சனி, 6 மார்ச், 2021

மெய்ஞான தரிசனம்

                                        


     தரிசனம்  -  VISION - விழிப்புநிலை

தரிசனம் என்பது மானுடவியலின் சாரமும் அடிப்படையும் எனலாம். இந்த அடிப்படையில் இருந்துதான் மனிதன் தன் இருப்பையும் உலகம் மற்றும் சர்வவியாபகமான( எங்கும் நிறைந்துள்ள) அண்டத்தின் இருப்பைப் பற்றியும் அறிந்து, தெளிந்து இந்த உலகவாழ்க்கைப் பயணத்தை அறிவுபூர்வமாகத் தொடங்கித் தொடர்கிறான். இந்த விழிப்புணர்வே  (VISION)  மனிதனின் அறிவு வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியையும் அதற்கான செயல்களையும் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.

இந்திய தரிசனங்களின் வகைகளும் விபரங்களும்:  தரிசனங்கள் பொதுவாக, இரு வகைப்படுகின்றன. அவை: 1) அறிவுத் தரிசனம் (Knowledge Vision); 2) ஆத்ம தரிசனம் (Spiritual Vision) எனப்படுகின்றன.

அறிவுத் தரிசனத்தை நாம் மெய்யியல் மற்றும் மெய்ஞானம் என்கிறோம். இந்த மெய்ஞானமே தத்துவம் என்றும் உலகக் கண்ணோட்டம் ( Philosophy) என்றும் ஆகிறது. ஏனென்றால், நாம் வாழும் உலகின் (இயற்கையை, பிரபஞ்சத்தை) அதன் இருத்தலில் (இருப்பில்) இருந்து சகல விஷயங்களிலும் ரொம்ப ரொம்பப் பொதிந்திருக்கிற பொதுவாயுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவு கூறுவது என்பதாலேயே. இதைவிடக் குறைந்த அளவிலே பொதுத்தன்மை பெற்ற விஷயங்களையும் பிரச்சினைகளையும் பல விஞ்ஞானங்கள் ஆய்கின்றன. ஆகவே, அப்படிப்பட்ட பல விஞ்ஞானிகளின் விரிவான அம்சமே மெய்ஞானம்.

என்றைக்கும் ஒரே மாதிரியில்லாமல் மாறிக்கொண்டே இருக்கிற விஷயங்களையும் நிலைமைகளையும் பார்த்து,  அலசி, ஆராயும் ஒரு ஆய்வுமுறையும்- தத்துவத்தை நடைமுறையிலிருந்து என்றுமே பிரிக்காத ஆய்வுமுறை -தர்க்க சாத்திரத்தை வாழ்விலிருந்து என்றுமே பிரிக்காத ஒரு ஆய்வுமுறை- மனிதனுக்கு தேவைப்பபடுகிறது. அப்படியான ஆய்வின் அடிப்படையிலேயே மெய்ஞானங்கள் என்கிற தத்துவங்கள் தோன்றுகின்றன. இந்த ஆய்வுமுறையைத்தான் இயங்கியல் பொருள்முதல் அணுகுமுறை என்கிறோம். இதில் நமது இந்திய தத்துவ மரபானது பொருளை முதன்மையாகக் கொண்ட அறிவுத் தரிசனங்களே!

அந்த வகைபாடுகள்: 

                     1) நியாய (தர்க்க)த் தத்துவம்.காலம்:கி.மு.600

இதை நிறுவியவர் ஆதி புத்தர் எனப்படும் கௌதம புத்தர்.

                      2) வைசேசிகம் எனும் பட்டறிவுத் தத்ததுவம்.

இதன் ஆசிரியர் கணாதர். காலம்: கி.மு.400-500

                      3) சாங்கியம் எனும் சடவாதத் தத்துவம்.

இதை முக்குண(பிரகிருதி எனும் இயற்கை, புருடன் எனும் அறிவுப் பரிமாணம்- வளர்ச்சி, இயக்க ஆற்றல்) தத்ததுவம் என்றும் அறியலாம்.

இதன் ஆசிரியர் கபிலர்.

                               4) யோக தத்துவம் – உடலும் மனமும் இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல்.

இதன் ஆசிரியர் பதஞ்சலி.

                               5) மீமாம்ச தத்ததுவம் – வாழ்க்கை லட்சியங்களான அறம், பொருள், இன்பம், வீடு எனும் கர்மங்கள் பற்றிய சூத்திரங்கள்.

இதன் ஆசிரியர் ஜைமினி. 

இவைதான் இந்திய தத்துவ இயலின் 5 தரிசனங்கள்.


ஆத்ம தரிசனம் என்பதை நாம் ஆன்மீகவாதமாகக் கொள்ளலாமே அன்றி தத்துவமாக அல்ல. காரணம் மெய்யியலான தத்துவ ஞானத்திற்கு நாம் வரையறுத்துக் கூறியுள்ள ஆய்வுமுறைகளும் அடிப்படையும் இங்கு பின்பற்றப்படவில்லை.

