அதிகமாக இருக்கின்றன. உற்பத்தித் திறன் குறையும்போது அளவு குறைகின்றது.

வெவ்வேறு தேசம் மற்றும் வெவ்வேறு மக்களின் வெவ்வேறு வகைப்பட்ட இயற்கை ஆற்றல்களையும் பாரம்பரியம் மற்றும் பயிற்சியினால் பெறப்பட்ட வேலைத்திறன்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உழைப்பின் உற்பத்தித்திறன்கள் முதன்மையாகக் கீழ்க்கண்டவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். அவை:

1) மண்ணின் வளம், சுரங்கங்களின் வளம் இன்னும் இதுபோன்ற உழைப்பின் இயற்கைவள நிலைமைகள்;

2) தொடர்ந்து முன்னோக்கி மேம்பபட்டுவரும் உழைப்பின் சமூக சக்திகள். அதாவது, பெருவீத அளவிலான உற்பத்தி, மூலதனத்தின் குவிப்பும் உழைப்பின் செர்க்கையும், உழைப்புப் பிரிவினை, எந்திர சாதனம், மேம்பட்ட உற்பத்திமுறைகள், வேதியியல் மற்றும் அதுபோன்ற பிற இயற்கைச் சக்திகளின் பயன்பாடு, தவவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் நேரத்தையும் தூரத்தையும் குறுக்குதல், உழைப்பின் சேவைக்கு இயற்கைச் சக்திகளை உட்படுத்துகிற, உழைப்பின் சமூக அல்லது கூட்டுறவுப் பண்புகளை வளர்க்கிற எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பு இவற்றிலிருந்து தருவிக்கப்படுகிற உழைப்பின் சமூக சக்திகள்.

இவ்வாறாக, உழைப்பின் நேர அளவையும் உழைப்பின் உற்பத்தித்திறனையும் வைத்து ஒரு பொது விதியைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கலாம்:

“சரக்குகளின் மதிப்புகள், அவற்றின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் நேர அளவிற்கு நேர்விகிதத்தில் இருக்கும். ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தித்திறன்களுக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்”.

இப்போது, மதிப்பிலிருந்து அது மேற்கொள்ளும் விலைபற்றிப் பார்ப்போம்:

விலை என்பது மதிப்பின் பணக்குறீயீடு அல்லாமல் வேறில்லை.

குறிப்பிட்ட அளவிலான, உங்களது தேசிய உழைப்பு உறைந்துள்ள, குறிப்பிட்ட அளவிலான உங்களின் தேசிய உற்பத்திப் பொருட்களை,  தங்கம், வெள்ளியை உற்பத்தி செய்யும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா கண்டத்து நாடுகளின் குறிப்பிட்ட அளவிலான உழைப்பு உறைந்துள்ள குறிப்பிட்டவோ அளவிலான உற்பத்திப்பொருட்களான தங்கம், வெள்ளியில் பரிவர்த்தனை செய்துகொள்கிறீர்கள். இத்தகைய பண்டமாற்று வழியாகத்தான் அனைத்துச் சரக்குகளின் மதிப்பையும் தங்கம், வெள்ளியில் முறையே அவற்றில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் அளவுகளைக்கொண்டு குறிப்பிடக் கற்றுள்ளீர்கள். மதிப்பின் பணக்குறியீடான விலையைச் சற்றே கூர்ந்து நோக்கினால், மதிப்பை, விலையாக மாற்றுவதென்பது அனைத்து சரக்குகளின் மதிப்புகளுக்கும் சார்பற்ற ஒரே சீரான ஒரு வடிவத்தை நீங்கள் வழங்குவதற்கும் அவற்றைச் சமமான சமூக உழைப்பின் அளவுகளாக நீங்கள் குறிப்பிடுவதற்குமான ஒரு நிகழ்வுமுறை என்பதைக் காணலாம். விலையானது, மதிப்பின் பணக்குறியீடாக இருக்கும் வரையில் அதனை இயற்கை விலை என்று ஆடம் ஸ்மித் அழைத்தார்; அத்தியாவசிய விலை என்று விவசாய உற்பத்தியே அனைத்து வளங்களுக்கும் அடிப்படை என்று நம்பும்   ஃப்ரெஞ்சு ஃபிசியோகிராஃப்டுகள் அழைத்தனர்.

அப்படியானால், மதிப்புக்கும் சந்தை விலைக்குமான அல்லது இயற்கை விலைகளுக்கும் சந்தை விலைகளுக்குமான உறவு என்ன?

உற்பத்யாளர்களின் உற்பத்தி நிலைமைகள் வேறுபட்டபோதிலும் சந்தைவிலை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, ஒரு குறிப்பிட்ட அளவில் சந்தைக்கு வழங்குவதற்கு, சராசரி உற்பத்தி நிலைமைகளின்கீழ் தேவைப்படுகிற சமூக உழைப்பின் சராசரி அளவைத்தான் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட வகையிலான ஒரு சரக்கின் ஒட்டுமொத்தத்தைக் கொண்டே அது கணக்கிடப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு சரக்கின் சந்தை விலையானது அதன் மதிப்போடு பொருந்தியுள்ளது. மறுபுறம், மதிப்பு அதாவது இயற்கை விலைக்கு ஒருசமயத்தில் மேலாக உயர்ந்தும் வேறொரு சமயத்தில் கீழாகத் தாழ்ந்தும் போகிற சந்தை விலைகளின் ஊசலாட்டங்கள்,  தேவை-பரிமாற்றம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துள்ளது. மதிப்பிலிருந்து சந்தை விலைகளின் விலகல்கள் தொடர்ந்து நிகழ்கிறன. ஆடம் ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார்.

“இயற்கை விலைதான் அனைத்து சரக்குகளின் விலைகளையும் தொடர்ந்து ஈர்க்கின்ற மையவிலையாகும். வெவ்வேறு தற்செயல் நிகழ்வுகள் சரக்குகளின் விலைகளைச் சில வேளைகளில் இயற்கை விலைக்கு மேலாக நிறுத்தக்கூடும். சில வேளைகளில் அவற்றை இயற்கை விலைக்கு ஓரளவு கீழாக வலிந்து தாழ்ந்திடவும் கூடும். ஆனால், நிலைத்திருப்பதும் நீடித்திருப்பதுமான இந்த மையப்புள்ளியில் விலைகள் நிலைபெறுவதற்கு இடையூறு விளைவிக்கும் தடைகள் எத்தகையது ஆயினும் சரக்குகளின் விலைகள் இடையறாது இந்த மையத்தை நோக்கியே ஈர்க்கப்படுகிறது”.

[ஆடம் ஸ்மித் என்பவர் 1723-ற்கும் 1790-ற்கும் இடையில் வாழ்ந்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார மற்றும் தத்துவ அறிஞர் ஆவார். ஸ்காட்லாந்து மறுமலர்ச்சி அடைந்ததற்கான முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தார். அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடியான இவரைப் “பொருளாதாரத்தின் தந்தை” என்றும் அழைப்பர். அவர் எழுதிய “தேசங்களின் வளம்/சொத்து” என்னும் படைப்பு மிகவும் பிரபலமானதும், பொருளாதாரத்தில் முதல் நவீன படைப்பாகவும் கருதப்படுகிறது. இவரது கோட்பாடு “முழுமையான நன்மை-Absolute Advantage” எனப்படுகிறது.]

குறிப்பாகப் பார்க்கும்போது, தேவையும் பரிமாற்றமும் ஒன்றையொன்று சமன்படுத்திக்கொள்ளுமெனில், சரக்குகளின் சந்தைவிலைகள் அவற்றின் இயற்கை விலைகளோடு ஒத்துப்போகும். அன்றாட ஏற்ற இறக்கங்களைப் பரிசீலிக்காமல், நீண்டகாலத்துக்கான சந்தை விலைகளைப் பரிசீலித்தால் தேவையும் பரிமாற்றமும் எப்போதும் ஒன்றையொன்று சமன் செய்துகொள்வதோடு இயற்கை விலைகளிலேயே சந்தை விலைகள் அமைவதை உறுதிசெய்கின்றன. ஏற்ற இறக்கங்களின் அல்லது நிலையின்மையின் கால அளவு வேண்டுமானால் சரக்குகக்கு சரக்கு மாறுபடலாம். ஏகபோகங்களின் தாக்குதல்களையும் வேறுசில மாறுபாடுகளையும் தவிர்த்துப் பார்க்கும்போதே இந்த நிலைமைகள்.ஓரளவு நீண்டகால அளவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பொதுவாகப் பேசுவோமேயானால், அனைத்துவகைப்பட்ட சரக்குகளும் மமுறையே அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன. தனிப்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து, பல்வேறு தொழில்களின் நிலையான, வழக்கமான லாபங்களைக் கணக்கில் கொள்ளும்போது, லாபம் என்பது சரக்குகளின் விலையை அதிகரிப்பதால் கிடைக்கப்பெறுவது அல்லது சரக்குகளை  அவற்றின் மதிப்பைக்காட்டிலும் கூடுதலான விலைக்கு விற்பதால் கிடைப்பது என்று கருதுவது முட்டாள்தனமானது.

பொதுமைப்படுத்திப் பார்த்தால், இந்தக் கருத்தமைப்பே அபத்தமானது எனத்தெரியும். ஒரு மனிதர் விற்பவர் என்ற வகையில் கூடுதல் விலையால் தொடர்ந்து பெறுகிற ஆதாயத்தை, வாங்குபவர் என்ற முறையில் அதே கூடுதல் விலையால் தொடர்ந்து இழந்துவிடுகிறார். விற்பவர்களாக மட்டும் இல்லாமல் வாங்குபவர்களாக மட்டும் அல்லது வேறுவார்த்தைகளில், உற்பத்தியாளர்களாக இல்லாமல் நுகர்வோர்களாக மட்டும் மனிதர்கள் உள்ளனர் என்பது பொருத்தமற்றது. (ஏனெனில், சமூக மனிதர் ஒவ்வொருவரும் ஏதாவதொருவகையில் சமூக உழைப்பைச் செலுத்துபவராகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  சமூக உற்பத்தியிலோ அல்லது உருவாக்கத்திலோ பங்கேற்பவராக இருக்கிறார்). இதை மார்க்ஸ் அவர்கள் பகடியாக பின்வருமாறு கூறுகிறார்: நுகர்வோரான அந்த மனிதர்கள் உற்பத்தியாளர்களுக்குச் செலுத்தவேண்டியதை முதலில் அவர்களிடமிருந்தே இலவசமாகப் பெற்றாகவேண்டும். ஒரு மனிதர் முதலில் உங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதன்பிறகு சரக்குகளை வாங்குவதன் மூலமாக அப்பணத்தை உங்களிடமே திருப்பித் தருகிறார் எனில், உங்கள் சரக்குகளை அதே மனிதருக்கு மிகவும் அதிகமான விலைக்கு வீற்பதன் மூலம் நீங்கள் ஒருபோதும் பணக்காரராகிவிட முடியாது. இத்தகைய பரிமாற்றம் நட்டத்தைக் குறைக்கலாம். ஆனால், லாபம் அடைய ஒருபோதும் உதவாது.

மேதை மார்க்ஸ் வடித்த கருத்தாக்கம்:

லாபங்களின் பொதுவான தன்மையை விளக்குவதற்கு, சராசரியாக சரக்குகள் அவற்றின் உண்மையான விலைக்கே விற்கப்படுகின்றன. அவற்றை அவற்றின் மதிப்புகளுக்கே, அதாவது, அச்சரக்குகளில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் விகிதாச்சார அளவுக்கே விற்பதில் இருந்துதான் அந்த லாபங்கள் பெறப்படுகின்றன. இந்தக் கருத்தாக்கத்திலிந்து உங்களால் லாபத்தை விளக்க முடியவில்லையென்றால், உங்களால் எப்போதுமே அதை விளக்கமுடியாதென்கிறார், மார்க்ஸ். இது முரணுரையாகவும் அன்றாடம் நாம் காண்பதற்கு மாறானதாகவும் தோன்றுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதும் நீரானது எளிதில் தீப்பற்றக்கூடிய இரண்டு வாயுக்களால் ஆனது என்பதும்கூட முரணுரைதான்.

பொருட்களின் மாயமான தோற்றத்தை மட்டும் பற்றிக்கொள்ளும் அன்றாட அனுபவத்தை வைத்துத் தீர்மானித்தால் விஞ்ஞான உண்மையானது எப்போதுமே முரணுரைதான்.

[தோழர்களே! மார்க்சிய மெய்ஞானம், எழும், எழுப்பப்படும் அனைத்து கேள்விகள் மற்றும் அனுமானங்களைத் தர்க்க நியாயங்களாகவும் தர்க்க நியாயங்களை அறிவியல் பூர்வமான கோட்பாட்டு நெறிகளாக வளர்த்தெடுப்பதற்கான விஞ்ஞானமாகும். இந்த அடிப்படையே இங்கும் அரசியல் பொருளாதார அடிப்படைகளை வரையறுக்கவும் நெறிபடுத்தவும் கையாளப்பட்டுள்ளன].






மார்க்சியம் பயில்வோம் 2

                     மார்க்சிய படிப்பு வட்டம்

                           செங்கொடி மையம்

                                வகுப்பு எண்: 19

                                 நாள்: 13-02-2021


                அரசியல் பொருளாதாரம்

                     கூலி – விலை – லாபம்

அறிமுகம்:

மார்க்சியம், மனித சமுதாய விஞ்ஞானமாக பரிணமித்து மெய்ஞானம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, இயற்கையியல் என அனைத்து சமூகத்துறைகளிலும் இயக்கவியல் பொருள்முதல் கோட்பாடுகளை அடிப்படை நெறியாக்கியது.

மனித சமூக வாழ்வியலில், பொருளாதாரமே அடிப்படை எனும் வகையில், உற்பத்தி முறையையும் உற்பத்தி உறவுகளையும் அவற்றைக் கட்டமைத்து வழிநடத்தும் அரசையும் சமூக வாழ்முறையையும் வாழ்நிலையையும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், தனது அனைத்து கருத்தாக்கங்களிலும் செயலூக்கங்களிலும் வழிகாட்டுதல்களிலும் விளக்குவதை நெறியாகக் கொண்டுள்ளது.

இயற்கையோடு இணைந்த மானுட மேன்மை எனும் மைய நோக்குநிலையில், பொருளாதாரத்தை, அரசியல் அதிகாரத்தோடு இணைத்து, அனைத்து உழைக்கும் மக்களின் சமுதாய மேம்பாட்டையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் முன்னோக்கிச் செலுத்துவதை மார்க்சியம் தனது இயக்கும் கோட்பாடாகக் கொள்கிறது.

மார்க்சிய அணுகுமுறையில், அரசியல் பொருளாதார பகுப்பாய்வும் சமூக வரலாற்று ஆய்வுகளும் வர்க்கப் போராட்டத்தையும் பாட்டாளி  வர்க்க சர்வாதிகாரத்தையும் முன்வைப்பதால், “மூலதனம்”, “உழைப்பு” ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

“மூலதனம்” என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளை அதாவது, “உற்பத்திச் சாதனங்களை” (MEANS OF PRODUCTION) “உடைமை”யாகக் கொள்வதைக் குறிக்கிறது. “உழைப்பு” என்பது சுதந்திரமான கூலித் தொழிலாளர்களை (FREE WAGE LABOURERS), “பாட்டாளி”களைக் குறிக்கிறது.

“மார்க்சிய பொருளாதார போதனை என்பது நவீன சமுதாயத்தின் இயக்கத்திற்குரிய பொருளாதார விதிகளை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். “மூலதனம்” நூலின் இறுதியான நோக்கம் இதுவே” என தோழர் லெனின் மொழிகிறார்.

அவர் மேலும் தொடரும்போது, “வரலாற்றின் வழியே வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வதுதான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம்” என்கிறார்.

“முதலாளித்துவ உலகில் ஆட்சி செலுத்துவது பண்ங்களின் உற்பத்திதான். எனவே, மார்க்ஸ், பண்டத்தைப் பரிசீலிப்பதிலிருந்தே தனது பகுப்பாய்வைத் தொடங்குகிறார்”.

- தோழர் லெனின்.

              கூலி – விலை – லாபம்

                                      - கார்ல் மார்க்ஸ்

கடந்த 18-ஆம் வகுப்பில், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள இரண்டு தலைப்புகளான,

1) உற்பத்தியும் கூலியும்;

2) உற்பத்தி, கூலி, லாபம் பற்றிப் படித்தறிந்தோம். அதன் சுருக்கம் கீழே வருகிறது.

.1) “ தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று; மாறாத அளவும் மாறாத பரிமாணமும் கொண்டது”, என்றும்

.2) “மெய்யான கூலியின் அளவு – அதைக்கொண்டு வாங்க முடிகிற சரக்கின் அளவால் கணக்கிடப்படும் கூலியின் அளவு – மாறாத, நிலையான பரிமாணம் கொண்ட தொகையே”, என்றும்

.3) “தோழிலாளி வர்க்கம் போராடி, முதலாளி வர்க்கத்தை ₹40 மதிப்பிற்குப் பதிலாக, ₹50-ஐ பணக் கூலியாகக் கொடுக்கச் செய்தால், முதலாளியோ அதற்கு ஈடாக, விலையேற்றத்தின் மூலமாக, ₹50 மதிப்பிற்கான சரக்கிற்குப் பதிலாக, ₹40 மதிப்பிற்கான சரக்கையே தருவார். தொழிலாளி வர்க்கம், ₹40 கொடுத்து வாங்கிய சரக்கிற்குப் பதிலாக, ₹50-ஐக் கொடுத்து அதே அளவு சரக்கை வாங்கவேண்டும். ஏனென்றால், கூலியின் அளவு நிலையானது”, என்றும் 

.4) “ஒரு கிண்ணத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் சாப்பிடுவதற்கான சூப் குறிப்பிட்ட அளவு உள்ளது. அவர்கள் சாப்பிடும் கரண்டியின் உருவ அளவைப் பெரிதாக்குவதன் மூலம் சூப்பின் அளவு கூடிவிடாது”, என்றும்

.5) விவசாயத்தில் கூலியானது 100 சதவீதம் அதிகரிக்கப் போவதாவும் அதனால், விலைவாசி கடுமையாக உயரும் எனவும் இது இங்கிலாந்தில் நாசகார அழிவுகளையும் கூலியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் திரு. டேவிட் வெஸ்டன் முன்வைக்கிறார். இவை எந்த வகையிலும் கோட்பாட்டளவில் விளக்கப்பவில்லை; துணிபுரைகளாகவே முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் மார்க்ஸ் அவர்கள் அனுமானங்களாக்கி, தர்க்க ரீதியாகச் சான்றுகளை முன்வைத்துத் தகர்த்தெறிகிறார்.

குறிப்பாக,

                    “ தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று” என்பதையும் “கூலியின் மொத்த அளவு நிலையான பரிமாணம் கொண்டதாவே இருக்கும்” என்பதையும் எடுத்த எடுப்பிலேயே பிழையானவை என நிராகரிக்கிறார். எவ்வாறெனில், நாமே எளிமையாக அறிந்தவகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி( GROSS DOMESTIC PRODUCE-GDP) எப்போதுமே ஆண்டுக்காண்டு கணக்கிட்டாலும் சராசரி வேலை நாட்களின் அடிப்படையில் கணக்கிட்டாலும் உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவும் தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும். இந்த மாற்றத்திற்கான முக்கிய அம்சங்களாக, மார்க்ஸ் முன்வைப்பது,

1) மக்கள் தொகைப் பெருக்கம்;

2) தொடர்ந்த மூலதனத் திரட்டல்;

3) உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு.

மேலும், இவற்றில் ஒவ்வொன்றையோ அல்லது மொத்தமாக எல்லாவற்றையுமோ நிலையானதாக அனுமானித்தாலும் உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவு அன்றாடம் மாறும் தொழிற்சூழல்களாலும் சந்தை நிலவரங்களாலும் தொழிலாளர்களின் மாறும் ஈடுபாடு மற்றும் தேவைகளாலும் மாறியே ஆகவேண்டும்.

இதுபோலவே, உழைப்பின் கூட்டுமொத்தம் மாறவில்லை என்று அனுமானித்தாலும் அதன் பகுதிகளான, கூலியும் லாபமும் தங்களுக்குள் மாறக்கூடியவையே. எவ்வாறெனில், மாறாத உற்பத்திப் பொருளின் மதிப்பிற்குள் கூலி வீதமும் லாபத்தின் வீதமும் மாறிக் கொள்வதை உற்பத்தியின் வரம்பு கட்டுப்பத்தாது. உதாரணமாக, 100-ஆக உள்ள உற்பத்தியில், கூலி 60 ஆகவும் லாபம் 40 ஆகவும் கொண்டால் இந்த விகிதமே கூலி 50 ஆகவும் லாபம் 50 ஆகவும் மாறுவதை 100 எந்த விதத்திலும் தடுக்காது.

உற்பத்தியின் கூட்டு மொத்தம் போலவே கூலியின் மொத்த அளவு நிலையான பரிமாணம் கொண்டதாக இருக்காது.

இதை மேலும் தெளிவாக்க, நடைமுறையில் தொழிலாளர்கள் தங்களது கூலி உயர்வுக்காக, சங்கம் அமைத்துப் போராடிப் பெறுவதும் முதலாளி எப்போதும் தொழிலாளர்க்கான கூலி வெட்டைத் தற்காலிகமாகவேணும் தொடர்ந்து செலுத்த முயல்வது கண்கூடு. 

“ஒவ்வொரு கூலி வெட்டுக்கும் எதிரான போராட்டம் என்பது கூலி உயர்வுக்கான போராட்டமே!

இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, உற்பத்தியும் கூலி உயர்வும் கூலி வெட்டும்கூட முதலாளியின் விருப்பத்தாலோ, தொழிலாளியின் விருப்பத்தாலோ நிகழ்கிறது என்று அனுமானித்தாலும் இது இவர்களது விருப்பத்திற்கு எதிராகவும் நிகழ்வதும் சாத்தியம்தானே! மேலும், கூலியானது உற்பத்தி குறைந்த அமெரிக்காவில் கூடுதலாகவும் ஒப்பீட்டளவில் உற்பத்தி நிறைந்த இங்கிலாந்தில் குறைவாக இருப்பதும் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சிலும் இங்கிலாந்திலும் வேறு வேறாக இருப்பதையும் மார்க்ஸ் தர்க்கமாக்குகிறார்.

அவ்வாறே, முதலாளிகளின் விருப்பம் – உற்பத்தி முறையும் உற்பத்தி உறவுகளும் ஒரே விதமாக, முதலாளித்துவ முறையில் இருக்கும் நாடுகளுக்கு இடையில் – நாட்டுக்கு நாடு மாறுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். விருப்பத்தின் அடிப்படை என்பதற்கு நியாயம் கற்பிக்க,  விருப்பத்திற்கு அப்பாலும் செல்லவேண்டி இருக்குமென்றும் விருப்பத்திற்கு, இறைவனின் சித்தத்தை முன்வைப்பார்களேயானால் அது முடிவற்ற, தெளிவற்ற, பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூட நம்பிக்கை நோக்கியே செல்லும் என்பதால் இதனை பகுத்தறிவாளரான வெஸ்டனே ஏற்கமாட்டார் என நிறுவுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்டு அகிலத்தின் வேலை என்பது, முதலாளிகளின் விருப்பத்தைப் பேசிக்கொண்டிராமல், ஏனென்றால், அவர்களது விருப்பம் எப்போதுமே, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்பதை உறுதி செய்துகொண்டு, முதலாளியின் அதிகாரம் பற்றியும் அந்த அதிகாரத்தின் வரம்புகள் பற்றியும் அந்த வரம்புகளின் தன்மை பற்றியும் கேள்வி எழுப்புவதே என மார்க்ஸ் ஆணித்தரமாக வாதிடுகிறார்.


அடுத்ததாக, உற்பத்தி, கூலி, லாபம் என்ற பிரச்சினையில், மாறாத கூலி வீதத்தை நிறுவ, முதலாளி தனது பொருளின் சந்தை விலையை அதிகரிப்பதைக் காரணம் காட்டும்போது, மார்க்ஸ் அவர்கள், “கூலியின் அடிப்படை விலையை நிர்ணயிப்பது எது? என கேள்வி எழுப்புகிறார்.

தற்போதைய கூலி, ₹40 என்பது ₹50-ஆக ஆகிறது என்ற அதிகரிப்பிற்கு மாறும்போது, ₹40 சரக்கு ₹50-ஆக உயர்த்தப்பட்டுவிடுகிறது என்பதே அதற்காக முன்வைக்கப்படும் ஆதாரம். அப்படியானால், கூலியின் அடிப்படை ₹40-ஆக நிர்ணயிக்கப்பட்டது ஏன்? என்பதே அந்தக் கேள்வி. ஏன், அது ₹30-ஆகவோ, ₹20-ஆகவோ நிர்ணயிக்கப்படவில்லை. இது முதலாளியினதோ அல்லது தொழிலாளியினதோ விருப்பத்தின் அடிப்படையில் அல்ல என நிறுவப்பட்டபின் மார்க்ஸ் அவர்கள் முன்வைப்பது: “எந்தவொரு தருணத்திலும் உண்மையில் வழங்கப்பட்ட கூலித்தொகையானது எப்போதுமே துல்லியமாக, அவசியமாக வழங்கப்பட வேண்டிய கூலித்தொகைக்கு சமமாய் இருந்துள்ளது. அதிலிருந்து விலகிச் செல்லவில்லை” என்கிறார். அவ்வாறின்றி, “கூலித்தொகையின் வரம்பு வெருமனே முதலாளியின் விருப்பம் அல்லது பேராசையின் வரம்புகளைச் சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறது என்பது தன்னிச்சையான வரம்பாகும். அதில் அவசியமானது என்று ஏதுமில்லை.

தேசிய உற்பத்தி எனும் கிண்ணத்தில் நிரம்பியுள்ளள குறிப்பிட்ட அளவு சூப்பை,  அந்த உற்பத்தியில் ஈடுபட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பகிரும்போது கூலி உயர்வு எனும் கரண்டியின் அளவைப் பெரிதாக்குவதன் மூலம் உற்பத்தி எனும் சூப்பின் அளவு மாறாது என்று வெஸ்டன் கூறுகிறார்.

உண்மையில், தொழிலாளர்கள் உண்ணும் கிண்ணம் தேசிய உழைப்பின் ஒட்டுமொத்த உற்பத்தியால் நிரம்பியிருக்கிறது என்பதையும் அதிலிருந்து தொழிலாளர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதை, கிண்ணம் சிறியதாக இருப்பதோ, அதிலுள்ள சூப்பின் பற்றாக்குறையோ அல்ல என்றும் அவர்களின் கரண்டியின் உருவ அளவு சிறிதாய் இருப்பதுதான் என்பதை வெஸ்டன் வசதியாக மறந்துவிட்டார்.

சரக்கின் விலை உயர்வு அல்லது பொதுவாகச் சொன்னால், சரக்குககளின் விலையில் ஏற்படும் மாற்றங்களோ முதலாளியின் விருப்பத்தை மட்டுமே சார்ந்தில்லாமல் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் தேவை. இல்லையெனில், சந்தை விலைகளில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமும் இடையறாத ஊசலாட்டங்களுக்கும் தீர்க்க முடியாத புதிர்களுக்கும் ஆளாகிவிடும் (இன்றைய பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளே இதற்கு சாட்சி).

உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, ஈடுபடுத்தப்படும் மூலதனம், உழைப்பு அளவிலுமோ, உற்பத்திப் பொருட்களின் மதிப்பைக் கணக்கிடும் பணத்தின் மதிப்பிலோ எந்தவித மாற்றமும் இல்லை என்று வைத்துக்கொள்ளும் போதும் கூலி உயர்வானது சரக்குககளின் சந்தை விலையைப் பாதிக்கிறது. இதற்கான சாத்தியக் கூறே அந்த சரக்குகளுக்கான தேவை(Demand) க்கும் அச்சரக்குகளின் பரிமாற்றத்திற்(Supply) கும் இடையே உள்ள உண்மையான விகிதப் பொருத்தமாகும். இது ஒரு குறிப்பீட்ட மற்றும் தற்காலிகமான சூழலே ஆகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 1) தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடுகிறது; செலவிட்டே ஆகவேண்டும். எனவே, கூலிவீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வானது, அத்தியாவசியப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வோர் கூலி உயர்வுக்காக ஆன கூடுதல் செலவினை அவர்களது சரக்குகளின் சந்தை விலையை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டுகிறார்கள்.

.2) அத்தியவசியப் பொருட்களை உற்பத்தி செய்யாத, ஆடம்பரப் பொருட்களை உற்பத்தியோ இறக்குமதியோ செய்யும்  பெருமளவிலான முதலாளிகள் தங்கள் பொருட்களுக்கான தேவை குறைவதால் விலை வீழ்ச்சியையும் லாபக் குறைவையும் சந்திக்க வேண்டும். இவர்கள் வீழ்ச்சியடைந்த லாபத்தைக் கொண்டே, விலை அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களுக்குச் செலவிட வேண்டும். மேலும், முதலாளிகளின் சேவகர்களாக உள்ள அடியாட்கள் மற்றும் குதிரைகள்,  செல்லப் பிராணிகள் இன்னபிறவற்றிற்காக சாதரண நாட்களில் விரயமாக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் அளவு விலை ஏற்றத்தினால் கட்டுப்படும். மொத்தத்தில், தொழிலாளரின் பொதுவான கூலி உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதால், முதலாளிகளும் ஆடம்பரச் செலவுகளை செய்ய இயலாது. எனவே, 

3) தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் ஏற்படும் உயர்வால், முதலாளிகளின் லாப சரிகட்டல்களைத் தாண்டியும் அவர்களது லாப வீழ்ச்சிக்கே வித்திடும். இப்படித்தான், ஒருபுறம் ஏற்படும் லாப அதிகரிப்பு மறுபுறம் ஆன அதிகரித்த லாப வீழ்ச்சியாலும் பொதுவான சராசரி லாப விகித வீழ்ச்சியாலுமே சரிகட்டப்படும். அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரிப்பு என்பதும் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பு என்பதும் இதுவரை அவர்களால் நுகரப்படாத அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் ஏற்ட்ட விரிவாக்கத்தினாலேயே நடக்கிறது. 

இவ்வாறாக, தொழிற்துறையின் பல்வேறு பிரிகளில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனங்களுக்கான சராசரி லாபவிகித மாற்றம் பின்வரும், பொதுவான விளைவுகளை ஏற்படுத்தம்:

.i) மூலதனமும் உழைப்பும் குறைவான ஆதாயம் தரும் துறைகளிலிருந்து அதிகம் லாபம் தரும் துறைக்கு மாற்றப்படும். இந்த மாற்றம் தொழிற்துறையின் ஒரு பிரிவில் அதிகரிக்கும் தேவை( Demand)யின் விகிதத்திறகு ஏற்ப பரிமாற்றம்( Supply)  அதிகரித்து, பிற தொழிற் பிரிவுகளில் தேவையின் குறைவுக்கு ஏற்ப பரிமாற்றம் வீழ்ச்சியடையும் வரை நடைபெறும். இதனால், பல்வேறு தொழிற்துறைப் பிரிகளிலும் பொதுவான லாபம் சமப்படும்.

.ii) பல்வேறு பண்டங்களுக்கான தேவைக்கும் அவற்றின் வரத்து அல்லது பரிமாற்றத்திற்கும் இடையிலான விகிதத்தில் ஏற்பட்ட சாதாரண ஒரு மாற்றத்தில் தொடங்கியே, அனைத்து குழப்பங்களும் உருவானதால் இக் காரணம் முடிந்ததும் விளைவுகளும் முடிந்துவிடும். விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பி சமநிலையை அடையும்.

(iii) கூலி உயர்வின் விளைவாக, லாப வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது சில தொழிற் பிரிவுகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல் தொழிற்துறை முழுமைக்கும் பொதுவானதாய் ஆகிவிடும்.

(iv) நமது அனுமானத்தின்படி, உழைப்பின் உற்பத்தி திறனிலோ, ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவிலோ மாற்றம் இல்லாதபோதும் ஒட்டுமொத்த உற்பத்தியின் வடிவம் மட்டும் மாறியிருக்கும்.

                               ( அல்லது)

சிறு பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருளுக்காக பரிவர்த்தனை செய்யப்பட்டு, அந்த வடிவிலேயே நுகரப்படும்.

                                  ( அல்லது)

உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்குப் பதில் வெளிநாட்டு அத்தியாவசியப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கும்.

கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு சந்தை விலைகளின் தற்காலிகக் குழப்பத்திற்குப் பின் சரக்குகளின் விலைகளில் எவ்வித நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், லாப வீதத்தின் பொதுவான வீழ்ச்சியில்தான் போய் முடியும்.

இதேபோல், விவசாயத்திலும் கூலி உயர்வு, சரக்குகளின் விலையை உயர்த்தவில்லை. சமயத்தில் கூலி உயர்வின்போதே சரக்குகளின் குறிப்பாக, விவசாய விளைபொருட்களின் விலை முந்தைய விலையைவிட வீழ்ச்சி அடையவும் செய்கின்றன. மேலும், அவசிய வேலை நேரக் குறைப்பின் போதும்கூட (1848-ல் 10 மணி நேரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது), அது இங்கிலாந்தின் தொழிற்துறையிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் நாசங்களை ஏற்படுத்தும் என வல்லுநர்களும் பொருளாதாரப் பேராசிரியர்களும் கணித்தார்கள். ஆனால், உண்மையில் வெவ்வேறான விளைவுகளே ஏற்பட்டன. குறிப்பாக, வேலைநாட்களின் நேரம் குறைக்கப்பட்ட போது ஆலைத் தொழிலாளர்களின் பணக்கூலி உயர்ந்தது; ஆலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் அதிகரித்தது; அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்தன; தொழிலாளர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது; அவர்கள் உற்பத்தி செய்த சரக்குகளுக்கு இதுவரை கண்டிராத அளவுக்குச் சந்தைகள் விரிவடைந்து முன்னேற்றம் கண்டன.

பின்னாளில், 1860-ல் நடைபெற்ற விஞ்ஞான மேம்பாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டபொருளாதார அறிஞர்களும் பேராசிரியர்களும் மேற்கண்டவற்றை ஒப்புக்கொண்டதோடு, தாங்கள் கணித்தது தவறென்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஒருபடி, மேலே சென்று “மக்களின் உள்ளுணர்வே வென்ற”தென்றார்கள்.

( அரசியல் பொருளாதாரத்தின் அரிச்சுவடிகளான உற்பத்தி, கூலி, லாபம் அடங்கிய இரண்டு தலைப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்து, மார்க்ஸ் அவர்களின் சொற்பொழிவின் உள்ளுணர்வை கிரகித்து, தெளிவு பெற்று தொகுத்துள்ளேன்.

அடுத்தடுத்த தலைப்புகளுக்குள் போவதற்கு முன்பாக, மேற்கண்டவற்றுள் புரிதல் அவசியம் என்பதாலேயே இந்தச் சிரத்தை. தோழர்களும் இதே ஆர்வத்தையும் அக்கரையையும் பெறுவார்களாக!)

அடுத்த 2 தலைப்புகள்:

.3) கூலியும் நாணயமும்

.4) பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும் ................



                      .3) கூலியும் நாணயமும்


பொதுவான கூலி உயர்வின் விளைவாக, அந்தக் கூலியினைக் கொடுப்பதற்கு அதிக நாணயம் தேவைப்படும் என்று வெஸ்டன் கூறுகிறார்.

அவரது வாதம் வறட்டுத்தனமானது என்பது அவரது கூற்றுகளிலிருந்தே மெய்யாகிறது. அதாவது, முதலில், தொழிலாளியின் பணக்கூலி அதிகரித்த போதிலும் அவனுக்கு கிடைத்துவந்த சரக்குகள் நிலையான அளவுடையதாக இருந்ததால் சிக்கல்; தற்போது, சரக்குகள் ஒரே அளவுடையதாக இருந்தபோதும் அதிகரித்த பணக்கூலியால் சிக்கல்(முன்னுக்குப் பின்னாக முரண்கள்).

எவ்வாறியினும், நம் முன்னுள்ள “கூலி உயர்வும் அதன் விளைவுகளும்” என்ற ஆய்வுப் பொருளோடு இந்த நாணயச் சிக்கலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காட்ட மார்க்ஸ் விழைகிறார்.

ஐரோப்பா கண்டத்தில், வேறெந்த நாட்டையும்விட இங்கிலாந்தில் பணப்படுவாடாச் செயல்நுட்பங்கள்(Transaction Techniques) மிகப்பெருமளவு செம்மைபட்டுள்ளன. ஒரேயளவு மதிப்புத்தொகையைச் சுற்றுக்கு விடவும் அதே அளவிற்கோ அல்லது அதைவிடப் பெரும் அளவு வணிகப் பரிமாற்றத்திற்கும் மிகக் குறைந்த நாணயமே தேவைப்படுகிறது. இதற்காக, விரிவடைந்த, ஒருமுகப்படுத்தப்பட்ட வங்கி அமைப்புமுறை செயல்படுகிறது.

உதாரணமாக, கூலியை எடுத்துக்கொள்வோம். ஒரு ஆங்கிலத் தொழிலாளி அவருடைய வாரக்கூலியாகக் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அவரோ, வாரந்தோறும் அதை வங்கியாளருக்கு அனுப்புகிறார். வங்கியாளர் வாரந்தோறும் அதனை ஆலை அதிபருக்குத் திருப்பி அனுப்புகிறார். ஆலை அதிபரோ மறுபடியும் தம்முடைய தொழிலாளர்களுக்கு ககூலியாக வழங்குகிறார். இந்தச் சுற்று தொடர்ந்து நடக்கிறது (இந்தியாவிலும் கிட்டத்தட்ட வார, மாத ஊதிய நடைமுறைகளும் இதையே ஒத்திருப்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்).

ஒரு தொழிலாளியின் ஆண்டுக் கூலி 52 பவுன் என்று வைத்துக்கொண்டால் மேற்கண்ட ஏற்பாட்டின்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு வட்டத்தில் சுற்றிவரும் ஒற்றைச் சவரனைக் கொண்டு ஓராண்டு கூலியை வழங்கிவிட முடிகிறது. (இங்கிலாந்தின்  சில நூற்றாண்டு கால காலனியாக இருந்த இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் ஆட்சிமுறை அச்சு அசலான ஆங்கிலப் பிரதி என்பதை நாம் அவதானிப்பதுடன் மார்க்ஸ் அவர்களின் ஆய்வை ஆழ்ந்து இந்திய நாணயச் செலாவணி உதாரங்களுடனேயே அப்படியே பொருத்திப் புரிந்துகொள்வது மிகவும் நல்லதும் சிறப்பானதும் ஆகும்).

சில விவசாய மாவட்டங்களில் எங்கு “பட்டுவாடா செயல் நுட்பம்” செம்மையாக இல்லையோ அங்கு வெறுமனே ஆலைகள் மட்டுமே நிறைந்த மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவு மதிப்புகளைச் சுற்றோட்டத்தில் செலுத்த மிக அதிகமான நாணயம் தேவைப்படுகிறது. (இந்தியாவின் டிஜிட்டல் மயம் என்பது 100 நாள் கூலி முதல், மானியங்கள், நிவாரணங்கள், உதவித் தொகைகள் எனப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் நாணயச் செலாவணியை கட்டுக்குள் வைக்கவும் அதை நினைத்த வகையில் திசைவழிப்படுத்தவுமே என்பதைக் கூர்ந்து நோக்கவேண்டும்).

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐரோப்பா கண்டம் சென்றால், அங்கே பணக்ககூலியானது இங்கிலாந்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதையும் ஆனால், அதே அளவுக்கான பணக்கூலியைச் சுற்றோட்டத்தில் செலுத்த ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் இங்கிலாந்தைவிட மிக அதிகமான நாணயங்கள் தேவைப்படுகிறது. காரணம், இங்கிலாந்தைப் போலல்லாமல், செலாவணியில் ஈடுபடுத்தப்படும் அதே சவரன் தொகையை அதே வேகத்தில் வங்கியாளர் குறுக்கிட்டுப் பெறுவதோ, தொழிற்துறை முதலாளிக்கு திருப்பி அனுப்புவதோ இல்லை. இங்கெல்லாம் 25 பவுன் ஆண்டுக் கூலியைச் சுழற்சியில் விட 3 சவரன் தேவைப்படலாம். ஆனால், உண்மையில் நாம் தீர்க்கவேண்டிய பிரச்சினை இதுவல்ல என்பது நமக்குத் தெளிவாகிறது.

அன்றைய இங்லாந்தின் உழைக்கும் வர்க்கத்தின் ஆண்டு வருமானத்தை 25 கோடி பவுன் என்று மார்க்ஸ் அவர்கள் தனது மிகச் சிறந்த கணக்கீடுகளைக் கொண்டு கணிக்கிறார். இந்த பெருந்தொகையானது, 30 லட்சம் பவுன் நாணயம் மூலமாகச் சுற்றோட்டத்தில் செலுத்தப்படுகிறது. இதுவே, 50 சதவீதம் கூலிவுயர்வு ஏற்படப் போகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூடுதலாக ஒரு 15 லட்சம் பவுன் நாணயம் தேவைப்படும். மொத்தத்தில் 45 லட்சம் பவுன்கள்தான்.

தொழிலாளியின் அன்றாடச் செலவுகளில் கணிசமான பகுதி வெள்ளி, செம்பு ஆகிய நாணயங்களில்தான் நடைபெறுகிறது. சொல்லப்போனால், வெறும் அடையாள வில்லை( Token)கள் மூலமாக நடைபெறுகிறது. தங்கத்தோடு இவற்றின் ஒப்பீட்டு மதிப்பென்பது எப்போதுமே, மாற்றவியலாத(Vouchers, Bonds, இத்யாதி)காகிதப் பணத்தின் ஒப்பீட்டு மதிப்பைப்பபோல(நிர்ணயமற்ற, குத்து மதிப்பான) சட்டத்தைக்காட்டி பாரபட்சமாகத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால், 50 சதவீத கூலி உயர்வுக்காக, 15 லட்சம் பவுன் கூடுதல் தேவை என்பதற்குப் பதிலாக, 10 லட்சம் பவுனே போதுமானது.

இங்கிலாந்து அரசு வங்கியில் அல்லது தனியார் வங்கியாளர்களின் நிலவறைகளில் தங்கப் பணம் அல்லது நாணயத்தின் வடிவில் தூங்கிக் கொண்டிருக்கும் 10 லட்சம் பவுன் சுழற்சிக்கு வரும். ஆனால், அந்தப் 10 லட்சம் பெறுமான கூடுதல் நாணயங்களை அச்சிடும் வகையிலோ, அவற்றின் தேய்மான, சேதார(Damaged or soiled notes) வகையிலோ ஏற்பட வேண்டிய சில்லுண்டி( Miscellaneous ) செலவுகளும்; கூடுதல் நாணயத் தேவையால் வேறுயேதுனும் சங்கடம் என்றால் அந்தச் செலவும் இதனால் தவிர்க்கப்டுகிறது.

இங்கிலாந்தின் நாணயச் செலாவணி( பணப் பறிமாற்றம்) இருபெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது( இந்திய நிலைமையும் இதுதான் ).

ஒருவகை, பல்வேறு மதிப்புகளில் வெளியிடப்படுகிற( நமது ரூபாய் நோட்டுக்களைபோல) வங்கி நோட்டுகளைக் கொண்டது. இச்செலாவணி, வணிகர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களிலும் நுகர்வோர்களிடமிருந்து வணிகர்களுக்குச் செலுத்தப்படும் பெரிய அளவிலான செலுத்துகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு வகைப்பிரிவு, சில்லறை வணிகத்தில் புழங்குகிற உலோக நாணயங்களைக் கொண்டது. முற்றிலும் வெவ்வேறானவை என்ற போதிலும் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படுகின்றன. இவ்வாறாக, பெரிய அளவிலான செலுத்துகையிலும்கூட 5 பவுனுக்கு கீழான சில்லறைத் தொகைக்கு தங்க நாணயம் மிகப்பரவலாகப் புழங்குகிறது. நாளையே, 4, 3, 2 பவுன் நோட்டுகள் வெளியிடப்படுமானால், இச்சுற்றோட்டத்தின் வழித் தடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிற தங்கம் உடனடியாக அவற்றிலிருந்து வெளியேற்றப்படும்.பணக்கூலி உயர்வின் விளைவாக, அவை எங்கு தேவைப்படுகிறதோ அந்த வழித்தடங்களில் அது பாயும். எனவே, 50 சதவீத கூலி அதிகரிப்பின் விளைவாகத் தேவைப்படும் 10 லட்சம் பவுனும் ஒற்றைச் சவரன்கூட புதிதாய் சேர்க்கப்படாமல் புழக்கத்தில் வழங்கப்பட்டுவிடும். லங்காஷயரில் (யார்க்ஷயர்-தொழில் நகரங்கள்) பல ஆண்டு காலம் புதிய வங்கி நோட்டுகள்கூட கூடுதலாக அச்சடிக்கப்படாமல் பில் மற்றும் வவுச்சர்களை சுற்றோட்டத்தில் விட்டு பரிமாற்றம் நடத்தப்பட்டதைப்போல இப்போதும் செய்யலாமென மார்க்ஸ் முன் வைக்கிறார்.

திரு. வெஸ்டன் முன்பு சொன்னதுபோல விவசாயத்தில் 100 சதவீத கூலி உயர்வானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வெகுவாக அதிகரிக்கச் செய்யுமெனில், இந்த நிலைமையிலும் கூடுதல் நாணயம் கொள்முதல் செய்யப்படவில்லை ஆயின், நாம் நிறுவியது போலான விலை வீழ்ச்சியானது நாணயங்களைப் பெரிதும் நிலவறைகளுக்கு அப்புறப்படுத்தும் அல்லது முடங்கச் செய்யும்.

1858 முதல் 1860 வரையிலான காலம் பருத்தித் தொழிலுக்கு மிகவும் செழிப்பான காலமாகவும் அதனடிப்படையில் 1860-ஆம் ஆண்டு வணிகத்துறை வரலாற்றில் ஈடு இணையற்ற ஆண்டாகவும் அதேவேளையில் மற்றெல்லா தொழிற்கிளைகளுமே செழித்தோங்கியும் வளர்ந்தன.  பருத்தித் தொழிலாளருடையவும் அதனோடு தொடர்புடைய மற்றெல்லா தொழிலாளருடையவுமான கூலியும் 1860-ல் மற்றெல்லா ஆண்டுகளையும்விட அளவுக்கு அதிகமாக இருந்தன. அமெரிக்க நெருக்கடி வந்தது. அவர்களது மொத்த கூலியானது முன்பு அவர்கள் வாங்கியதில் 4-ல் 1 பங்காக திடீரெனக் குறைக்கப்பட்டன. இதுவே, எதிர் திசையில் கூலி உயர்வாக நிகழ்ந்திருந்தால் 300 சதவீத கூலி உயர்வாக இருந்திருக்கும். கூலியானது 5-லிருந்து 20-ஆக உயர்ந்தால்  300 சதவீதம் உயர்ந்ததாகச் சொல்கிறோம். 20-ல் இருந்து 5-ஆகக் குறைந்தால் 75 சதவீதம் வீழ்ந்ததாகக் கூறுகிறோம்.

ஆனால், ஒரு நிகழ்வில் உயர்ந்திட்ட தொகையும் அதன் எதிர் நிகழ்வில் வீழ்ந்திட்ட தொகையும் ஒரே அளவுதான். அது 15 ஷில்லிங்குகள்தான். ஆக, கூலி வீதத்தில் இதற்குமுன் எப்போதும் கண்டிராத மாற்றமாக இது இருந்தது. அதேவேளையில், பருத்தித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை மட்டுமின்றி அத்தொழிலை மறைமுகமாகச் சார்ந்துள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் கணக்கில் கொண்டால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையானது விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைவிட அரை மடங்கு அதிகம்.

ஆனால், இந்தக் காலத்தில் கோதுமையின் விலை குறையவில்லை. 1858 முதல் 1860 வரையான 3 ஆண்டுகளில் ஒரு குவார்ட்டர் கோதுமையின் ஆண்டு சராசரி விலை 47 ஷில்லிங் 8 பென்சு. 1861 முதல் 1863 வரையிலான 3 ஆண்டுகளில் ஒரு குவார்ட்டர் கோதுமையின் ஆண்டு சராசரி விலை 55 ஷில்லிங் 10 பென்சாக உயர்ந்தது.

நாணயத்தைப் பொருத்தவரையில் நாணயச் சாலையில் (Mint – தங்கசாலை – சென்னையும்கூட) 1860-ல் 33,78,102 பவுன்கள் அச்சிடப்பட்டதற்குப் பதில் 1861-ல் 86,73,232 பவுன்கள் அச்சிடப்பட்டன.  அதாவது, 1860-ஐக் காட்டிலும் 1861-ல் 52,95,130 பவுன்கள் அதிகம் அச்சிடப்ட்டன. 1861-ல் இருந்த வங்கி நோட்டுகளின் சுழற்சி 1860-ல் இருந்ததைக் காட்டிலும் 13,19,000 பவுன் குறைவு என்பது உண்மைதான். இதை விட்டுவிட்டுப் பார்த்தாலும்கூட செழுத்தோங்கிய 1860-வுடன் ஒப்பிட்டால், 1861-ல் 39,76,130 அல்லது 40 லட்சம் பவுன் உபரி நாணயம் மிஞ்சியுள்ளது. ஆனால், இதே காலத்தில் இங்கிலாந்து வங்கியின் தங்கக் கையிறுப்பானது சரியாக அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏறத்தாழ, அதே அளவிற்கு குறைந்தது.

இன்னுமொரு கணக்கீடாக, 1862-ஆம் ஆண்டை 1842-வுடன் ஒப்பிடலாம். 1862-ல் ஒருபுறம் சுழற்சி (சுற்றோட்டம்)யில்  இருந்த சரக்குகளின் மதிப்பும் அளவும் வெகுவாக அதிகரித்தன. மறுபுறத்தில், இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இரயில்வே துறையின் பங்குகள், கடன்கள் இன்னபிறவற்றுக்கான பரிமாற்றங்களில் செலுத்தப்பட்ட மூலதனம் மட்டும் 32 கோடி பவுனை எட்டியது. 1842-ல் இதுவொரு நம்பமுடியாத தொகை. இருப்பினும், 1862-லும் 1842-லும் புழங்கிய நாணயச் செலாவணியின் மொத்த தொகைகள் ஏறத்தாழ சமமாகவே இருந்தன. ஆக, சரக்குகளின் மதிப்பு மட்டுமின்றி,  பொதுவாகப் பணப்பரிமாற்றங்களின் மதிப்பும் மிகவும் பிரம்மாண்ட அளவில் அதிகரிக்கும்போது, நாணயச் செலாவணி மேலும் மேலும் வீழ்ச்சியடைகிறது. இதை வெஸ்டன்தான் கவனிக்கத் தவறிவிட்டார்.

இந்த கூலி Vs நாணயம் என்ற பிரச்சினையைச் சற்று ஆழமாகப் பார்த்தால், கீழ்க்காணும் உண்மைகள் தெளிவாகின்றன.

கூலித்தொகை நிலையானது என்று வைத்துக்கொண்டு, அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்

1) சுழற்சியில் இருக்கவேண்டிய சரக்குகளின் மதிப்பும் பரிமாணமும் கணக்கு முடிக்கப்பட(பட்டுவாடாசெய்ய)வேண்டிய பணப்பரிமாற்றங்களின் அளவும் பொதுவாகத் தினமும் மாறுகின்றன;

2) வெளியிடப்படும் வங்கி நோட்டுகளின் அளவும் தினமும் மாறுகிறது;

3) பணவடிவிலான பரிமாற்றம் ஏதுமின்றி, மாற்று ஆவணங்களான உண்டிகள், காசோலைகள், பற்று-வரவுக் கணக்குகள், வங்கிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் ஈடேறுகிற பணக் கொடுப்புகளின் தொகை தினமும் மாறுபடுகின்றது;

4) உண்மையில் தேவைப்படும் உலோக நாணயத்தைப் பொருத்தவரையில், புழக்கத்திலுள்ள நாணயத்துக்கும் வங்கி நிலவறைகளில் சேமிப்பிலிருக்கும் அல்லது அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் நாணயம், தங்கம் ஆகியவற்றுக்கும் இடையிலான விகிதம் தினமும் மாறுகின்றது;

5) தேசிய புழக்கத்தில் ஈர்த்துக்கொள்ளப்படும் தங்கத்தின் அளவும்  சர்வதேசப் புழக்கத்துக்கு அனுப்பிவைக்கப்படும் தங்கத்தின் அளவும் தினமும் மாறுபடுகின்றன.

(இவையெல்லாம் வெஸ்டனின் கண்களில் படவில்லை)

மேலும், அளவு மாறுபடாத நாணயச் செலாவணி எனும் அவரது வறட்டுக் கோட்பாடு மிகவும் பிழையானது மற்றும் அன்றாட மாற்றங்களுக்கு மாறுபட்டது.

நாணயச் செலாவணியின் விதிகளைப் பற்றிய தமது தவறான புரிதலை கூலி உயர்வுக்கு எதிராகத் திருப்புகிறார். அதற்குப் பதிலாக, இடையறாது மாறும் சூழலுக்கு ஏற்ப நாணயச் செலாவணியானது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் விதிகளை அவர் ஆய்ந்திருக்கவேண்டும்.

¶தோழர்களே! மேதைமை மிக்க மார்க்ஸ் அவர்கள் தனது அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் மானுடத்தின்மீது கொண்ட அளவற்ற காதலாலும் வறட்டுத்தனமிக்க வெஸ்டனின் வாதங்களை மறுப்பதோடன்றி மதிப்புமிக்க புள்ளிவிபரங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்து தனது ஆய்வை நிவுகிறார். தலைப்பென்னவோ சுருக்கமாக இருந்தாலும் விபரங்களும் தர்க்கரீதியான வாதங்களும் மதிப்புமிக்வையும் சமகாலத்திற்குப் பொருந்துவனவும் ஆகும்.

மீண்டும் மீண்டும் வாசித்து, உரையாடுங்கள்                                        4) பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும்

திரு. வெஸ்டன் தனது இரண்டாவது உரையிலும் வரட்டுக் கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கூறுவதாகவும் ஆகவே, அந்த வரட்டுக் கோட்பாட்டை எளிமையான கருத்தியல் வடிவில் சுருக்கிச் சொல்லப்போவதாகவும் பேரறிஞர் மார்ஸ் இங்கு தொடங்குகிறார்.

வெஸ்டன் தனது வாதங்களைத் திறனாய்வற்ற முறையில் முன்வைப்பதாக, மார்க்ஸ் கூறுகிறார். அதற்கு வெஸ்டனின் ஒற்றைக் குறிப்பை முன்வைக்கிறார்.

கூலியில் ஏற்படும் உயர்வினை எதிர்த்து அல்லது அத்தகைய உயர்வினால் விளையும் அதிகக் கூலியை எதிர்த்து அவர் வாதிடுகிறார். அதிகமான கூலி என்பது என்ன? 

உதாரணமாக, வாரத்திற்கு 5 ஷில்லிங் என்பதை குறைந்த கூலியென்றும் வாரத்திற்கு 20 ஷில்லிங் என்பதை அதிக கூலியென்றும் சொல்வதேன்?

5-ஐ 20-தோடு ஒப்பிடுகையில் குறைவானது எனில், 20-ஐ 200-ரோடு ஒப்பிடுகையில் இன்னும் குறைவானதாகும். 

எனவே, கூலியையும் லாபத்தையும் பொருத்தவரையில் வெஸ்டன் அவர்கள், பொருளாதார விதிகளிலிருந்து இவற்றுக்கான அளவுகோல்களைத் தருவிக்க வேண்டும். அப்படிச் செய்யாத தவற்றோடு கூடவே, அவற்றைப் பரிசீலிக்கவேண்டிய அவசியத்தையும் அவர் உணரவில்லை. கூலிகளின் பரிமாணங்களை அளவிடக்கூடிய ஒரு திட்டமான அளவுகோளுடன் ஒப்பிட்டுதான் கூலியானது அதிகம் அல்லது குறைவு என்று சொல்லமுடியும் என்பது சொல்லாமலே விளங்கும்.

இப்போது, நம்முன்னுள்ள கேள்வி என்னவெனில், ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கூலியாகக் கொடுக்கப்படுவது ஏன்? என்பதே. இதற்கு வெஸ்டன்,  “இது பரிமாற்றம்(வரத்து) – தேவை (Supply and Demand) விதியினால் தீர்மானிக்கப்படுகிறது”. என்று கூறினால், நாம் மீண்டும் அவரிடம், “பரிமாற்றமும்(வரத்தும்) தேவையும் எந்த விதியினால் தீர்மானிக்கப்படுகின்றன” என்று கேட்டால் திணரிப்போவார். ஏனெனில், உழைப்பின் பரிமாற்றத்திற்கும் தேவைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகின்றன. அத்துடன், உழைப்பின் சந்தை விலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. உழைப்புக்கான தேவை, பரிமாற்றத்தைவிட அதிகரிக்குமெனில், கூலி உயர்கிறது. உழைப்பின் பரிமாற்றம், தேவையைக் காட்டிலும் அதிகரிக்குமெனில், கூலி குறைகிறது. என்றாலும், அத்தகைய சூழ்நிலைகளில் தேவை-பரிமாற்றம் ஆகியவற்றின் உண்மை நிலவரத்தை அறிய ஒரு வேலை நிறுத்தத்தின்போதோ அல்லது வேறு ஏதேனுமொரு, பேரிடர் போன்ற அசாதாரண வழிமுறையிலோ பரிசோதிக்க வேண்டியது அவசியமாகலாம்.ஆனால், நீங்கள் பரிவர்த்தனையையும் தேவையையும் கூலியை ஒழுங்குபடுத்தும் விதியாக ஏற்றுக்கொண்டால் கூலி உயர்வினை எதிர்த்து கூக்குரல் இடுவது எந்த அளவுக்கு பயனற்றதோ,  அந்த அளவிற்கு சிறுபிள்ளைத்தனம் ஆகும். ஏனெனில், நீங்கள் முன்வைக்கும் அந்த உச்சவிதிப்படியே பார்த்தாலும் அவ்வப்போது கூலி குறைவதைப் போலவே அவ்வப்போது கூலி உயர்வதும் அந்த அளவுக்கு அவசியமும் நியாயமும் ஆகும். 

மாறாக, பரிவர்த்தனை-தேவை விகிதத்தை கூலியை ஒழுங்குபடுத்தும் விதியாக ஏற்றுக்கொள்ளவில்லையானால், அந்த முதல் கேள்வியையேதான் திரும்ப கேட்கவேண்டியது இருக்கும்: ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கூலியாகக் கொடுக்கப்படுவது ஏன்? 

இந்த விவகாரத்தை இன்னும் விரிவாகப் பரிசீலிப்போம்:

உழைப்பின் மதிப்பு அல்லது வேறு எந்தவொரு சரக்கின் மதிப்பும் பரிவர்த்தனை-தேவை இவற்றால்தான் முடிவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று நீங்கள் கருதினால், அது முற்றிலும் தவறானது. பரிமாற்றமும் தேவையும் சந்தை விலைகளின் தற்காலிகமான ஊசலாட்டங்களை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. பரிவர்த்தனையும்-தேவையும் ஒரு சரக்கின் சந்தைவிலை அதன் மதிப்பைக் காட்டிலும் உயர்வது அல்லது குறைவது ஏன் என்பதை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால், அந்த மதிப்பையே எவ்வளவு என அவை ஒருபோதும் விளக்க முடியாது. பரிமாற்றமும்-தேவையும் ஒன்றையொன்று சமன் செய்துகொள்கின்றன அல்லது பொருளாதார அறிஞர்கள் கூறுவதுபோல் “ஒன்றையொன்று சரிகட்டிக்கொள்கின்றன” என வைத்துக்கொள்வோம். அவ்வாறு, இந்த நேரெதிரான சக்திகள் சமமான அந்தக் கணமே, அவை ஒன்றையொன்று முடக்கிப் போடுவதும் ஒரு திசையிலோ, அல்லது மறுதிசையிலோ செயல்படாமல் போவதும் ஏன்?

பரிமாற்ற(வழங்கல்)மும் தேவையும் ஒன்றையொன்று சமன் செய்துகொண்டு, அதனால், அவை செயலற்றுப்போகும் அந்தத் தருணத்தில், ஒரு சரக்கின் சந்தைவிலை அச்சரக்கின் உண்மையான மதிப்போடு அதன் திட்டவட்ட விலையோடு பொருந்திப்போகிறது. அம்மதிப்பைச் சுற்றியே சந்தைவிலைகள் ஊசலாடுகின்றன. எனவே, அந்த மதிப்பின் இயல்பைப்பற்றிய ஆய்வில் சந்தைவிலைகள் மீது பரிமாற்றமும் தேவையும் ஏற்படுத்தும் தற்காலிக விளைவுகளைப்பற்றி நாம் விவாதிக்க ஏதுமில்லை. கூலிக்கும்  மற்றெல்லாச் சரக்குகளின் விலைகளுக்கும் இது பொருந்தும்.

¶தோழர்களே! மார்க்ஸ் அவர்களின் அறிவுக் கூர்மையும் தர்க்க ஞானமுமே  மார்க்சியத்தையும் அதன் தர்க்க நெறியையும் நமக்கு வழங்குகிறது.

மார்க்சியம், நம்மைப் பொதுவானதிலிருந்து குறிப்பானதை நோக்கியும்; விபரங்களிலிருந்து உண்மையை நோக்கியும் பயணிக்கச் சொல்கிறது!)

ஆக்கம்: பால்ராஜ் ராதாகிருஷ்ணன்,       18:02:2021.


மார்க்சியம் பயில்வோம்

               மார்க்சிய படிப்பு வட்டம்

                        செங்கொடி மையம்

                              வகுப்பு எண்: 18

                               நாள்: 06:02:2021 

                  அரசியல் பொருளாதாரம்

                      கூலி – விலை – லாபம்

அறிமுகம்:

மார்க்சியம் “பொருளாதாரத்தை,” வெருமனே “வர்த்தகம் மற்றும் வாணிபமாகவோ” அல்லது “மூலதன பரிமாற்றமாகவோ” ஆன முதலாளித்துவ பாணியீயிலான தனித்துவிடப்பட்ட துறையாகப் பார்ப்பதில்லை. பொருளாதாரத்தை, “அரசியல் பொருளாதாரம்” என்றே மார்க்சியம் சொல்கிறது. பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய மூன்றையும் அது தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக, இவை மூனறும் ஒன்றை ஒன்று சார்ந்தும் இயங்கியும் மாறியும் வளர்ந்தும் வருகின்றன என்ற இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பார்வையை மார்க்சியம் முன்வைக்கிறது. 

முதலாளித்துவ உற்பத்தி முறையில், உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவாக, வர்க்கப் பகைமையும் வர்க்கப் போராட்டமும் வர்க்க விடுதலை எனும் புரட்சியும் குறித்த தவிர்க்க இயலாத பகுப்பாய்வு அரசியல் பொருளாதாரத்தின் ஊடாக இன்றியமையாதது ஆகிறது.

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, மூலதனம் நூலுக்கு முன்பாக மார்க்ஸ் அவர்கள் தொகுத்த குறிப்புகளால் ஆன 'கிராண்டைஸ்-Grandisse,’ மார்க்ஸின் மூலதனம், ஏங்கல்ஸின் 'அரசியல் பொருளாதார விமர்சன வரைவு( An Outline of the Critique of Political Economy)’ முதலிய ஆக்கங்கள் “மார்க்சீய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளாக உள்ளன என்பதோடு அதன் தோற்றம் 1840-களைச் சார்கிறது.

மார்க்சிய அணுகுமுறையிலான அரசியல் பொருளாதார பகுப்பாய்வும் சமூக வரலாற்று ஆய்வுகளும் வர்க்கப் போராட்டத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் முன் வைப்பதால், “மூலதனம்”, “உழைப்பு” ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

“மூலதனம்” என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளான, “உற்பத்திச் சாதனங்களை( Means of Production)” சொந்த உடைமையாகக் கொள்வதைக் குறிக்கிறது. “உழைப்பு” என்பது, “சுதந்திரமான கூலித் தொழிலாளர்களை( Free Wage Labourer), “பாட்டாளிகளை”க் குறிக்கிது.

ஆம், முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளி ஒருவகையில் சுதந்திரமானவரே; உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அவருக்குக் கிடையாது என்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம், அடிமை முறைகளிலும் நிலவுடைமைச் சமூகத்திலும் உள்ளதுபோல் இல்லாமல், உழைப்பைச் செலுத்துபவர்முதலாளிக்கு அடிமையில்லை. அவர் தனது உழைப்புச் சக்தியை யாரிடமும்  விற்றுக்கொள்ளும் சுதந்திரம் படைத்தவர். இந்தச் சுதந்திரம் முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகளில் கிடையாது. இஇதனால், தொழிற்சங்கம் அமைத்துத் தனது ஒட்டுமொத்த உரிமைகளை முன்னெடுக்கும் சாத்தியத்தை தொழிலாளி பெறுகிறார். இவ்வாறாக, மார்க்சியம், பொருளாதாரத்தை அரசியல் அதிகாரமாக வளர்த்தெடுத்து சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறது.

             கூலி-விலை-லாபம்

                                    - கார்ல் மார்க்ஸ்

முகப்பு:

1865-ல் முதலாம் அகிலத்தில் மார்க்ஸ் அவர்கள் ஆற்றிய உரையை அவரது மகள் எலினார் மார்க்ஸ் அவெலிங் 1898-ல் மதிப்பு-விலை-லாபம் எனும் தலைப்பில் தனிப் பிரசுரமாக வெளியிட்டார். பின்னர் கிடைத்த சில பகுதிகளும் முகவுரையும் தொகுக்கப்பட்டு அனைவராலும் பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைப்பான கூலி-விலை-லாபம் என்ற பெயரில் திரு. எட்வர்ட் அவெலிங் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்திமுறையின் கூலி, உபரி மதிப்பு, சரக்குகளின் விலை, லாபம் ஆயவற்றைத் தோழர் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் விரிவாக ஆய்வு செய்கிறார். அதே வேளையில் சாதாரண தொழிலாளர்களும் எளிய உதாரணங்கள் மூலமாக புரிந்துகொள்ளுமாறு இந்நூல் அமைந்துள்ளது. ஒரு வகையில், இந்நூல் மூலதனம் முதல் தொகுதியின் சாரமான சுருக்கம் எனலாம்.

மேலும், அகிலத்தின் பொதுக்குழு உறுப்பினரான திரு. ஜான் வெஸ்டனின் கருத்தான: கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வினால் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, தொழிற்சங்கங்களால் தீங்கான விளைவே ஏற்படுகின்றன என்பவற்றிற்கு பதிலாகவும் அது தவறான வாதம் என்றும் மார்க்ஸ் அவர்கள் வலியுறுத்துவதே அவரது உரையாகிறது. இது இரண்டு நாள் சொற்பொழிவாகும்.

மார்க்ஸ் அவர்களின் முன் குறிப்பு.....சொற்பொழிவிற்குள் நுழைவதற்கு முன்வைப்பாக.........

1) ஐரோப்பா கண்டம் முழுவதும் கூலி உயர்வுக்கான வசீகர முழக்கங்களும் வேலை நிறுத்தங்களும் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சூழலில் சர்வதேச சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்போர், இந்த தலையாய பிரச்சினையில் ஐயம்திரிபறவும் உளச்சான்றாகவும் கருத்து கொண்டிருக்க வேண்டும்.

2) திருவாளர் வெஸ்டன், தொழிலாளர்களின் நலனுக்காகவே என்ற நினைப்பில் தன் கருத்தை முன் வைக்கிறார். இந்தக் கருத்துக்கள் தொழிலாளர் மத்தியில் சிறிதும் செல்வாக்கில்லாதவை என்று தெரிந்தும் முன்வைக்கிறார். இந்த மனத்துணிவைப் போற்றுவதோடு, பூசி மெழுகாத எனது அறிக்கை மூலமாக மெழுகாத எனது ஆய்வின் சரியானவற்றை ஏற்பதோடு, அவரது கருத்துக்களின் தற்போதைய வடிவில் கொள்கை ரீதியாக தவறானவை என்றும் நடைமுறை ரீதியாக ஆபத்தானவை என்பதை எனது உரையின் இறுதியில் அவர் அறிந்துகொள்வார்.

சொற்பொழிவு:


 தலைப்பு:1) உற்பத்தியும் கூலியும்


வெஸ்டன்: 1) தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தமும் நிலையான ஒன்று; மாறாத அளவு மற்றும் மாறாத பரிமாணம்.

2) மெய்யான கூலியின் அளவு, அதாவது, அதைக்கொண்டு வாங்க முடிகிற சரக்கின் அளவால் கணக்கிடப்படும் கூலியின் அளவு, மாறாப் பரிமாணம் கொண்டதொரு தொகையாகும்.

முதல் கருத்து, சந்தேகமின்றி தவறானது. காரணம்; அ) ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியின் திரட்சியும் அவற்றின் மதிப்பும் அதிகரித்து வருவது கண்கூடு( நாட்டின் ஒட்டுமொத்த உற்த்தியான GDP அதிகரித்து வருவதை நாம் அறிவோம்)

 ஆ) அதிகரித்துவரும் சந்தை சுழற்சிக்கு தேவையான பணத்தின் அளவும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது( ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வரவு-செலவு திட்டத்தின் மதிப்பீடுகளே நமக்கு சான்று).

வெவ்வேறு ஆண்டுகளின் முடிவில் உற்பத்தியின் அளவை ஒன்றோடொன்று ஒப்பிட்டாலும் ; ஆண்டின் ஒவ்வொரு சராசரி உற்பத்தி நாட்களுக்கான உற்பத்தி அளவை ஒப்பிட்டாலும் அது அதிகரித்துக்கொண்டே இருக்கும். அது மாறிலி அல்ல, மாறும் பரிமாணமே.

உற்பத்தி அளவின் மாற்றங்களுக்கான காரணங்கள் பின்வருவனவே. அவை:

1) மக்கள் தொகை

2) மூலதனத் திரட்டல்

3) உழைப்பின் உற்பத்தித் திறன்.

இதனால், கூலி வீதத்திலும் மாற்றம் ஏற்படும்.

இதனால், உற்பத்தி நிலைமைகளில் பின் விளைவுகள் மாறலாம் – எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கூலி உயர்வு தன்னளவில் உற்பத்தியின் அளவை உடனடியாக மாற்றிவிடாது.

.நிகழ்காலத்தின் நிலைமைகளில் இருந்தே, இந்தக் கூலி வீத உயர்வு தொடங்கும். தேசிய உற்பத்தி அளவு நிலையாக இல்லாமல் கூலி உயர்வுக்கு முன்னதாக, மாறக்கூடியதாக இருந்தால் கூலி உயர்வுக்குப் பின்னும் அது மாறும். 

ஒப்புக்காக, தேசிய உற்பத்தியின் மொத்த அளவு மாறவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அதன் உறுப்புகளான கூலியும் லாபமும் மாறக்கூடியவையே. எவ்வாறெனில், மாறாத உற்பத்திக்குள் கூலி+லாபத்தின் கூட்டுத் தொகை ₹100 எனக் கொண்டால், கூலி ₹60 ஆகவும் லாபம் ₹40 ஆகவும் கொள்ளலாம். பிறிதொரு நிலைமையில் கூலி ₹40 ஆகவும் லாபம் ₹60 ஆகவும் மாறுவதை உற்பத்தியின் வரம்பு தடுக்காது. வெஸ்டன் இதை அறிந்தாலும் அடித்துக் கூறுவதன் மூலமே கூலியின் அளவு நிலையாது என நிரூபிக்க முயல்கிறார்.

வாதத்திற்காக, அவரது கூற்றை  ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில், தொழிலாளர் தனக்கான சிறிய அளவிலேனும் கூலி உயவுக்காகப் போராடி அதைப் பெறுவதும் இதைப் போலவே முதலாளியும் தற்காலிக கூலிவெட்டைத் திணிப்பதும் சாத்தியமாக இருக்கிறது. அதோடு கூடவே, கூலி அளவு நிலையாது எனக்கொள்ளும்போது கூலி வெட்டும் தொடர்ந்து எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை வெஸ்டன் மறுக்கவில்லை. அதே வேளையில், முதலாளிகள் தொடர்ந்து கூலி வெட்டைத் திணிக்கவே முயல்கிறார்கள் என்பதை வெஸ்டனும் அறிவார். எனவே, கூலி மாறாக் கோட்பாட்டின் படியும் கூலி வெட்டும் எதிர்வினையேற்படுத்தி தன்னை சமன்படுத்திக்கொள்ளவே செய்யும். அவ்வாறாகவே கூலி வெட்டிற்கு எதிரான தொழிலாளர் நடவடிக்கை சரியானதே. ஆகவே, கூலி உயர்வைப் போராடிப் பெறுவதில் தொழிலாளர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள். ஏனெனில், கூலிவெட்டுக்கு எதிரான ஒவ்வோர் எதிர்வினையும் கூலி உயர்வுக்கான நடவடிக்கையே ஆகும். வெஸ்டனின் கோட்பாட்டின் படியுங்கூட தொழிலாளர் ஒற்றுமையும் போராட்டமும் நியாயமானதே.

எனவே, இந்த முடிவை அவர் மறுத்தால், இதற்கு அடிப்படையான அவரது கருதுகோளான கூலி நிலைத்த பரிமாணம் கொண்டதென்பதைக் கைவிடவேண்டும்.

அல்லது, மறுபுறத்தில் அவர் கூற்றுப்படி கூலியானது உயரமுடியாது, உயரக் கூடாது என்றபோதும் மூலதனம் கூலியைக் குறைக்க விரும்பும் போதெல்லாம் அது குறைய முடியும், குறைய வேண்டுமென்று சொல்லவேண்டும்.

இறைச்சிக்கு பதிலாக கிழங்கையும் கோதுமைக்குப் பதிலாக ஓட்ஸையும் கொடுப்பதையே முதலாளி மகிழ்ச்சியாக வரவேற்கிறார். எனவே, முதலாளியின் விருப்பத்தை அரசியல் பொருளாதாரத்தின் விதியாக வெஸ்டன் ஏற்கவேண்டும்; பணிந்துபோக வேண்டும்.

மேலும், கூலி வீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுவது கண்கூடு. அப்படியானால், அதிக கூலிதரும் அமெரிக்க முதலாளியின் விருப்பத்திற்கும் குறைந்த கூலி தரும் இங்ககிலாந்து முதலாளியின் விருப்பத்திற்குமான வேறுபாட்டை வெஸ்டன் விளக்க வேண்டும். இந்த முறையினால், பொருளாதார ஆய்வு மட்டுமின்றி எல்லா ஆய்வுகளும் நிச்சயமாக மிகமிக எளிதாகிவிடும்.

இதன் பிறகும் ஏன் வெவ்வேறு நாடுகளின் முதலாளிகள் வெவ்வேறு விருப்பம் கொண்டுள்ளார்களென நாம் கேட்போம். அப்போது, அவர்கள் விருப்பம் என்பதன் பொருளெல்லையைத் தாண்டி செல்லவேண்டி வரும்.

கடவுள் ஃபிரான்ஸில் ஒன்றை விரும்புகிறார் இங்கிலாந்தில் வேறொன்றை விரும்புகிறார் என பாதிரியா ஒருவர் சொல்லலாம். கடவுளின் விருப்பத்தில் ஏன் இந்த இரட்டை தன்மையென்று நாம் மீண்டும் கேட்போம். அதற்கு, பாதிரியார் வெட்கமின்றி, கடவுள் ஃபிரான்சில் ஒரு விருப்பமும் இங்கிலாந்தில் வேறொரு விருப்பமும் கொண்டிருப்பதையுமே விரும்புகிறார் என விளக்கலாம். ஆனால், பகுத்தறிவாளர் வெஸ்டன் இதுபோன்ற வாதத்தை முன்வைக்க மாட்டாரென நம்புவோம்.

முதலாளியின் விருப்பம் நிச்சயமாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். நாம் செய்ய வேண்டியது என்னவெனில், முதலாளியின் விருப்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதல்ல; அவரின் அதிகாரம் பற்றியும் அந்த அதிகாரத்தின் வரம்புகள் பற்றியும் அந்த வரம்புகளின் தன்மை பற்றியும் கேள்வி எழுப்புவதே ஆகும்.

தலைப்பு:  2)உற்பத்தி, கூலி, லாபம்


வெஸ்டன் அவர்கள் சொற்பொழிவின் சுருக்கம்: “தொழிலாளி வர்க்கம் போராடி, முதலாளி வர்க்கத்தை ₹40-ற்குப் பதிலாக, ₹50-ஐ பணக் கூலியாகக் கொடுக்கச் செய்தால், முதலாளியோ அதற்கு ஈடாக, ₹50 மதிப்பிற்கான சரக்கிற்குப் பதிலாக, ₹40 மதிப்புள்ள சரக்கையே தருவார். அதாவது, ₹40 கொடுத்து வாங்கிய அதே சரக்கின் அளவிற்குப் பதிலாக, தொழிலாளி வர்க்கம் ₹50-ஐக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், கூலியின் அளவு நிலையானது.”

அப்படியானால், நாம் கேட்பது, எதற்காக, கூலியின் பணமதிப்பு ₹40-ஆக நிர்ணயிக்கப்பட்டது? அது, ஏன் ₹30-ஆகவோ ₹20-ஆகவோ நிர்ணயிக்கப் படவில்லை?

கூலியின் வரம்பானது முதலாளியின் விருப்பத்தையோ, அதேபோல் தொழிலாளியின் விருப்பத்தையோ சாராமல், ஒரு பொருளாதார விதியினால் முடிவு செய்யப்படுகிறதெனில், அந்த விதியை எடுத்துக் கூறி அதனை நிரூபித்திருக்க வேண்டும்.

(தோழர் மார்க்ஸ் அவர்கள், இங்கு நிறுவ விரும்புவதை வாசிக்கும் நாம் தெளிவாக, புரிந்துகொள்ள வேண்டும். அது,

1) கூலியின் மாறா நியதிக்கு காரணம், கூலி வீதம் உயர்ந்தாலும் அதன் மதிப்பு மாறா வண்ணம் முதலாளி தனது உற்பத்தியின் விற்பனை விலையைக் கூட்டி விடுகிறார் என்பது வெஸ்டனின் வாதம்.

2) திரு வெஸ்டனின் பகுத்தறிவுக் கொள்கை முதலாளியின் விருப்பத்தின் அடிப்படையில் கூலி வீதம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்காது என்பதால் அவர் பொருளாதார விதிகளின் அடிப்படையில் அவர்தன் கருத்தை விளக்கியிருக்க வேண்டும்.)

குறிப்பிட்ட எந்தவொரு தருணத்திலும் உண்மையில் வழங்கப்பட்ட கூலித் தொகை எப்போதுமே துல்லியமாக, அவசியம் வழங்கப்பட்டே ஆகவேண்டிய கூலித் தொகைக்குச் சமமாய் இருந்துள்ளது, அதிலிருந்து விளகிச் செல்லவில்லை எனவும் நிரூபித்திருக்க வேண்டும்.

கூலித் தொகையின் குறிப்பிட்ட வரம்பு வெறுமனே, முதலாளியின் விருப்பம் அல்லது அவரது பேராசையின் வரம்புகளைச் சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறதெனில், அது தற்செயலான வரம்பாகும்; அதில் அவசியமானதென்று ஏதுமில்லை. அவ்வரம்பு, முதலாளியின் விருப்பத்திற்கோ அல்லது விருப்பத்திற்கு எதிராகவோ மாற்றப்படலாம்.

ஒரு கிண்ணத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் சாப்பிடுவதற்கான சூப் குறிப்பிட்ட அளவு உள்ளது. அவர்கள் சாப்பிடும் கரண்டியின் உருவ அளவைப் பெரிதாக்குவதன் மூலம் சூப்பின் அளவு கூடிவிடாது – இது வெஸ்டன் தன்னுடைய கோட்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்தது.

இது சற்றே சிறுபிள்ளைத் தனமானது. ரோமானிய மேட்டுக் குடியினருக்கு எதிராக ரோமானிய மக்கள் போராடியபோது அவர்களைப் பார்த்து மேட்டுக் குடியினரான அக்ரிப்பா என்பவர் “மேட்டுக்குடியாகிய வயிறுதான், சாமானிய மக்களாகிய உடலுறுப்புகளை ஊட்டி வளர்க்கிறது” என்றார். ஆனால், ஒரு மனிதனின் வயிற்றை நிரப்புவதன் மூலம் வேறொரு மனிதனின் உறுப்புகளை நீங்கள் ஊட்டி வளர்க்கிறீர்கள் என்பதை அக்ரிப்பா விளக்கத் தவறிவிட்டார். (மார்க்ஸ் இங்கு, முதலாளித்துவ வளர்ச்சியையும் மறு உற்பத்தியையும் குறிப்பதாகவும் முதலாளித்துவம் தனக்கெதிராக தானே தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குவதையும் அர்த்தப்படுத்தலாம்).

தொழிலாளர் உண்ணும் கிண்ணம் தேசிய உழைப்பின் ஒட்டுமொத்த உற்பத்தியால் நிரம்பியிருக்கிறது. அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதை தடுப்பது எது? கிண்ணம் சிறியதாக இருப்பதோ, அதிலுள்ள உணவின் பற்றாக்குறையோ அல்ல. அவர்களின் கரண்டி சிறிதாக இருப்பதுதான் என்பதைத் தன் பங்கிற்கு திருவாளர் வெஸ்டனும் மறந்துவிட்டார்.

₹40-ற்கான பொருளை ₹50-ற்கு கொடுக்க எந்த சூழ்ச்சி முதலாளிக்கு கைகொடுக்கிறது? அவர் விற்கும் சரக்கின் விலையை உயர்த்துவதன் மூலம் இது சாத்தியம். ஆனாலும், சரக்குகளின் விலை உயர்வோ, சரக்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களோ, ஏன், சரக்குகளின் விலையோகூட முதலாளியின் வெறும் விருப்பத்தைச் சார்ந்துள்ளதா? அல்லது, இதற்கு மாறாக, அவ்விருப்பத்தை நிறைவேற்றுவதற்குக் குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் தேவைப்படுகின்றனவா? அவ்வாறு இல்லையெனில், (சரக்குகளின்) சந்தை விலையில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமும் இடையறாத ஊசலாட்டங்களும் தீர்க்கமுடியாத புதிராகிவிடும்.

உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, ஈடுபடுத்தப்பட்ட மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் அளவிலுமோ, உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கணக்கிடும் பணத்தின் மதிப்பிலோ எவ்வித மாற்றமும் இல்லை.(இந்நிலைமைகள், வெஸ்டனின் கருதுகோலின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது). ஆனால், கூலி வீதத்தில் மட்டும் மாற்றம் ஏற்படுவதாக நாம் வைத்துக்கொள்கிறோம். 

அப்படியெனில், அந்தக் கூலி உயர்வு, சரக்குகளின் விலையை எவ்வாறு பாதிக்கமுடியும்?

அந்தச் சரக்குகளுக்கானத் தேவைக்கும்(Demand) அச்சரக்குகளின் வரத்துக்கும்(Supply) இடையேயுள்ள உண்மையான விகிதப்பொருத்தத்தைப் பாதிப்பதால் மட்டுமே(விலையில் மாற்றம் நிகழும்).

ஒட்டுமொத்த நிகழ்வாகப் பார்த்தால், தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை 1)ஒட்டுமொத்த நிகழ்வாகப் பார்த்தால், தொழிலாளி வர்க்கம் தனது வருமானத்தை அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடுகிறது அல்லது செலவிட்டே ஆகவேண்டும். எனவே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வானது, அத்தியாவசியப் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். இதன் விளைவாக, அப்பொருட்ளின் சந்தை விலை அதிகரிக்கும். இந்த அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளிகள், கூலி உயர்வுக்கு ஆகும் கூடுதல் செலவினை அவர்களது சரக்குகளின் சந்தை விலையை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டுகிறார்கள்.

2)இன்னொரு பக்கத்தில், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யாத, ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்களது நிலையென்ன?

இவர்களின் எண்ணிக்கையும் குறைவானதல்ல. தேசிய உற்பத்தியில் 3-ல் 2 பங்கை மக்கள் தொகையில் 5-ல் 1 பங்கினர் நுகர்கின்றனர். (வேறொரு கணக்கின்படி, அதாவது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்தின்படி இது 7-ல் 1 பங்கு எனவும் ஆகிறது). இந்த விகிதங்களின்படி, தேசிய வருவாயை சரிகட்ட பெருமளவில் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் அல்லது இறக்குமதிக்காக மூலதனப் பரிவர்த்தனை செய்யவேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருட்களிலேயே, முதலாளிகளின் அடியாட்களுக்காகவும் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான குதிரை, பூனை இன்ன பிறவற்றிற்காகவும் வீணடிக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவு.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது இதுபோன்ற விரயங்கள் கட்டுக்குள் வருகின்றன என்பது நமது அனுபவமாகும்.

2(அ) பொதுவான கூலி உயர்வின் விலைவாக, லாப வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியை, ஆடம்பப்பொருள் உற்பத்தியாளர்களால் சரிகட்ட முடியாது.ஏனெனில், இப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்காது. எனவே, அவர்களது வருமானம் குறைந்துவிடும். இந்தக் குறைந்த வருமானத்தைக் கொண்டே, விலை அதிகரித்த அத்தியாவசியப் பொருளுக்கு முன்பைவிடக் கூடுதலாகச் செலவிட வேண்டும். இவ்வாறாக, ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும், விலை வீழ்ச்சி அடையும். குறிப்பாக, இந்தத் தொழிற்கிளைகளில், கூலியினால் ஏற்பட்ட நேர்விகிதத்தின் அடிப்படையிலும் கூடவே, பொதுவான கூலிவீத உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஆடம்பரப் பொருட்களின் விலை வீழ்ச்சி இவை அனைத்தின் ஒட்டுமொத்த அடிப்படையிலும் லாப வீதம் வீழ்ச்சியுறு..

3) தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனங்களுக்கான சராசரி லாபவிகித மாற்றம் பின்வரும் பொதுவான விளைவுகளை  எப்போதும் ஏற்படுத்துகின்றன. அவை:

i) மூலதனமும் உழைப்பும் குறைந்த ஆதாயம் தரும் துறைகளிலிருந்து அதிகம் ஆதாயம் தரும் துறைக்கு மாற்றப்படும். இந்த மாற்றம் எதுவரை நிகழுமென்றால், தொழிற்துறையின் ஒரு பிரிவில் அதிகரிக்கும் தேவையின் விகிதத்திற்கு ஏற்ப வரத்து அதிகரித்து, பிற தொழிள்பிரிவுகளில் தேவையின் குறைவிற்கு ஏற்ப வரத்து வீழ்ச்சி அடையும்வரை இந்த நிகழ்வு தொரும்.

இத்தகைய மாற்றம் காரணமாக, தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பொதுவான லாப விகிதம் மீண்டும் சமப்பட்டுவிடும்.

ii) பல்வேறு சரக்குகளுக்கான தேவைக்கும் வரத்துக்கும் இடையிலான விகிதத்தில் ஏற்பட்ட சாதாரண ஒரு மாற்றத்தில் தொடங்கியே, அனைத்து குழப்பங்களும் உருவானதால், காரணம் முடிவுற்றதும் விளைவும் முடிவுற்றுவிடும்.

iii) விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பிச் சமநிலை எய்தும்.

iv) கூலி உயர்வின் விளைவாக, லாபவீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது, சில தொழிற்பிரிவுகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல் தொழிற்துறை முழுமைக்கும் பொதுவானதாய் ஆகிவிடும்.

நமது அனுமானத்தின்படி, உழைப்பின் உற்பத்தித் திறனிலோ, உற்பத்தியின் ஒட்டுமொத்த அளவிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட அளவிலான மொத்த உற்பத்தியின் வடிவம் மாறியிருக்கும்.

அ) உற்பத்தியின் ஒரு பெரும் பகுதி அத்தியாவசியப் பொருட்களின் வடிவிலும் ஒரு சிறு பகுதி ஆடம்பரப் பொருட்களின் வடிவிலும் இருக்கும்.

ஆ) வேறுவகையில் சொல்வதானால், ஒரு சிறுபகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்பட்டு, அவற்றின் மூலவடிவிலேயே நுகரப்படும்.

இ) இன்னுமொரு வகையில் சொல்தெனில், உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதி வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களுக்குப் பதிலாக அத்தியாவசியப் பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்யப்படும்.

ஆகவே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு, சச்ந்தை விலைகளின் தற்காலிகக் குழப்பத்திற்குப் பிறகு, சரக்குகளின் விலைகளில் எவ்வித நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், லாப வீதத்தின் பொதுவான வீழ்ச்சியில்தான் போய் முடியும்.


மார்க்ஸ், தனது முந்தைய வாதத்தில், மொத்தத உபரிக் கூலியும் அவசியப் பொருட்களுக்காகவே செலவிடப்படும் என்ற அனுமாத்துடன் பேசினார் என்றால் அது, திரு. வெஸ்டன் அவர்களின் கருத்துக்கு சாதகமாக இருக்கட்டும் என்பதற்காகத்தான்.

உபரி கூலித் தொகை, இதற்குமுன் தொழிலாளர்களின் நுகர்வில் இடம்பெறாத பொருட்களுக்குச் செலவிடப்பட்டிருக்குமெனில், அவர்களின் வாங்கும் சக்தி உண்மையாகவே அதிகரித்துள்ளது என்பதே பொருள். எனினும், தொழிலாளர்களின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பானது அவர்களது கூலி உயர்வினால் மட்டுமே பெறப்பட்டதால், அது முதலாளியின் வாங்கும் சக்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குத் துல்லியமாகச் சம அளவில் இருக்க வேண்டும். எனவே, சரக்குகளின் ஒட்டுமொத்தத் தேவை அதிகரிக்காது.

ஆனால், அந்தத் தேவையில் அடங்கியுள்ள பகுதிக் கூறுகள் மாறியிருக்கும். அதாவது, ஒருபுறம் ஏற்படும் அதிகரித்த தேவையை, மறுபுறம் ஏற்படும் குறைந்துவிட்ட தேவை ஈடுகட்டும்.

இவ்வாறாக, ஒட்டுமொத்த தேவையானது நிலையானதாக இருக்கையில், சரக்குகளின் சந்தை விலையில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிட முடியாது.

எனவே, இரண்டில் எது சரியென்னும் குழப்பத்தில் நாம் வந்து நிற்கின்னறோம். ஒன்று, உபரியாகப் பெற்ற கூலி அனைத்து நுகர்வுப் பொருட்களுக்கும் சமமாகச் செலவிடப்படுகிறது என அனுமானிக்க வேண்டும்.

அப்படி இல்லையெனில், தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் ஏற்பட்ட விரிவடைந்த தேவை, முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஏற்பட்ட சுருங்கிய தேவையால் ஈடுகட்டப்பட வேண்டும்.

அல்லது, சில பொருட்களுக்காக மட்டும் உஉபரிக் கூலி செலவிடப்பட்டு, அவற்றின் சந்தை விலை  உயர்கின்றன எனக்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக, தொழிற்துறையின் சில கிளைகளில் ஏற்படும் லாபவீத அதிகரிப்பும் வேறு சில கிளைகளில், ஏற்படும் லாபவீத வீழ்ச்சியும் மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் பகிர்மாணத்தில் மாற்றம் உண்டாக்கும். தொழிற்துறையின், ஒரு பிரிவில் ஏற்படும் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, வரத்தை அதிகரித்து, பிற பிரிவுகளில் ஏற்படும் தேவையின் சுருக்கத்துக்கு ஏற்ப, வரத்தைக் குறைக்கும் வகையிலும் இம்மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு அனுமானத்தின்படி, சரக்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. மேற்றொன்றின்படி, சந்தை விலைகளின் சில ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகள் முந்தைய மட்டத்திற்குச் சரியும்.

இரண்டு அனுமானங்களின்படியுமே, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான மாற்றம்-உயர்வு, இறுதியாக, லாப வீதத்தின் வீழ்ச்சியில்தான் முடியும்.


திருவாளர் வெஸ்டன் அவர்கள் தன் பார்வையை விவசாய கூலி நிலவரம் பக்கமாகத் திருப்பும்போது, கற்பனையான 100 சதவீத உயர்வையும் அதனால், இங்கிலாந்தில் ஏற்படப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரிப்பு, இதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வின் அபாயகரமான விளைவுகளைப் பற்றியும் பேசுகிறார். உண்மையில், கூலி வீத உயர்வு என்பது அதன் பரிமாணத்தை சதவீதத்திற்குள் அடக்குவது என்பதுபற்றி நாம் விவாதிக்க ஏதுமில்லை. மேலும், மூலதனம், உழைப்பு இவற்றின் உறவுகள் ஒத்துப் போகின்ற, ஒப்பீட்டளவில் விவசாய உற்பத்தி குறைவாயுள்ள அமெரிக்காவில் சராசரி கூலியின் அளவு, இங்கிலாந்தைவிட இரண்டு மடங்கு அதிகம் எனும்போது, இங்கிலாந்திற்கு அபாயமணி அடிப்பது உண்மையான பிரச்சினையைத் திசை திருப்பத்தான்.

கூலி உயர்வின் பரிமாணம் என்பது ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் நிலவுகின்ற, சூழ்நிலைகளைச் சார்ந்தும் அவற்றிற்கு ஏற்பவுமே இருந்தாக வேண்டும். நாம் இங்கு ஆய்வு செய்யவேண்டியது, கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு, தொழிற்துறை மற்றும் விவசாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே.

திரு. வெஸ்னின் 100 சதவீத கூலி உயர்வு என்ற கற்பனையான கூற்றை புறந்தள்ளிவிட்டு, 1849 மற்றும் 1859-ற்கு இடையிலான மெய்யான கூலி உயர்வையும் அதன் விளைவுகளையும் ஆதாரத்துடன் காண்போம்.

1848-ல் நிறைவேற்றப்பட்ட 10 மணி நேர(உண்மையில் 10 ½ மணி நேர)ச் சட்டம் இங்கிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மாற்றமாகும். இது, இங்கிலாந்து நாடு, உலகச் சந்தையில் கோலோச்சுவதற்கான முன்னணி தொழிற்பிரிவுகளில் திடீர், கட்டாய கூலி உயர்வை ஏற்படுத்தியது. அன்றைய பொருளாதார அறிஞர்களான Dr. யூரியும் பேரா. சீனியரும் இந்தச் சட்டம் இங்கிலாந்து தொழிற்துறைக்கு சாவுமணி அடித்துவிடும் என்ற வகையில், திரு. வெஸ்டனைவிடக் கூடுதலாக, அன்று ஆதாரங்களோடு நிரூபித்ததோடு ஏனைய குட்டி முதலாளிகளும் அக்கருத்துக்களைப் பரப்பினர்.

இது, சாதாரண கூலி உயர்வு மட்டுமல்ல, ஈடுபடுத்தப்படும் உழைப்பின் அளவைக் குறைப்பதைத் தனது அடிப்படையாகக் கொண்டதெனவும் முதலாளி தன் லாபத்தைப் பெறுகின்ற கடைசி ஒரு மணி நேரம் என்பதால் மூலதனத் திரட்டல் குறைவும் விலைவாசி ஏற்றமும் சந்தைகள் இழப்பும் உற்பத்தி வீழ்ச்சியும் இவற்றின் பின் விளைவாக, கூலியின்மீது எதிர் வினையும் ஏற்பட்டு, முடிவாக, சர்வநாசம் நிகழும் என்றனர்.

1792-ல் ஃபிரான்சில் மாபெரும் ஃபிரென்ச் புரட்சியின்போது கொண்டுவரப்பட்ட உயர்ந்தபட்ச சட்டம்( Maximum Law)  எனும் அத்தியாவசியப் பொருட்களுக்கான திட்டவட்டமான உயர்ந்தபட்ச விலை வரம்புகளையும் திட்டவட்டமான கூலி வீதங்களையும் நீர்ணயித்த சட்டத்தின் விளைவுகளை விஞ்சிவிடும் என்றனர்.

ஒரு வகையில், அவர்கள் கூறியது சரிதான். வேலை நாளின் நேரம் குறைக்கப்பட்டபோது, ஆலைத் தொழிலாளர்களின் பணக்கூலி உயர்ந்து; ஆலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் அதிகரித்தது; அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விலைகள் தொடர்ந்து சரிந்தன; தொழிலாளர்களுடைய உழைப்பின் உற்பத்தித் திறனில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது; அவர்களுடைய சரக்குகளுக்கு இதுவரைக் கண்டிராத அளவுக்குச் சந்தைகள் விரிவடைந்து முன்னேற்றம் கண்டன.

பின்னாளில், 1860-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற விஞ்ஞான மேம்பாட்டுக் கழகக் கூட்டத்தில் பேசிய திரு. W. நியூமேன் என்பவர் தனது மற்றும் Dr. யூரி மற்றும் பேரா. சீனியர் ஆகியோரது கணிப்பு தவறென்றும் மக்களின் உள்ளுணர்வே வென்றது என்றும் ஒப்புக்கொண்டனர்.

வேலை நாளின் பொதுவான வரம்பெல்லையே தொழிலாளி வர்க்க விடுதலைக்கான முதல் தொடக்க நடவடிக்கை என 1816-லேயே தொழிலதிபரும் கற்பனாவாத சோசலிஸ்டுமான திரு. இராபர்ட் ஓவன் பிரகடனப்படுத்தினார். தனது தொழிற்சாலையில், 10 மணி நேர வேலை, நோய்க்கால காப்பீடு மற்றும் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவினார். பின்னாளில், இவை தவறானதாக ஆகவில்லை; முன்னுதாரணமாக ஆயின.

10 மணிச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் விளைவாக, கூலி உயர்வு ஏற்பட்ட அதே காலத்தில்தான் விவசாயக் கூலியிலும் பொது உயர்வு ஏற்பட்டது. சராசரியாக, கூலி வீதம் பொதுவாக உயர்ந்த போதும், சரிபாதி பேர் அவர்களது நிலைமையை அரவே மேம்படுத்திக் கொள்ளவில்லை. கால்வாசிப் பேர் கண்ணுக்குப் புலப்படாத மிகவும் சொற்ப அளவிற்கே மேம்பட்டிருப்பர். மீதமுள்ள கால்வாசிப் பேர் மட்டுமே உண்மையில் மேம்பாடு கண்டிருப்பர். இப்போதும், சராசரி வழியில் நின்று பார்த்தால், அவர்களின் கூலியின் மொத்தத் தொகை 20 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கும். அவர்களை வேலைக்கு வைக்கத் தேவையான, மொத்த மூலதனத்தையும் அவர்கள் உற்பத்தி செய்யும் சரக்குகளின் விலையையும் பொருத்தவரை, சராசரி கூலி உயர்வை அவர்கள் அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டால், எவ்வளவு இருந்திருக்குமோ துல்லியமாய் அவ்வாறே இருக்கும்.

இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் விவசாயத் தொழிலாளர்களின் அடிப்படைக் கூலியானது, வெவ்வேறு மாவட்டங்களில் மிகவும் வேறுபட்டதாக இருந்ததால், கூலி உயர்வும் மிகவும் சமமின்றியே பாதித்தது.

இறுதியாக, ரஷ்யப் போரின் விளைவாகப் புதிய விவசாயிகள் வசிப்பிட வரிகள் போடப்பட்டபோது, அதிலிருந்து தப்ப விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளை இடித்து அவர்களை நிர்கதி ஆக்கியதும் இந்த கூலியுயர்வு காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது.

மொத்தத்தில், மார்க்ஸ் அவர்கள் கூற விரும்புவது, 1849 முதல் 1859 வரையுள்ள காலத்தில் விவசாயக் கூலியின் உயர்வு சராசரி வீதத்தில் ஏறத்தாழ 40 சதவீதம் உயர்வு மட்டுமே ஏற்பட்டது.

நண்பர் வெஸ்டனின் கருத்துப்படி பார்த்தால், 1849 முதல் 1859 வரையிலான காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் கூலி உயர்வினால் மிகப் பெரிய அளவில் விவசாய விளைபொருட்களின் விலை அதிகரித்திருக்க வேண்டும். மாறாக, இங்கிலாந்தின் முதன்மையான விவசாய விளைபொருளான கோதுமையின் சராசரி விலை 1838 முதல் 1848 வரையிலான ஆண்டுகளில் குவார்ட்டர் சுமார் 3 பவுண்டிலிருந்து 1849 – 59 :வரையிலான ஆண்டுகளில் இது 2 பவுண்டு 10 ஷில்லிங்காக வீழ்ச்சி கண்டது. இது 16 சதவீதமாகும். அதே ஆண்டுகளில் 1859-ஐ 1849-வுடன் ஒப்பிட்டால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 73,949 பேர் குறைந்தனர்.

தானியச் சட்டங்கள் – பெரும் முதலாளிகளுக்காக, வெளிநாடுகளிலிருந்து தானிய இறக்குமதியைத் தடுப்பதற்காகப் போடப்பட்டவை – ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, 1838 - 48-டோடு 1849 - 59-ஐ ஒப்பிட்டால் இறக்குமதி இரண்டு மடங்காக. அதிகரித்தது. இந்த வெளிச்சந்தையின் பிரம்மாண்ட, தொடர் அதிகரிப்பு விலைகளை படுபயங்கர உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். தேவை என்பது வெளிநாடு சார்ந்தோ அல்லது உள்நாடு சார்ந்தோ எப்படி இருந்தாலும் விளைவு ஒன்றுதான். உண்மையில், விளைச்சல் பொய்த்துப்போன சில குறிப்பிட்ட காலத்தைத் தவிர, மற்றெப்போதும் விலை வீழ்ச்சியே நிகழ்ந்தது. அமெரிக்க ஆங்கிலேயர்கள் ரஷ்ய இறக்குமதியை எதிர்தபோது, அது அவர்களுக்கு எதிராக,  அமெரிக்காவினுள் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டது.

வெஸ்டனின் வாதத்தை, சாராம்ச ரீதியாக சுருக்கினால், “தேவையில் (Demand) ஏற்படும் ஒவ்வொரு அதிகரிப்பும் எப்போதுமே, ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அளவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. எனவே, அந்த அதிகரிப்பானது தேவைப்படும் பொருட்களின் வரத்தை (Supply) எப்போதுமே அதிகரிக்க முடியாது; அவற்றின் பண விலையை மட்டுமே உயர்த்த முடியும்”.

இப்போது, மிகப் பொதுவான பார்வை நமக்குக் காட்டுவது, “அதிகரித்த தேவை சில வேளைகளில் சரக்குகளின் சந்தை விலைகளைச் சற்றும் பாதிக்காமல் அப்படியே விட்டுவைக்கிறது. வேறு சில வேளைகளில், சந்தை விலைகளில் தற்காலிக உயர்வுக்கும் தொடர்ந்து வரத்து அதிகரிப்பிற்கும்  அதனைத் தொடர்ந்து, விலைகள் அவற்றின் தொடக்க நிலைக்குக் குறைந்திடவும் பெரும்பாலான வேளைகளில், தொடக்க நிலைக்கு கீழாக குறைந்திடவும் காரணமாகிறது.

தேவை அதிகரிப்பு, உபரிக் கூலியின் விளைவாக ஏற்பட்டதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பது பிரச்சினையின் நிலைமைகளை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை.

திருவாளர் வெஸ்டனின் கருத்து நிலையிலிருந்து பார்த்தால், கூலி உயர்வு போன்ற விதிவிலக்கான  சூழ்நிலைகளின்கீழ் ஏற்படும் நிகழ்வுப் போக்கை விளக்குவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் பொதுவான நிகழ்வுப் போக்கை விளக்குதும். எனவே, அவரின் வாதம், நாம் ஆய்வு செய்யும் கருப்பொருளுக்கு எந்த விதமான தனிச் சிறப்பான தொடர்பையும் கொண்டிருக்வில்லை.

தேவையின் அதிகரிப்பானது முடிவாக, சந்தை விலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, பொருட்களின் வரத்தை அதிகரிக்கிறது என்பதற்கான விதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில் வெஸ்டனுக்கு இருக்கும் தடுமாற்றத்தையே இது வெளிப்படுத்துகிறது.


ஆக்கம்:      பால்ராஜ்.இராதாகிருஷ்ணன்,           12:02:2021.