தத்துவ இயலின் ஐந்தாம் மற்றும் இறுதிப் பிரிவான மீமாம்ச தத்துவத்தை (கி.மு. 200) இரண்டாகப் பிரித்து 

1) பூர்வ மீமாம்சம் (கர்மம்) என்றும்

2) உத்தர மீமாம்சம் (ஞானம்) என்றும் இரண்டு காண்டங்களாக்கி இந்த இரண்டாவது நீட்சியை 4 வேதங்களுக்கும் பொருள் கூறுவதாக ஆக்கினர்.

இந்தப் பிரிவினையைச் செய்தவர் மீமாம்ச சூத்திரங்களுக்கு உரை எழுதிய சபர சுவாமி (கி.மு. 57).


எனவே உத்தர மீமாம்சம் என்பது 4 வேதங்களுக்குப் பொருள் கூறுவதே. இதைத் தொகுத்தவர் வியாசர்.

நான்கு வேதங்களின் இறுதிப் பகுதியாக அமைந்த வேதாந்தங்கள், உபநிடதங்கள் எனப்படுபவைதான் உத்தர மீமாம்சம். ஆக, வேத, வேதாந்தங்களே ஆன்மீக வாதத்தை முன்வைக்கின்றன. ஆனால், இந்த வாதத்தை இயலாகவும் தத்துவஞான வரிசையின் சாயலாக ஆத்ம ஞானம் என்று அழைத்துக்கொள்ளும் வகையில் உத்தர மீமாம்சமாக இணைத்துக்கொண்டனர். இங்கிருந்தே தங்கள் வசதிக்காக பிரித்துக்கொள்ளுதலும் முடிந்துகொள்ளுதலுமான சூழ்ச்சிகள் தொடங்கிவிடுகின்றன.

அறிவுத் தரிசனங்கள் அனைத்துமே இயற்கையின், உலகின், அண்டத்தின், உயிர்களின் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் பொருளையும் இயக்கத்தையும் ஆற்றலையும் முன்வைத்தன. மறுமொழியில் சொல்வதானால் பொருளையும் அதன் உள்ளுரைத்த ஆற்றலினாலான இடையறாத இயக்கத்தையும் மாற்றத்தையும் முதன்மைபடுத்துபவையே தத்துவ மெய்யியல்கள் ( பொருள்-மெய், இயக்கம்-இயல்).

தத்துவங்கள், தம் போக்கில் தெளிந்த நீரோடையாகவே ஓடிக்கொண்டிருப்பவை. அவை, ஒருநாளும் உருண்டு திரண்டு, சடத்துவமான மதங்களாக ஆவதில்லை. அவை மேலும் மேலும் செழுமையடைந்து உயரிய வாழ்வுக்கான கோட்பாடுகளாகவே பரிணமிக்க முடியும்.

தத்துவ இயல்களைத் திருத்தி அவற்றோடு வேதாந்ங்களை (உபநிடதங்களை) முடிந்தே மதங்கள் உருவாக்கப்பட்டன. எனவேதான், இதுபோன்று உருவான பௌத்த, சமண, சாக்கிய மதங்களில் பொருளைத் தேட நவீன தத்துவ விவாதிகள் முயற்சிப்பதும் தரிசனங்களைப் பெறுவதும் நடக்கின்றன. அரசியல் தளத்தில் ஒரு மந்தநிலையை செயற்கையாக நிகழ்த்தும் சூழ்சிதான் இவை.

பொருளின், இயக்கத்தின், ஆற்றலின், மாற்றத்தின் எந்த சுவடுமே இல்லாத கருத்தாக்கங்கள்தான் வேத, வேதாந்த, உபநிடதங்கள். இவை, தனியுடைமையின் கருத்தாக்கங்களாக உருப்பெற்று, அதன் நீதி, நெறிகளாகவும் சட்டங்களாகவும் சடங்குகளாகவும் முகிழ்ந்து, ஆளும் வர்க்கத்தின் சடத்துவ கோட்பாடுகளாகவும் வழிபாடுகளாகவும் நிறுவன மயம் என்ற வகையில் ஆதிக்கமும் அதிகாரத்துவமும் மிக்க மதங்களாகவும் மனிதர்களைப் பிரித்தாளும் சாதிகளாகவும் பரிணமித்தன. சடத்துவத்தை, அது பிரம்மமோ, ஆன்மாவோ, மகாத்மாவோ, ஜீவாத்மாத்மாவோ, பரமாத்மாத்மாவோ எதுவாயினும் அதை தத்துவமென்றோ, மெய்யியலென்றோ, மெய்ஞானமென்றோ விளித்தலாகாது. அவை ஆத்மவாதமாக, மதவாதமாக இருந்துவிட்டு போகட்டும். காரண-காரியம் ஏதுமற்ற வெற்று நம்பிக்கைகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவற்றை (முடக்கு)வாதங்கள் என்பதுதான்.

                 பால்ராஜ் ராதாகிருஷ்ணன்,

                                                    12-12-2020.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக